சாயபு வீட்டு சரித்திரம் - 29


Posted: 01 Dec 2009 09:52 AM PST


(உலவும் மனிதர்களின் உண்மை கதை)

எந்த ஒரு மனிதனுடைய வாழ்க்கையும் சோகமாகவே எப்போதும் இருக்காது. அதே போல சந்தோஷமும் நிரந்தரமாக தங்காது. இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது தான் இயற்கையின் நியதி! இதில், துன்பத்தில் பொறுமை காப்பதும், இன்பத்தில் இறைவனை மறக்காமல் இருப்பதும் தான் அவசியமாக இருக்கிறது.

சிலருக்கு இன்பத்துக்குப் பின் துன்பம் வருகிறது. அப்போது, வாழ்க்கையே சூனியமானது போல தோன்றுகிறது. சிலருக்கு துன்பத்துக்கு பின் இன்பம் வருகிறது. அப்போது, வாழ்க்கையே நந்தவனமாக பூத்துக் குலுங்குகிறது. இங்கும் அப்படித்தான்... மர்ஜி, ஆப்பி, பாஜி மூவரின் வாழ்க்கையிலும், வசந்தம் துளிர்த்த போது, வாழ்வே வண்ணமயமாக மாறிவிட்டது.

மர்ஜிக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த கவர்ன்மெண்ட் போஸ்டிங் கிடைத்து விட்டது. அறிவியல் ஆசிரியை ஒருவர் ரிட்டயர்ட் ஆக, அவருடைய இடத்துக்கு மர்ஜி நியமிக்கப் பட்டாள்.

மர்ஜியாவின் கணவன் ஃபரீத் மூலமாக பெரிதாக எந்த ஒரு வருமானமும் இல்லாவிட்டாலும், மர்ஜியின் சம்பாத்தியத்தில் குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது. ஆரிஃப்ஃபையும் அதற்கென இருக்கும் பள்ளியில் ஹாஸ்டலில் சேர்த்து விட்டாள்.

மர்ஜி, ஆப்பிக்கு போன் செய்தாள்,

"ஆப்பி, எப்படி இருக்க?"

"இப்பத்தான் மர்ஜி ஸ்கூலில் இருந்து வந்தேன்...என்ன விஷயம்? ஆரிஃப் நல்லா இருக்கானா?"

"ஆரிஃப்ஃபுக்கு கால் எலும்பில் ஆபரேஷன், வர்ர சனிக்கிழமை! அவன் படிக்கிற ஸ்கூல் மூலமாகவே ஃப்ரீயாக பண்றாங்கடி! அதான் சொல்லலாம்னு கூப்பிட்டேன்..."

"பார்த்து, அதுக்குள்ள, கொஞ்சம் சத்தான ஆகாரம் எல்லாம் கொடுத்து பையன தேத்து!"

ஆரிஃபுக்கு ஆபரேஷம் நடந்தது! இரண்டு காலிலும் ஒரே நேரத்தில் செய்தார்கள்... ஒரு மாத ரெஸ்ட்டுக்குப் பின், நடைப்பயிற்சி தரப்பட்டது. அறவே நடக்காமல் தவழ்ந்து தவழ்ந்து போய்க் கொண்டிருந்தவன், இப்போது காலை சற்றி சண்டியபடி நடக்க ஆரம்பித்தான். அவனுடைய உலகம், அவனுக்கு புதிதாக கண்முன் விரிய ஆரம்பித்தது....!

ஆப்பியும் டி.ஆர்.பி. எக்ஸாமுக்கு படித்துக் கொண்டிருந்தாள்...இயல்பிலேயே புத்திசாலியான அவளுக்கு, இது பெரிய விஷயமே இல்லை...தேர்வு முடிந்து காத்திருந்தவளுக்கு, ஒரு நாள் அந்த இனிய செய்தி வந்தது! வெறுமனே பாஸ் மட்டும் ஆகாமல், தமிழ்நாட்டில், முதல் பத்து இடங்களுக்குள் வந்திருந்தாள்.

ரிசல்ட் வந்த அன்று, பாஜியும் மர்ஜியும், வாழ்த்து சொல்ல, அவள் வீட்டுக்கு வந்திருந்தார்கள்....

"வாழ்த்துக்கள் ஆப்பி....! சந்தோஷமா இருக்குடி! எங்க போஸ்டிங் போட்டிருக்காங்க?"

"கவுன்சலிங் தான் போகணும் மர்ஜி.. நல்ல ரேங்க் எடுத்திருக்கறதுனால, பக்கமாகவே கேட்டு வாங்கிடலாம்....!"

"நீ, எம்.ஃபில் வேற முடிச்சிருக்கற..... அதனால, சீக்கிரமா, ப்ரமோஷம் கிடைக்கும்....உன்னோட உழைப்பினால, வேகமா முன்னுக்கு வந்திருக்கற..... அவ்வளவு ஈஸியா கிடைக்காத வெற்றி இது!"

அன்று, பாயாசம் வைத்து எல்லாருடனும் சந்தோஷத்தை பரிமாறிக் கொண்டாள் ஆப்பி!

இருவரும் கவர்ன்மெண்ட் வேலை கிடைத்து நல்ல நிலைமையில் இருக்க, பாஜி மட்டும் கொஞ்சம் சுமாராகவே இருந்தாள். மர்ஜியாவும், ஆப்பியும் வாடகை வீடாக இருந்தாலும், சிறு பங்களா வீட்டில் குடியிருக்க, பாஜி மட்டும் தன்னுடைய மாமியார் வீட்டிலேயே மாடியில், சிறிய ஓட்டு வீடு ஒன்று அமைத்துக் கொண்டு குடியிருந்து வந்தாள்.

தஸ்தகீரின் பென்ஷன் பண பாக்கி வந்தது! அதில் ஒத்திக்கு வைத்திருந்த வீடுகளையெல்லாம் திருப்பி விட்டனர்...அந்த பணத்தை நான்கு பங்குகளாக்கி, மர்ஜி, ஆப்பி, பாஜி, ராசிதா நாலு பேரும் பிரித்துக் கொண்டார்கள்.

தங்களுடைய பூர்வீக வீடு திரும்பியதில் அனைவருக்கும் மகிழ்ச்சி! ஆனால், யாரும் அங்கு குடியேற விரும்பவில்லை.... பாரமான பழைய நினைவுகளை சுமக்க, யாருக்கும் விருப்பமில்லை......!

வீட்டை மூன்று பங்குகளாக பிரித்து, அவரவர் பெயரில் பத்திரம் பதிந்து கொண்டனர். எல்லா வீடுகளையும் வாடகைக்கு விட்டு, வாடகையை சமமாக பகிர்ந்து கொண்டார்கள்!

அப்போது, மீண்டும் கவுன்சிலர் எலக்‌ஷன் வந்தது... கமால், அவனுடைய திருமணத்தின் போது, கவுன்சிலராக இருந்தாலும், அதன் பின், நடந்த எலக்‌ஷனில் சீட் கிடைக்கவில்லை... இப்போது, இந்த எலக்‌ஷனின் எப்படியாவது சீட் வாங்கி விட வேண்டும் என்று முனைப்புடன் இருக்கும் போது தான், இப்படி ஒரு செய்தி வந்தது... அதாவது, அவனுடைய தொகுதி, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது....!

"பாஜி! இந்த முறை, நான் எலக்‌ஷன்ல நிக்க முடியாது, நீ தான் நிக்கணும்!" கமால்...

"போங்க... என்னால எல்லாம் முடியாது! நானெல்லாம் போய் யார்கிட்டயும் ஓட்டு கேட்க மாட்டேன்!"

"இல்ல, பாஜி! நீ சும்மா கையெழுத்து மட்டும் போடு, மிச்சத்த நான் பார்த்துக்கிறேன்!"

"இல்லைங்க....வேணாம்....என்னை விட்டிருங்க! எனக்கு அரசியலே பிடிக்காது! கூட்டம் எல்லாம் போடுவாங்க....அதுக்கெல்லாம் போகணும்...."

"இங்க பார் பாஜி! அதெல்லாம் ஒன்னும் நீ கவலைப் படாத! நான் சொல்லுற மாதிரி செய்! மற்றத எல்லாம் நான் பார்த்துக்கிறேன்!"

பேசிப் பேசியே அவளை சம்மதிக்க வைத்து விட்டான், கமால். எலக்‌ஷன் நெருங்க, நெருங்க, பாஜிக்கு ரொம்ப சங்கடம்....ஒரு வழியாக ஓட்டு கேட்டு வந்து விட்டாள்! நோட்டீஸ் அடித்து விநியோகித்தார்கள்! ஆட்டோவிலும் ஸ்பீக்கர் கட்டி விளம்பரம் செய்தார்கள்!

எலக்‌ஷன் முடிந்து விட்டது! ரிசல்டுக்காக காத்திருந்தார்கள்!

(அடுத்த அத்தியாயத்தோடு முடியும்)

-சுமஜ்லா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!