சாயபு வீட்டு சரித்திரம் - 22


<><><><><><>

’என்’ எழுத்து இகழேல்


Posted: 10 Sep 2009 11:15 AM PDT


(உலவும் மனிதர்களின் உண்மை கதை)

"சின்னஞ்சிறிய வயதினிலே,
மின்னல் போல புன்னகைகள்!
கன்னல் சாறின் இனிமைபோல்,
எண்ணத்தூண்டும் பருவங்கள்!!"


காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. வேகமாக சுழல்கிறது. நல்லது நடக்க வேண்டிய நேரத்தில் தானாக நல்லது நடக்கிறது. கெட்டது நடக்க வேண்டிய நேரத்தில், கெட்டது சொல்லாமல் வருகிறது.

மர்ஜியா, ஆபிதா, பாஜிலா மூன்று பேரும் நல்ல விதமாகவே வளர்ந்தார்கள். தாய் இல்லாத குறை தெரியாமல், பாத்திமா ஒரு நல்ல தாயாக பிள்ளைகளை கண்ணுக்குள் போற்றி வளர்த்தார்.

எல்லாரும் ஓரளவுக்கு வளர்ந்து விட்டார்கள். சைதாவின் மகள் சுஹைனாவும், மர்ஜியாவும் ரொம்பவும் நெருக்கமான தோழிகள். இருவருக்கும் ஏகப்பட்ட வயது வித்தியாசம் இருந்தாலும், நல்ல நட்புக்கு வயது ஒரு தடையில்லையே!

மூவரும் குணத்தால், தங்க கட்டிகள் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும், மர்ஜியா எப்பவும், வாயில் சிரிப்பு தான் அவங்கம்மாவைப் போலவே... ஆப்பிக்கு எப்போதும் படிப்பு, படிப்பு தான்... பாஜி மட்டும் கொஞ்சம் யாரிடமும் சுலபத்தில் பழக மாட்டாள். ஆனால், பழகிவிட்டாள் உயிரையே கொடுப்பாள்.

சுஹைனா எப்போதும், மர்ஜிக்கா, மர்ஜிக்கா என்று மர்ஜியைத்தான் சுற்றி சுற்றி வருவாள். மர்ஜியும், 'சுஹைன்' என்று எப்போதும் பாசமாக கூப்பிடுவாள். இருவரின் வீடும் ரொம்பவும் தூரம் என்பதால், எப்பவாவது தான் பார்ப்பார்கள். ஒருவர் வீட்டுக்கு இன்னொருவர் வந்தால், போகவே மனம் வராது. சீக்கிரமே வர சொல்லி, அப்பா அழைத்தால், சுஹைனா அழ ஆரம்பித்து விடுவாள்.

அன்று அப்படித்தான், ஏப்ரல் முதல் நாளன்று சுஹைனா வீட்டுக்கு கடிதம் வந்திருந்தது, எல்லாரும் குடும்பத்தோடு வருவதாக. ஆவலாக மாலை வரை காத்திருந்தவளுக்கு அது ஏப்ரல் ஃபூல் என்று தெரியவர, அழுகவே ஆரம்பித்து, அடம் பிடித்து அப்பாவுடன், பெரிய புதூர் போய் விட்டாள்.

"மர்ஜிக்கா........"

"ஹை! சுஹைன்! வா...வா....எங்க சைதாக்கா வரலியா?"

"அம்மா வரல...நாந்தான் அடம் பிடிச்சு வந்தேன்...ஏன் நீங்க வரேனு சொல்லி, இப்படி ஏப்ரல் பூல் பண்ணி ஏமாத்திட்டீங்க...எனக்கு கோபம், போங்க உங்க கூட பேச மாட்டேன்!"

"என்ன சுஹைன்.....வா...வா... நாம நேம், அனிமல்ஸ் எல்லாம் விளையாடலாம்! பாரு, உனக்கு ஒன்னு வரைஞ்சி வெச்சிருக்கேன்"

அவ்வளவு தான் கோபமெல்லாம்...எங்கே போனதென்றே தெரியவில்லை!

பாத்திமாவை சுஹைனா தாதிமா என்று தான் கூப்பிடுவாள்.

"தாதிமா...அன்னிக்கு எங்க வீட்டுக்கு வந்திட்டு, ஏன் நான் ஸ்கூல்லயிருந்து வர்ரக்குள்ள போயிட்டீங்க?"

"நான் வாங்கிட்டு வந்த பொம்ம பிஸ்கட் சாப்டியா கண்ணு?"

"ஆப்பிக்கா...எனக்கு தலை சீவி விடறீங்களா?"

எல்லாரும் சேர்ந்திட்டா அந்த சூழ்நிலையே கலகலப்பா ஆயிரும்!

பல்லாங்குழி விளையாடினார்கள், மர்ஜி பஞ்சு பொம்மை செய்து தந்தாள், கேரம் போர்டு, செஸ், என நேரம் போவதே தெரியாது!

ஆப்பி, பாசிப்பயறு அல்வா செய்து தந்தாள். பாஜி, கோட்டோவியமாக ஒரு யானையை அழகாக வரைந்து தந்தாள்.

மர்ஜியா தான் எழுதிய கவிதைகளை எல்லாம் எடுத்து தர, சுஹைனா அதை ஒவ்வொன்றாக ஆர்வமாக வாசித்தாள்.

மர்ஜியாவும் ஆப்பியும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்கள்...சுஹைனா, நான்காம் வகுப்பு...ஆனாலும் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து விட்டாள் சமவயது போலத்தான் பழகுவார்கள். சுஹைனாவுடைய வயதுக்கேற்றபடி மர்ஜி இறங்கி வருவாள். மர்ஜி அப்படியே அவங்கம்மா மாதிரியே குணம்...எப்பவும் சிரித்து கொண்டே!

அடுத்த நாள் சுஹைனா கிளம்பி போனபின் வெறிச் சென்றானது. கொஞ்சம் நேரத்தில் தந்தை தஸ்தகீர் வந்தார்.

தஸ்தகீர் அதிகம் வராமலே தானிருந்தார்...உணவு, உறக்கம் எல்லாம் தாய் வீட்டில்... ஆனால், மர்ஜியாவும் ஆப்பியும் வளர்ந்து விவரம் தெரிந்தபிறகு, இருவரும் போய், தன் தந்தையிடம் சண்டை போட்டு, இப்போது அவ்வப்போது வந்து போகிறார்.

பிள்ளைகளின் படிப்புக்கான செலவும் தஸ்தகீர் கொஞ்சம் செய்ய, பணம் கொடுக்க அன்றும் வந்திருந்தார். பாசம் என்று பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும், கடமைக்கு ஏதோ செய்தார்.

"மர்ஜியா, ஆபிதா, ரெண்டு பேரும் நல்லா பரிச்சை எழுதி இருக்கீங்களா? நல்ல மார்க் எடுத்தா....நான் உங்களை காலேஜில் சேர்த்து படிக்க வைக்கிறேன்...பொறுப்பா படிக்கணும்!"

"நல்லா எழுதி இருக்கோம்பா...கண்டிப்பா நல்ல மார்க் வாங்குவோம்..."

பரிச்சை ரிசல்ட் வந்தது! இருவரும் நல்ல மதிப்பெண்...ஆப்பி, அந்த கவர்ன்மெண்ட் பள்ளியிலேயே முதல் மாணவியாக தேறியிருந்தாள். பாத்திமாவுக்கு ரொம்பவும் சந்தோஷம்.

பாத்திமா, கச்சாமாவின் வாழ்க்கையை போல இவர்கள் வாழ்வு ஆகிவிடக்கூடாது என்பதில் ரொம்பவும் கவனமாக இருந்தாள். அதனால், படிக்க வைத்து வேலை வாங்கி ஒரு நல்ல நிலமைக்கு வந்த பின் தான் திருமணம் செய்ய வேண்டும்...சிறு வயதில் செய்ய கூடாது என்று தீர்மானமாக இருந்தாள்......

ரம்ஜான் அன்று மர்ஜி வீட்டுக்கு வந்த சுஹைனாவுக்கு, பாஸானதுக்காக, ஆளுக்கொரு ஃபைவ் ஸ்டார் சாக்லேட் கொடுத்தார்கள்......

"மர்ஜிக்கா, நாளைக்கு நாம எல்லாரும் பார்க்குக்கு போகலாமா?"

"போலாம் சுஹைன்.....நீ உங்க அம்மா கூட வந்திரு...நாங்க இப்படியே வந்திர்ரோம்......"

எல்லாரும் ஒருவருக்கொருவர் நோன்பு பணம் கொடுத்து விட்டு கிளம்பினார்கள்.

அடுத்த நாள், பார்க்குக்கு போய், ஆசை தீர சுத்தினார்கள். தூரியில் எல்லாரும் விளையாடினார்கள்....

அன்று இரவு, தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மர்ஜியாவுக்கு, நடு நிசியில், ஏதோ சரக் சரக் என்று சப்தம் கேட்டது...தூங்கிக் கொண்டிருந்த தங்கச்சிகளையும் அம்மாவையும் எழுப்பி விட்டாள்... எல்லாரும் பயத்தோடு, அமர்ந்திருந்தார்கள்...

(வளரும்)

-சுமஜ்லா.
.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!