ஆடு வாங்கிய கதை


Posted: 26 Nov 2009 10:28 AM PST


போன வருடம் இதே நேரம் ஹஜ்ஜில் இருந்தோம். இன்று அந்த பசுமையான நினைவுகளை நினைக்கையில் கண்களில் நீர் துளிர்க்கிறது. அரஃபா மைதானத்தில் அகமகிழ்ந்திருந்த நாழிகைகள், மனக்கண்ணில் நிழலாடுகிறது!

பக்ரீத்துக்கு ஆடு அறுக்கலாமா, கூட்டு குர்பானி சேரலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது, இது பற்றி காலேஜில் பேசிக் கொண்டிருந்தேன். என்னுடன் படிக்கும் மாணவி தீபா தாங்கள் செம்மறி ஆடு வளர்ப்பதாகவும், வேண்டுமானால் பக்ரீத்துக்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் கூறினார். இது அவர் சொல்லி பதினைந்து நாட்கள் இருக்கும். நான் அசால்ட்டாக விட்டு விட்டேன். கூட்டு குர்பானியும் சேர்ந்து விட்டோம்.

2 நாட்கள் முன்பு என்னவர் ஆடு அறுக்கலாம் என்று சொல்ல, தீபாவுக்கு போன் செய்தேன்,

"தீபா...செம்மறி குட்டி இருக்கா? எனக்கு ஒரு ஆடு வேணும்ப்பா"

"5 குட்டி இருக்குங்க்கா...வந்து பிடிச்சுக்குங்க..."

"என்ன விலைப்பா? எத்துணை கிலோ தேறும்?"

"4000 ருவாய்னு எங்க வீட்டுக்காரர் சொன்னார், வேணா குறைச்சுக்குவார், சுமாரா 15 கிலோ கறி தேறுமாம்...நாளைக்கு வாங்க, அப்படியே காலேஜில் இருந்து போகலாம்..."

அடுத்த நாள் அதாவது நேற்று, காலேஜ் போனேன்.

"அக்கா, மத்தியானம் பர்மிஷன் வாங்கிட்டு முன்னாடியே போயறலாம்க்கா" தீபா.

எங்க காலேஜ் எங்கள் வீட்டிலிருந்து 17 கிலோ மீட்டர். தீபாவுடைய ஊர் அங்கிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் இருக்கும் எல்லக்கடை என்னும் பட்டிக்காடு. என் ஸ்கூட்டியில் ஆட்டை வைத்துக் கொண்டு போவதாக திட்டம். அவர் பைக்கில் வந்தால், கொண்டு போவது சிரமம்.ஆக, நான் மச்சானை காலேஜுக்கு பஸ்ஸில் வர சொல்லி விட்டேன்.

காலையில் எங்க சைக்காலஜி மேடம் வகுப்பெடுக்க வந்தார்.

"இங்க பாருங்கம்மா...எல்லாரும் பர்மிஷன் போட்டுட்டு அவரவர் இஷ்டத்துக்கு போறீங்க...தேவையில்லாமல் யாரும் பர்மிஷன் கேட்காதிங்க...இஷ்டத்துக்கு வந்துட்டு இஷ்டத்துக்கு போனா, பார்க்க ரொம்ப அசிங்கமா இருக்கும்மா...எல்லாரும் கண்டிப்பா பெல் அடிச்சதும் தான் போகணும்"

மேடம் என்னிக்கும் இல்லாத திருநாளா அன்னிக்கு அப்படி சொல்ல, நானும் தீபாவும் திருதிருவென்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்!

நான் மெதுவாக எழுந்தேன், "மேடம்...நான் இன்னிக்கு மட்டும் நேரமா போகணும்"

"எதுக்கும்மா?"

"மே'ம் ஆடு வாங்க போகணுங் மே'ம்" மென்று முழுங்கியவாறு முனகினேன்.

"என்னது? ஆடு வாங்க போறீங்களா? ஆடெல்லாம், நீங்க தான் போய் வாங்கணுமா? உங்க வீட்டுக்காரர் போக மாட்டாரா?"

எனக்கு மானமே போய் விட்டது!

"மே'ம் ஒரு கர்ச்சீப் வாங்க போனா கூட அவர் என்னைய கூட்டிட்டு தான் போவார், அப்படியே பழக்கமாயிட்டதுங் மே'ம்" நான் சமாளிக்க பார்த்தேன்.

"அது சரிமா... ஆனா ஆடு வாங்க சந்தைக்கு நீங்க போகப் போறீங்களா...."

எல்லாரும் என்னையே பார்க்க ஆரம்பிச்சாங்க!

"வந்து...இல்லைங்க மே'ம்...தீபா வீட்டுக்கு போய் ஆடு பிடிக்கணும்...அதான்" குட்டு உடைந்து விட்டது!

இப்ப எல்லாரும் தீபாவைப் பார்க்க, தீபாவோட ஆட்டை நாங்க வெட்டப்போறோம்னு க்ளாஸ் முழுதும் தெரிந்து விட்டது!

"அப்ப...தீபா, உனக்கும் பர்மிஷன் வேணுமா?" என்று மேடம் கேட்க, அவள் தலையாட்ட, ஒரு வழியாக இருவருக்கும் பர்மிஷன் கிராண்டட்!

வெற்றிகரமாக இருவரும் சிரித்தாலும், க்ளாஸ் முழுதும் ஒரே கேலி, கிண்டல்!

மதியம் மூன்று மணிக்கு பர்மிஷன் லெட்டர் கொடுத்து விட்டு இருவரும் கிளம்பினோம்.

இரண்டு பக்கமும் வயற்காடு, தென்னந்தோப்பு என பசுமையான சூழல். சிலீரென்று காற்று முகத்தில் அறைய கிராமத்து பக்கம் டூவீலர் ஓட்டுவதே ஒரு இனிய அனுபவமாக இருந்தது.

ஒரு இடத்தில் மெயின் ரோட்டில் இருந்து கட் பண்ணி, ஒற்றையடி பாதையாக இருந்த வரப்பின் வழியே சென்றோம். இது போன்ற இடங்களுக்கெல்லாம் நான் அதிகமாக போனதில்லை. இருபக்கமும் ஓங்கி உயர்ந்த மரங்களுக்கு நடுவே ஒளிந்தபடி டூவீலரில் செல்வதே ஒரு சுகமான வித்தியாச அனுபவமாக இருந்தது.

வயற்காட்டில் நடுவே அழகான சிறிய பங்களா அவர்களுடையது! ஓரளவுக்கு வசதியான குடும்பம். சுற்றிலும் மஞ்சக்காடு, சோளக்காடு என கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை பசேல் என்று காட்சியளித்தது.

அவர்களுடைய வீட்டுக்கு போனதும், தீபா அவருடைய டூவீலரை எடுத்துக் கொள்ள, இருவரும், இரு வாகனத்தில் மீண்டும் எல்லக்கடை பஸ் ஸ்டாப் வந்தோம். அங்கு என்னவர் டீக்கடையில் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார். அவரையும் அழைத்துக் கொண்டு மீண்டும் தீபா வீட்டுக்கு திரும்பினோம்.

தீபா வீட்டில், மாமனாரும் மாமியாரும் எங்களை உள்ளே அழைத்து உபசரிக்க, லெமன் ஜூஸ் சாப்பிட்டு விட்டு, தோட்டத்துக்கு போனோம். வெள்ளாடு, செம்மறியாடு, எருமை, பசு, கோழிகள், வைக்கோல்போர் என கிராமிய மணம் கமழ்ந்தது. செம்மறியாட்டை 3500 என விலை பேசி வாங்கிக் கொண்டு கிளம்பினோம். சுமார் 13 அல்லது 14 கிலோ கறி தேறும் என்றார் என்னவர்.

கால்களை கட்டி, ஸ்கூட்டியில் முன்னால் வைத்துக் கொண்டோம். எப்படி கொண்டு போவோமோ என்று அவர்களுக்கு ஒரே கவலை. ஆட்டுக்கு சோளமும் தட்டும் போடுங்க என்று அக்கறையான அட்வைஸ் வேற. வெள்ளந்தியான கிராமத்துக்கு மக்களிடம் பழகுவதே தனி மகிழ்ச்சி தான்!

கிளம்பி வந்தால், ஆடு தலையை ரோட்டில் முட்டும் அளவுக்கு தொங்கப்போட்டுக் கொள்கிறது. என்னவர் காலால் முட்டுக் கொடுத்தபடி, இடையிடையே நிறுத்தி நிறுத்தி வந்தார்.

மீண்டும் எங்க காலேஜ் வழியாகத்தான் வர வேண்டும். காலேஜ் அருகில் வரும் போது, சரியாக அப்போது தான் காலேஜ் முடிந்து ஃபிரண்ட்ஸ் எல்லாரும் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தார்கள். ஆட்டுடன் நாங்கள் வருவதைப் பார்த்ததும் 'ஆடு பாரு' என்று கத்த, நானும் 'ஹாய்' சொல்லி விட்டு வந்தேன்.

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம். அதற்குள் தீபா போன் செய்து, பத்திரமாக கொண்டு போய் சேர்த்தாச்சா என்று போன் செய்தார். ஆட்டின் மூக்கு லேசாக ரோட்டில் உராய்ந்து ரத்தம் கசிய, பயந்து விட்டேன். நல்லவேளை அதிகமாக இல்லை.

அடுத்த நாள், அதாவது இன்று காலேஜ் போனால், எல்லாரும் ஆட்டையே விசாரிக்கிறார்கள். தீபாவும், 'எங்க ஆடு என்னக்கா செய்யுது, சாப்பிட்டுச்சா, கத்தியதா?' என்று விசாரித்தார். மொத்தத்தில் எங்க ஆடு ரொம்ப ஃபேமஸ் ஆயிடுச்சு! எல்லாரும் பிரியாணி கேட்கிறார்கள். திங்கள் கிழமையன்று ஸ்டூடண்ட்ஸுக்கு பிரியாணி செய்து எடுத்துச் செல்ல வேண்டும்!

எல்லாரும் எங்க வீட்டுக்கு பிரியாணி சாப்பிட வாங்க!

அனைவருக்கும் ஈத் முபாரக்!

-சுமஜ்லா.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!