நாகப்பட்டினமே

Posted: 06 Nov 2009 08:57 PM PST


நாகப்பட்டினம் என்ற ஊர் பெயர் வரும்படி சினிமாப்பாடல் இருக்கா என்று நண்பரொருவர் கேட்க, அப்படி இல்லையென்று இதோ ஒன்றை நானே உருவாக்கினேன். அவரவருக்கு விருப்பமான மெட்டு போட்டுக் கொள்ளுங்கள்.

பல்லவி

சிப்பியுண்டு முத்துமுண்டு சிந்தையள்ளும் கடலுமுண்டு
நாகப்பட்டினமே - எங்க
நாகப்பட்டினமே!

உப்புமுண்டு மீனும் உண்டு மிதவை ஏற மார்க்கமுண்டு
மரத்தை கட்டணுமே - மச்சான்
மரத்தை கட்டணுமே!!

அட, கட்டுமரத்ததான் கட்டுபுட்டோம்
கடலுக்குள்ளே குதிச்சுபுட்டோம்
கரையும் தெரியல - பிழைக்கும்
வழியும் புரியல...
(சிப்பியுண்டு)

சரணம்

சேர்த்து வெச்ச கஞ்சி தண்ணி, நெத்திலி மீனு கருவாடு
சோத்த எல்லாம் தின்னுபுட்டு சோக்கா போன கடலுக்குள்ள,

போயி ரெண்டு வாரமாச்சு,
பாத்த விழி பூத்து போச்சு

கருகமணி பொன்னுனக்கு கைவளவி கொண்டு வாரேன்
என்று சொல்லி ஏங்க வெச்சு கடலுக்குள்ள போன மச்சான்

ஊழிக்காத்து அடிக்கையிலே
ஊனும் உயிரும் நடுங்குதைய்யா

நீ பத்திரமா திரும்பிவர
பாவி மனசு துடிக்குதைய்யா - இந்த
பாவி மனசு துடிக்குதைய்யா!
(சிப்பியுண்டு)

தலைவாழ இலைபோட்டு, அழகழகா விருந்து வைக்க
தலைகாணி சுகத்தை விட்டு தடம் பார்த்து விழிச்சிருக்கேன்.

காலடியின் சுவட்டிலெல்லாம்
உன் சுவடை தேடி நிக்கேன்

மலைபோல அலைவந்தா மனதெல்லாம் நனையுதைய்யா
காஞ்சு போன கருவாடா உள்மனசு சுருங்குதைய்யா

கைவளவி வேண்டாமே
கால் கொலுசும் வேண்டாமே,
மச்சான் நீ உசிரோட
வந்தாக்கா போதுமைய்யா - நீ
வந்தாக்கா போதுமைய்யா.

(சிப்பியுண்டு)

-சுமஜ்லா.

Posted: 06 Nov 2009 08:44 PM PST


"இனி யாரிருக்கா எங்களுக்கு? இனி யாரிருக்கா எங்களுக்கு?"

வாய் ஓயாமல் கதறிய ஆப்பியையும் பாஜியையும் சமாதானம் செய்ய முடியாமல், உறவுகள் விக்கித்து நின்றன. மர்ஜியும் உடைந்து தான் போனாள்.

ஊரும் தெரியாமல், உறவும் தெரியாமல், எங்கிருந்தோ வந்தவள் பாத்திமா...வளர்ப்பு மகளின் குழந்தைகளை நல்லபடி படிக்கவைத்து ஆளாக்கி விட்டு, அந்த திருப்தியோடு போய் சேர்ந்து விட்டாள்.

காரியங்கள் மளமளவென்று நடந்து முடிந்தன. காலம் யாருக்காகவும் காத்திருக்காமல் உருண்டோடியது.

தஸ்தகீர் அவ்வப்போது வந்து பார்த்து சென்றாலும், அவருக்கும் உடல் தளர்ந்து விட்டது. ரிடர்டாகி விட்டதால், அவர் கையில் முன்போல் காசு புழக்கம் இல்லை.

மர்ஜியின் கணவன் ஃபரீதுக்கோ, வாழ்க்கையில் எந்த தொழிலும் ஒட்டவில்லை. தங்கைகளுக்கு துணையாக மர்ஜி அம்மா வீட்டுக்கே குடியேறி விட்டாள்.

ஆப்பிக்கு எந்த வரனும் சரிவரவில்லை. அவள் எதிர்பார்ப்புபடி படித்த வரன் ஒன்றும் அமையவே இல்லை. திருமணம் முடிக்க கையில் பணமும் இல்லை; ஓரிருவரைத்தவிர, எடுத்து செய்யவும் ஆளில்லை.

இந்நிலையில் கேட்க ஆளில்லாததால், பாஜியின் நட்பு சிலோனில் இருக்கும் ரம்ஜினுடன் கடிதம் மூலமாக தொடர்ந்து கொண்டு இருந்தது. ஒரு நாள் திடீரென்று, ரம்ஜின் தன் நண்பர்களுடன் வந்து விட்டான். வந்து பார்த்து பேசி சென்றான். அதன் பின், அவர்களின் நட்பு இன்னும் வலுப்பtட்டது.

"ஆப்பி, உன்னை ஒருத்தர் பொண்ணு கேட்கறாங்க; டிப்ளமோ இன்ஜினியராம்; கட்டிடம் எல்லாம் காண்ட்ராக்ட் எடுத்து கட்டுகிறார்; நல்ல பையன்; சொந்தமும் கூட, நீ என்னடி சொல்ற?"

மர்ஜி கேட்க, ஒன்னுமே சொல்லவில்லை ஆப்பி!

"என்னடி இப்படி உம்முனு இருந்தா எப்படி?"
"என் தலையெழுத்து எப்படியோ, அப்படி ஆகட்டும்...."

பேசி முடித்து விட்டார்கள். தஸ்தகீர் தன் கையில் காசு இல்லை என்று கையை விரித்து விட, லைன் வீட்டை ஒத்திக்கு வைத்து திருமணத்தை எளிமையாக முடித்தார்கள்.

திருமணத்துக்கு பின்பும் ஆப்பி டீச்சர் வேலைக்குப் போய் கொண்டு தான் இருந்தாள்.

மர்ஜிக்கு மூன்றாவதாக ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அதற்கு அஜ்மல் என்று பெயரிட்tடார்கள். ஆபிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது; அதற்கு லுப்னா என்று பெயர் வைத்தார்கள்.

தலைமுறையொன்று உருண்டோடியது. லைன் வீட்டில் குடியிருந்த மும்மக்கா, வீட்டை ஒத்திக்கு வைத்ததால், காலி செய்து விட்டாள். இங்கு இவர்கள் வாழையடி வாழையாக பிள்ளை பெற்றுக் கொண்டிருக்க, சாதிக்கலிக்கு கடைசி வரை பிள்ளை செல்வம் உண்டாகவே இல்லை. இதுவும் விதியின் விளையாட்டு தானோ?!

சுஹைனாவுக்கு ஒரு பெண் குழந்தை... ஒரு நாள் சுஹைனா பாஜி வீட்டுக்கு வந்தாள்.

"ஏன் பாஜிக்கா, ஒரு மாதிரியா இருக்கீங்க?"

"சுஹைன், நான் சொல்றதை யார்கிட்டயும் சொல்லிடாத....கொஞ்ச நாளா ரம்ஜின்கிட்ட இருந்து எந்த ஒரு தகவலும் இல்ல.... சிலோன்ல ஏதோ பிரச்சினையாட்டம் இருக்கு.... இவங்க, இங்கிலாந்துல குடியேறப்போறோம்னு சொல்லிட்டு இருந்தாங்க... என்ன ஆச்சோ தெரியல...."

"கடைசியா போன்ல பேசி எவ்ளோ நான் ஆச்சு அக்கா?"

"கடைசியா பேசி மூணு மாசம் இருக்கும்... அதுக்கப்புறம் போனும் எடுக்க மாட்டேங்கறாங்க.... லெட்டர் போட்டாலும் பதில் இல்ல.... என்னன்னே ஒன்னும் புரியல..."

இந்த விஷயம் ஒரு வழியாக மர்ஜியாவுக்கும் ஆபிதாவுக்கும் தெரியவர, ஒரு வழியாக பாஜியின் மனதை மாற்றி வேறு பக்கம் திருமணம் முடிக்க எண்ணினார்கள்.

பாஜி மிகுந்த மனக்குழப்பத்தில் இருந்தாள். அதற்கு காரணம் இருந்தது. அவளுடைய பள்ளி நாட்களில் அவளுக்கு காதல் கடிதம் கொடுத்த கமால், இப்போது தன் தாய் மூலமாக பெண் கேட்டு அனுப்பியிருந்தான். அவன் அந்த சமயம், அந்த வட்டார கவுன்சிலராக இருந்தான். ஆளும் நன்றாக வளர்ந்து பாஜிலாவுக்கேற்ற ஜோடியாக இருந்தான்.

பாஜிலாவை கமாலுக்கு முடித்தவிடலாம் என்று மர்ஜியா எண்ணினாள். ஆனால், ஆபிதாவுக்கோ, இன்னும் சிறப்பான இடம் பார்க்கலாம் என்று எண்ணம்.

ஒரு நாள் கமாலின் தாயார் சாஹிதா நேரடியாகவே பாஜியிடம் பேசினார்,

"பாஜிலா...அவன் ஸ்கூல் படிக்கறப்ப இருந்தே உன்னையே நினைச்சுக்கிட்டு இருக்கான்மா...கல்யாணம் கட்டுனா உன்னைத்தவிர வேற யாரையும் கட்ட மாட்டேங்கறான்.... உனக்கு எந்த குறையும் வராது... எம்பையன் ராஜா மாதிரி பார்த்துக்குவான்...."

பாஜிலா ஒன்றும் பேசவே இல்லை.

"கால்ல கைல விழுந்தாவது அந்த பொண்ணுகிட்ட சம்மதம் வாங்கிட்டு வர்ரேனு நான் சொல்லிட்டு வந்திருக்கேன்மா.... இந்தா அவன் போன் நம்பர்.... நீ வேணா அவன்கிட்ட பேசிப்பாரு... அப்புறமா மனசுக்கு திருப்தியா இருந்தா சம்மதம் சொல்லு....."

எறும்பு ஊற கல்லும் தேயும்னு சொல்லுற மாதிரி, பேச பேச அவள் மனமும் கொஞ்சம் மாறுதல் அடைந்தது.

அக்காக்கள் இருவரும் திருமணம் முடிந்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்ட நிலையில், தான் மட்டும் தனித்து நிற்பது போன்ற எண்ணம் அவளை வாட்டி வதைத்தது. சிலோனில் இருந்து எந்த தகவலும் வராததால், அதையும் நம்ப முடியவில்லை.

கமால் போன் செய்து பேச, அவள் சிலோன் விஷயம் உட்பட எல்லாவற்றையும் மறைக்காமல் சொல்லி விட்டாள்.

"நான் ஒருத்தன் இங்க, ஏழெட்டு வருஷமா பக்கத்துத் தெருவிலயே காத்து கிடக்க, நீ எங்க சிலோனுக்கு பறக்க பார்த்த.... அதெல்லாம் மறந்திரு பாஜி... நான் உன்னை மனதார விரும்பறேன்.... இப்ப, உன் கையிலயும் அதிகமா பணமில்ல.... அதோட, அக்காக்களும் அதிகமா செலவு செய்யற மாதிரி இல்ல.... நீ சரின்னு மட்டும் ஒரு வார்த்தை சொல்லு.... நான் மீதி எல்லாத்தையும் பார்த்துக்கிறேன். நீ எந்த கவலையும் படாதடா"

கமால் சொல்ல சொல்ல, அவள் மனம் மாறி விட்டது. வேக வேகமாக திருமண ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார்கள். நீண்ட கால காதல் என்பதால், காதலர் தினத்தன்று திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று கமால் முடிவு செய்தான். டிபன் மட்டும் போட்டு சிம்பிளாக முடிக்க திட்டமிட்டிருந்தனர். தஸ்தகீர் ஏதோ தன்னால் ஆனதை தருவதாக சொன்னார்.

நாளாக நாளாக, கமாலும் பாஜிலாவும் உள்ளத்தளவில் மிகவும் நெருங்கி விட்டனர். குடியிருக்கும் வீட்டை ஒத்திக்கு வைத்து விட்டு, டவுன் பக்கம் குடியேற முடிவு செய்தனர்.

அப்போது தான் பக்கத்து வீட்டு சபுரா வந்தாள்,

"மர்ஜி, உனக்குத் தெரியுமா....... உங்கப்பாவுக்கு இன்னொரு பொண்டாட்டி இருக்கு..... உங்க சின்னமமாவுக்கு ஒரு மகளும் இருக்கா..... டவுன்ல குடியிருக்காங்க.... "

(வளரும்)

-சுமஜ்லா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!