சாயபு வீட்டு சரித்திரம் - 23


<><><><><><>

’என்’ எழுத்து இகழேல்


Posted: 27 Sep 2009 08:20 AM PDT


முதலில், நான் ஏக இறையை தவிர, யாரிடமும் எதுவும் கேட்பதில்லை. ஆக, இந்த தேவதை, இறையின் தூதாக கொண்டு பதில் தருகிறேன்.

ஏகாந்த தனிமையில், மொட்டை மாடியில், கவலையோடு அமர்ந்திருந்தேன்...

வழக்கமான என் பொழுதுபோக்கான நட்சத்திர ஆராய்ச்சி கூட செய்யவில்லை...

ஆனால், இரண்டு நட்சத்திரங்கள் என்னை பார்த்து கண்சிமிட்டின. கொஞ்சம் கொஞ்சமாக அவை அருகில் வர, எங்கிருந்து, அதன் பின்னால், இரண்டு நிலாக்கள் முளைத்தன? அட, இறக்கைகள்...

கண்ணை மூடி திறந்தபோது தெரிந்தது, நவாஸும், சதீஷும் என்னிடம் அனுப்பியிருப்பது...

ஆசைக்கா பஞ்சம்...என் கவலைக்கு காரணமே அதானே???

இதோ என் வேண்டுகோள்களின் பட்டியல்!

1.எல்லா அசைன்மெண்ட்டுகள் மற்றும் ரெகார்டுகளும் தானாக எழுதப்பட்டு விட வேண்டும்.

2.பேனாவை எடுத்து பேப்பரில் வைத்தால், தானாகவே பரிச்சை எழுதி விட வேண்டும்.

3.சிஸ்டம் முன்பாக உட்காரும் தேவை இல்லாமல், நான் மனதில் நினைத்து எண்டர் கொடுப்பது, பதிவாக வந்து விட வேண்டும்.

4.வீட்டு வேலைகளை எல்லாம் நொடியில் முடித்து தர, சொன்ன வேலையை செய்யும் ஒரு ரோபோ வேண்டும்.

5.மாதம் ஒரு முறை, உலகின் எதாவது ஒரு மூலைக்கு விர்ச்சுவல் டூர் போய் வந்து, அந்த கட்டுரையை என் ப்ளாகில் போட வேண்டும்.

6.உள்ளே கை விட்டு எடுக்க எடுக்க, ஆயிரம் ருபாய் நோட்டுக்களாக(அல்லது தங்க கட்டிகளாக) வரும் ஒரு உண்டியல் வேண்டும்.

7.எழுத்துலகில் ஒரு பவர்ஃபுல் சக்தியாக நான் உருவெடுக்க வேண்டும்.

8.என்றென்றும் வாழ்வில் நிம்மதி நிலைத்திருக்க வேண்டும்.

9.வெளியே சொல்ல முடியாமல், மனதில் இருக்கும் எல்லா ஆசைகளும் நிறைவேற வேண்டும்.

என்ன, எல்லாம் சுயநலமாக இருக்கு என்று பார்க்கிறீர்களா? இதோ என் பத்தாவது வேண்டுகோள்.....

10.இந்த உலகில் துன்பம் என்பதே யாருக்கும் இருக்கக் கூடாது!

இதில் எல்லாமே அடங்கி விட்டதல்லவா??????

தேவதை எல்லாவற்றையும் கேட்டு விட்டு, 'இவை ஆசைகள் அல்ல, பேராசைகள். அதனால், இவை எல்லாம் நிறைவேற நீ மறு உலகம் வர வேண்டும்' என்று சொல்லிவிட்டு சென்று விட்டது...இப்போதைக்கு நான் இருப்பதை விட்டு பறப்பதை பிடிப்பதாக இல்லை...என்ன செய்யலாம் சொல்லுங்கள்?!

-சுமஜ்லா.

Posted: 27 Sep 2009 03:49 AM PDT


எங்க லெக்சரர் மேடம், தன்னைப் பற்றிய ரிவ்யூ, அதாவது பிடித்தது, பிடிக்காதது எல்லாம் எழுதி தர சொன்னாங்க... அதுக்காக நான் எழுதியது இது. ஆனா, இன்னும் கொடுக்கவில்லை. அடுத்த மாதம் தான் கொடுக்கணும்.

மேடம் பேர் மட்டும் இங்கே கொடுக்கவில்லை...ஆனா, இதில் பேர் மறைந்திருக்கு! படிச்சிட்டு, உங்களுக்கு ரொம்ப தில்லுனு, க்ளாஸ்மேட்ஸ் சொன்னாங்க... நீங்க என்ன சொல்லப் போறீங்க?

சொல்ல நினைப்பதையும் சொல்லவில்லை
சொல்லாமல் இருப்பதிலும் அர்த்தமில்லை
சொல்ல நினைத்தாலும் முடியவில்லை!
சொல்ல ஆரம்பித்தால் முடிவேயில்லை!!

சிலரை தவிர்க்கிறது சிலரின் மனம்
பழக நினைக்கிறது எந்தன் உளம்
ஏன் என்ற கேள்வி மனதில் எழும்!
தக்க விடையொன்று மனமே தரும்!

முரண்களின் உருவமாய் மொத்தத்தில் அவர்
முடியாததையும் முடிக்க வைக்கும் பவர்!
மறுப்புக்கு மறுப்பு சொல்லும் மலர்,
மண்ணை தின்ன கண்ணனவன் கலர்!

சற்றே மிரள வைத்த முதல் பார்வை
பின் புரிந்தது அவர் உழைப்பின் வியர்வை!
தன்னை சுற்றி போர்த்தியிருக்கிறார் போர்வை,
அதை தூக்கி எறிவது காலத்தின் தேவை!

தவமிருந்து உருவான மணி
காய் விடுத்து கவர வேண்டும் கனி!
அவர் வழி என்றென்றும் தனி,
நானும் பழகிக் கொள்வேன் அதை, இனி!!

பிடிக்காதது முதலில் வரும் 4

பிடிக்காதது: பப்ளிக்காக வகுப்பில் வைத்து ஒருவரை திட்டுவது.
பிடித்தது: மனதில் எதுவும் வைத்துக் கொள்ளாமல் எதையும் வெளிப்படையாக கேட்டு விடுவது.

பிடிக்காதது: சிலரின் திறமைக்கு மதிப்பு தரா தன்மை.
பிடித்தது: திறமையின் வடிவாக நீங்களே இருக்கும் உண்மை.

பிடிக்காதது: கால் மேல் கால் போட வேண்டாம் என்று சொன்னது.
பிடித்தது: பலமுறை இதே விஷயத்தை என் அம்மா சொல்லியும் கேட்காத என்னையும் கேட்க வைத்தது.

பிடிக்காதது: English பேசுபவர்களை கண்டு ஒதுங்குவது.
பிடித்தது: எல்லாரையும் செகண்ட் ஆப்ஷன் English எடுக்க சொன்னது.

********************************************


பிடித்தது முதலில் வரும் 4

பிடித்தது: சாவி விஷயத்தில் நடந்த செயலுக்காக வருந்திய என்னை, past is past என்று சொல்லி தேற்றியது.
பிடிக்காதது: என்னிடம் past is past சொன்ன நீங்கள் past ல் படித்த ஜாஹிரா டீச்சரிடம் சைக்காலஜி ஏன் பிடிக்கவில்லை என்று கேட்பேன் என்றது.

பிடித்தது: கண்டிப்பாக டெஸ்ட் எழுத வேண்டும் என்று சொல்லி, உங்கள் கம்பீரத்தை நிலை நாட்டியது.
பிடிக்காதது: பல நாட்கள் ஆப்சண்ட் ஆனவர்களையும் நிர்பந்தமாய் டெஸ்ட் எழுத சொன்னது.

பிடித்தது: அழகாக பாடம் நடத்துவது.
பிடிக்காதது: இவ்விஷயத்தில் எதுவுமில்லை.

பிடித்தது: Psychological Terms ஆங்கிலத்தில் போர்டில் எழுதுவது.
பிடிக்காதது: சிறிதும் ஆங்கிலத்தில் பேச தயாராக இல்லாமல் இருப்பது.
********************************************


என்னிடம் எனக்கு பிடித்தது: சொல்ல நினைப்பதை வெளிப்படையாக சொல்வது.
என்னிடம் எனக்கு பிடிக்காதது: சில நேரங்களில் சில விஷயங்களை சொல்ல நினைத்தும் சொல்ல முடியாமல் போவது(இங்கேயும் அது போல சில உண்டு)
(இங்கே நான் சொல்லியிருப்பது உங்கள் குணம் என்று நான் சொல்லவில்லை, இது என் சொந்த கருத்து மட்டும் தான்)

-சுமஜ்லா.
Posted: 27 Sep 2009 01:34 AM PDT


(உலவும் மனிதர்களின் உண்மை கதை)

ஓட்டுவளியும் தாழ்வான முற்றமும் உள்ள வீடு அது, பெரிய வாசல் முன்புறம் இருக்கும். முற்றத்தை தாண்டினால், உள்ளறை. இது போல வரிசையாக மூன்று அறைகள். இதில் தான் எல்லாரும் படுத்து தூங்குவார்கள். மற்றபடி, பாத்ரூம் போகணும் என்றாலும், வெளியே தான் வர வேண்டும்.

ஆண்கள் யாரும் இல்லாத வீடு. இரவில் வெளியே யாரோ நடப்பது போல சத்தம். மர்ஜியா முதலில் எந்திருச்சு, எல்லாரையும் எழுப்ப, அமைதியான சூழ்நிலையில் பயம் கவ்விக் கொண்டது.

வந்திருப்பது திருடன் என்று புரிந்தது. ஓட்டை பிரித்து இறங்கி விடுவானோ என்ற அச்சம் ஆழ்மனதில்...

"பூனை உருட்டுதும்மா" வந்திருப்பது திருடன் என்று தாம் உணர்ந்ததை காட்டிக் கொள்ளக்கூடாது என்று சற்று உரக்கவே சொன்னாள் ஆப்பி.

"ஏய், ரெண்டு கால் பூனடீ" அந்த சூழ்நிலையிலும் ஜோக் அடித்தாள் மர்ஜியா....

சிறிது நேரம் திண்ணையிலேயே நடந்து கொண்டிருந்தான் வந்தவன். யாராவது வெளியே வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு அவனுக்கு...

பாஜிலா வளர்த்து கொண்டிருந்த புஸ்ஸி பூனை விடாமல் கத்திக் கொண்டிருந்தது.

"தர்காவுக்கு போயிருந்த 30 பேர் வேன்ல இப்ப வந்திருவாங்கல்ல?"

இதைக் கேட்டு பயந்து அவன் போய் விடமாட்டானா என்ற எண்ணம் பாத்திமாவுக்கு.
ஒரு வழியாக அவனுடைய சத்தம் நின்றது. விடிந்த பிறகு வெளியே வந்து பார்த்தால், காலடி தடங்கள்.

ரொம்பவும் அச்சமாக இருந்தது.

இப்படிபட்ட சூழ்நிலையில் வீட்டில் ஒரு ஆண்மகன் கூட இல்லையே என்ற கவலை பாத்திமாவுக்கு. மீரான் சாயபு மகனைப் போல வளர்த்த ஜாயிர், அவர் மரணத்துக்கு பின்பு, இங்கு அதிகமாக வருவதில்லை. அதற்கு காரணம், மீரான் சாயபு அளவுக்கு பாத்திமாவுக்கு அவன் மேல் அதிகம் பிடிப்பு இல்லை. அதோடு, அவன் உறவில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனியாக போய்விட்டான்.

அடுத்த நாள் இரவானதும், அறையில், கம்பு, கத்தி, அருவாள், உலக்கை, மிளகாய் பொடி எல்லாம் எடுத்து அருகில் வைத்துக் கொண்டனர். தினமும் அதை எல்லாம் அருகில் வைத்துக் கொண்டு தூங்குவது வழக்கமாகிப் போனது.

இதற்கு ஓரளவுக்காவது தீர்வு காண வேண்டும் என்று வாசலில் சிமெண்ட் அட்டை போட்டு கொஞ்சம் பந்தோபஸ்து செய்தார் பாத்திமா. அந்த நேரத்தில், எடுப்பு கக்கூஸுக்கு மாற்றாக செப்டிக் டேங்க் கட்ட வேண்டியிருந்தது. அதோடு இந்த பணியும் சேர்த்து செய்ததில், கையில் இருந்த சேமிப்பெல்லாம் கரைந்து விட்டிருந்தது.

"மர்ஜி, ஆப்பி, பாருங்க.... இப்ப என் கையில காசில்ல... அதனால, உங்கப்பா வந்தா, அவர்கிட்ட சொல்லி, எப்படியாவது பணம் கட்டி காலேஜில் சேர்த்து விட சொல்லிருங்க!"

அதே போல, தஸ்தகீரும் காலேஜில் சேர்க்க பணம் தந்தார்.

இருவரும் ஒரே வகுப்பில் ஒன்றாகவே படித்து வந்தது, காலேஜ் போக வர சவுகரியமாக இருந்தது.

நல்லபடியாக படித்து வந்தார்கள்.

அப்போ, பாஜிலா பத்தாம் வகுப்பு படித்து வந்தாள். அவள் யாரிடமும் அதிகம் பேச மாட்டாள். அவள் பெரிய மனுஷி ஆகவில்லை என்று பாத்திமா ரொம்பவும் கவலைப்பட்டு கொண்டிருக்க, தான் வயது வந்தும் ஆறு மாதமாக மறைத்து வந்ததை, மர்ஜியா கண்டுபிடித்து அம்மாவிடம் சொல்லி விட்டாள்.

அதிலிருந்து, பாஜிலாவுக்கு மர்ஜியின் மேல் ஒரு காழ்ப்புணர்வு. ஒரு விதமான வெறுப்பு அடுத்த வருடம் இன்னும் அதிகமானது. அதற்கு காரணம், பாஜிலாவுக்கு வந்த காதல் கடிதம்.

"அம்மா இங்க பாருமா... இது பாஜி பேக்ல இருந்தது."

"என்னடி இது? யாருடி?"

"இந்த பையன் பேரு கமால்மா! இவன் பாஜி பின்னாலயே சுத்திக்கிட்டிருக்கான்னு என் ஃபிரெண்ட் சொன்னாமா... நீ கூப்பிட்டு கண்டிச்சு வை"

"பாஜி...ஏய் பாஜி.... இங்க வா"

"என்னடி இது?"

"தெரியாது!"

"உன் பேக்ல கிடக்குது...இது கூட தெரியாதா உனக்கு?"

"தெரியலைமா"

"ஒதச்சனா தெரியும் கழுத...யாருடி அவன்?"

"தெரியாதுமா... எனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. அவந்தான், என் பின்னால சுத்தறான்... என் கூடையில இத போட்டிருப்பான் போல... அவனும் என் கிளாஸ்ல தான் படிக்கிறான்.......... ஆனா, எனக்கு இதெல்லாம் எதுவும் பிடிக்கலைமா"

அதற்கும் மேல் இதை ஊதி பெரிதாக்க விரும்பவில்லை, பாத்திமா. லேசாக கண்டிச்சு விட்டு விட்டாள்.

மர்ஜியும் ஆப்பியும் நல்லபடியாக படிப்பை முடித்து பர்ஸ்ட் கிளாஸில் பாஸ் பண்ணினார்கள். அதன் பின், இருவரும் அருகில் இருந்த இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலில் வேலை பார்க்க ஆரம்பித்தார்கள். அதோடு மேல்படிப்பையும் தபால்வழியில் தொடர்ந்தார்கள்.

பாத்திமாவுக்கும் வயதாகி விட்டது. மூன்று பேரும் திருமண வயதை எட்டியதும், கொஞ்சம் கவலையாக இருந்தது. மாப்பிள்ளை தேட ஆரம்பித்தாள். நிரம்ப படித்த இவர்களின் படிப்புக்கு ஏற்ற வரன் அமையவில்லை.

கச்சாமாவின் நகைகளை எல்லாம் அழித்து, மூவருக்கும், ஒரே மாதிரியாக மாலை, அட்டிகை, தோடு, வளையல் எல்லாம் வாங்கினாள்.

படிப்பு, அந்தஸ்து, சொத்து இருந்தும், நல்ல மாப்பிள்ளை அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. எடுத்து செய்ய, ஆண்மகன் இல்லாத வீடு என்பதால், சிலர் தயங்கினார்கள், பாத்திமாவும் கச்சாமாவும் எங்கிருந்தோ வந்தவர்கள் என்பதால் சிலர் தயங்கினார்கள், இப்படியாக நாட்கள் போய்க்கொண்டே இருந்தது.

இந்த நேரத்தில், ஒரு வரன், சற்று பிடித்திருந்தது.... ஓரளவுக்கு வசதியும் இருந்தது. ஆனால், படிப்பு ஸ்கூல் வரை தான். ஒரு பெண்ணுக்காவது திருமணம் முடித்து விட்டால், பிறகு அவள் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் பாத்திமாவுக்கு....அதனால், மர்ஜிக்கு இந்த மாப்பிள்ளையை முடித்து விட நாடி, மேற்கொண்டு பேச்சு வார்த்தைகள் நடத்தி வந்தாள்.

அப்போ, உள்ளறையில் அலமாரியை திறந்தவள், அங்கிருந்த சிலேட்டில் ஏதோ எழுதி வைத்திருந்ததை பார்த்து, வெளியே எடுத்தாள். அதில் இவ்வாறு எழுதியிருந்தது,

"எனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை" – மர்ஜியா.

(தொடரும்)

-சுமஜ்லா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!