அயல்நாட்டு தீபாவளி


Posted: 16 Oct 2009 09:28 PM PDT


தாய்தந்தை தாள் பணிந்து கண்விழிக்கும் நன்னாளும்
வாசலிலே நீர்தெளித்து, கோலமிட்டு முடிப்பதுவும்,
கிண்கிணியாய் சிரிப்பொலிக்க கிணற்றடியில் குளிப்பதுவும்
வந்ததொரு நெடுங்கனவாய் இந்த திருநாளினிலே!

தாயெங்கே, தந்தையெங்கே, கிணறெங்கே, சிரிப்பெங்கே?
ஆனாலும் பெருநாளும் வந்தேதான் செல்கிறது!
சந்தோஷம் எதுவென்று தேடித்தான் பிடித்தாலும்
சம்சார சாகரத்தின் அலையிங்கு இல்லையடா!!

பட்டாசு வெடிவெடித்து உற்சாகம் புரண்டோட,
பட்டாடை சரசரக்க உற்றாரைக் காண்பதுவும்,
தோழியரின் கரம்பிடித்து ஊர்க்கதைகள் பேசுவதும்
வந்ததொரு நெடுங்கனவாய் இந்த திரு நாளினிலே!

பட்டாசு இருந்தாலும் வெடிவைக்க இடமில்லை,
பட்டாடை அணிந்தாலும் பாழ்மனதில் நிறைவில்லை
எட்டாத கனிக்காசை மனமெல்லாம் இப்போது!
விட்டாலும் விலகாத எண்ணத்தில் தப்பேது?

தாய் செய்யும் பட்சணத்தை நாம் திருடி வைத்திருந்து
போய் ஒளிந்து தின்னும் போது நாவினிக்கும் தனிசுவைதான்!
மாலையிலே குடும்பத்தோடு குதூகலிக்கும் நேரங்காலம்,
மங்கலாக மனவெளியில் குதியாட்டம் போடுதடா!

உயிரெல்லாம் தாய்நாட்டில் உடல்மட்டும் அயல்கூட்டில்,
வயிறெல்லாம் நிறைந்தாலும் இனிப்பில்லை, அயல்ஸ்வீட்டில்!
சந்தோஷம் எதுவென்று தேடித்தான் பிடித்தாலும்
சம்சார சாகரத்தின் அலையிங்கு இல்லையடா!!

சந்தோஷப் பரிமாற்றம் எல்லாமே ஃபோன் மூலம்,
விழியோரம் நீர்துளிக்க வாய்பாடும் பூபாளம்!
எல்லாமே இருந்தாலும் எதுவுமே இல்லாத
ஏக்கத்தின் தாக்கத்தில் உள்மனது சுருங்குதடா!

கைநிறைய பணமிருக்கு, மனம்நிறைந்த மகிழ்வில்லை,
பைநிறைய ஸ்வீட்டிருக்கு, தின்னத்தான் ஆளில்லை!
வான்வழியே பறந்து வர இறக்கை மட்டும் இருந்திருந்தால்,
மண்வாசம் தான் பிடிக்க பறந்தோடி வந்திருப்பேன்!!!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

(இது ஒரு மீள்பதிவு)
-சுமஜ்லா



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!