சாயபு வீட்டு சரித்திரம் - 30


Posted: 11 Dec 2009 06:50 AM PST


(உலவும் மனிதர்களின் உண்மை கதை)

"சுற்றம் பலப்பல சூழ்கையிலே
வெற்றிக்கு அங்கு மாற்றேது?!
சற்றும் கலங்கா வாழ்க்கையிலே
முற்றும் என்பது கிடையாது!"


காத்திருத்தல் ரொம்பவும் கஷ்டம் தான்... ஆனால், சில காத்திருத்தல்கள் சுகமானது, ரசித்து அனுபவிப்பது.... காதலிக்காக காதலன் காத்திருப்பதும், தன் வயிற்றுப் பிள்ளையைக் காண கர்ப்பிணி ஆவலோடு பார்த்திருப்பதும், நாள் குறித்தபின் திருமணத்துக்காகக் காத்திருப்பதும், மொட்டாக இருக்கும் ரோஜா மலர்வதற்காகக் காத்திருப்பதும், புதுமணத் தம்பதிகள் இரவுக்காகக் காத்திருப்பதும்....இப்படி பல காத்திருப்புகள் இனிமையானவை, சுவையானவை, உள்ளத்தோடு உரசி, நெஞ்சத்தோடு கதை பேசுபவை!

இங்கேயும் காத்திருந்தாள் பாஜி, எலக்‌ஷன் ரிசல்ட்டுக்காக! எல்லாரும் எதிர்பார்த்தது வீண் போகவில்லை.... முடிவு, வெற்றி, வெற்றி, வெற்றி தான்!

வாழ்த்து சொல்ல எல்லாரும் அவள் வீட்டுக்கு விரைந்தார்கள். எல்லாருக்கும் இனிப்பு கொடுத்து கொண்டாடினாள்.

"பாஜிக்கா.... உங்க அக்கா ரெண்டு பேரும் கவர்ன்மெண்ட் சர்வெண்ட் தான்.... ஆனா, கவர்ன்மெண்ட்டே நீங்க தான்! கன்கிராட்ஸ்!" சுஹைனா சொல்ல, முகமெல்லாம் பூரிப்பு பாஜிக்கு!

பாஜியும் கமாலும் நல்ல விஷயங்களில் கவனம் செலுத்தி, தொகுதிக்கு பல சவுகரியங்களைப் பெற்றுத் தந்தனர். அதில் ரோடு வசதியும் ஒன்று! கமால் எல்லாவற்றையும் துடிப்போடு செய்ய, பாஜி அதற்கு பக்கபலமாக இருந்தாள்.

மர்ஜியின் மகன் ஆரிஃப், சண்டி சண்டி நடக்க ஆரம்பித்தான். அதற்கென்று இருக்கும் பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண் வாங்கினான். மர்ஜியின் மற்ற இரு பிள்ளைகளும் மர்ஜி வேலை பார்க்கும் ஸ்கூலிலேயே படித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆப்பியின் மகளும், பாஜியின் மகனும் கான்வெண்ட்டில் படித்தார்கள். அவர்கள் இருவருமே நன்றாக படித்து, படிப்பில் முதல் மதிப்பெண்ணே எப்போதும் வாங்குவார்கள்.

பாஜிக்கு தனக்கென ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்று ரொம்ப ஆசை! தற்போது, மாமியார் வீட்டின் மேல் மாடியில், சிறு ஓட்டு வீடொன்று கட்டி குடியிருந்து வந்தாலும், பையன் வளர்ந்து விட்டதால், அந்த சிறிய வீடு போதவில்லை.... அதனால், தனக்கென பிரிந்த பாகத்தில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்று அவளுக்கு ஆசை!

"ஏங்க எப்படியாவது லோன் போட்டு வீடு கட்டிடலாம்ங்க" பாஜி

"நானும் அதைத்தான் பாஜி நினைச்சிக்கிட்டு இருந்தேன்" கமால்...

"ஒரு ரூம், ஒரு ஹால், ஒரு கிச்சன் வெச்சு ரெண்டு வீடு கட்டலாம்ங்க, அதில ஒன்னுல நாம குடியிருந்துக்கிட்டு, இன்னொன்ன வாடகைக்கு விட்டுரலாம்"

"நீ சொல்லுறது சரி தான் பாஜி! அப்பத்தான் அந்த வாடகையை வாங்கி, கூட போட்டு லோன் கட்ட முடியும்"

கட்சியில் இருந்ததால், சீக்கிரமே லோன் ரெடி செய்து விட்டார்கள். அழகாக ப்ளான் போட்டு, குறைந்த பட்ஜெட்டில், சின்னதாக, சிக்கனமாகக் கட்டி விட்டார்கள்.

பால் காய்ச்சி, சாமானெல்லாம் மாற்றி போய் செட்டில் ஆனதும், ஒரு நாள் எல்லாரையும் பாஜி விருந்துக்கு அழைத்தாள். சுஹைனா, சைதா, மர்ஜி, ஆப்பி, ராசிதா எல்லாரும் அங்கு ஒன்று கூடியிருந்தார்கள்.

பாஜி, தன்னுடைய பாகத்தில் வீட்டைக் கட்டி இருந்தாலும், மர்ஜி மற்றும் ஆப்பியின் பாகம் அப்படியே தான் இருந்தது! அவர்கள் வாழ்ந்த வீடு மர்ஜி, ஆப்பியின் பாகத்தில் இருந்ததால் அது வீடு கட்டுவதற்காக அழிக்கப்படவில்லை! அதை வாடகைக்கு விட்டிருந்தார்கள்!

"பாஜி! எல்லாரும் ஒன்னுகூடியிருப்பது சந்தோஷமா இருக்கு" சைதா.

"ஆமா சைதாக்கா, இன்னிக்கு இவ்ளோ கலகலப்பா நோன்பு நாள் மாதிரி இருக்கு!" பாஜி.

"சுஹைன்! உன் படிப்பெல்லாம் எப்படி போகுது?" மர்ஜி

"நல்லா போயிட்டிருக்கு மர்ஜிக்கா! ஆப்பிக்கா, உங்க பொண்ணு எங்க வரலையா?" சுஹைனா.

"தோ வந்திருக்காளே! லைனுக்குள்ள விளையாட போயிருப்பா!"

"இன்னிக்கு நீங்க மூணு பேரும் நல்லபடியா செட்டில் ஆயிட்டீங்க! கச்சக்காவும் பாத்திமா மம்மாணியும் இருந்திருந்தா, ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க" சைதா.

"ஆமா...சைதாக்கா...எங்கம்மா பட்ட கஷ்டத்துக்கு ஆண்டவன் இன்னிக்கு மூணு பேரையும் நல்லபடியா வெச்சிருக்கான்!"

"அக்கா...மூணு பேருன்னு சொல்லாதீங்க அக்கா.... நாம நாலு பேரு" ராசிதா சொல்ல, மூவரும் அவளை வாஞ்சையோடு பார்த்தார்கள்.

எல்லாருடைய மழலைச்செல்வங்களும் ஒரு ஏழெட்டு பேர் இருக்கும், கிணற்றடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களை பார்ப்பதற்காக வெளியே வந்தனர்.

வெளியே வந்ததும், கச்சாமா வாழ்ந்த கடைசி வீட்டைக் கண்டு சைதாவின் கண்கள் கலங்கி விட்டன. பாத்திமா வாழ்ந்த முன் வீட்டைக் காண ஆவலாக இருந்தது!

"எல்லாரும் வாங்க...பழைய வீட்டைப் பார்த்துட்டு வரலாம்"

வேறொருவர் வாடகைக்குக் குடியிருந்தாலும் அனுமதி பெற்று உள்ளே போனார்கள்.

உள்ளே நுழைந்ததும் வலது புறம் இருந்த ப்ளஸ் அவுட்டாக மாறி நின்ற அன்றைய எடுப்பு கக்கூஸையும், அருகில் இருந்த செடிக்குழியையும் பார்த்தபடியே உள்ளே சென்றார்கள்.

வாசல், திண்ணை, திண்ணையின் ஓரத்தில் முன்பு டிரங்க் பெட்டி வைத்திருந்த சிறிய கொட்டறை, உள்திண்ணை, அங்கே தரையில் சிமிட்டியில் போட்டிருக்கும் தாயக்கரம், ஆயிரம் கனவுகளை சுமந்து நிற்கும் ஆஜாரம், எண்ணங்களை சிறகடிக்க வைத்த ரேடியோ ரூம், உள்திண்ணை, இன்று சுத்தமாக இருந்தாலும், கவுத்து கட்டிலும், ஒட்டடையுமாக கிடந்த அன்றைய உள்ளறை, குட்டியூண்டு சோறாக்கூடு, சின்ன வாசலும் அருகே பொடக்கானியும்..... எல்லாவற்றையும் பார்த்தபடியே வந்தார்கள்.

சின்னஞ்சிறு சிட்டுக்களாகத் துள்ளி விளையாடிய இடம்! கண்ணாமூச்சி விளையாட்டில் ஒளிந்த கதவுச்சந்து! மவுத்தாப்போன கச்சாமாவும், மீரான் சாயபும், பாத்திமாவும் கிடத்தி வைக்கப்பட்டிருந்த திண்ணை! வெளியுலகத் தொடர்புக்கென உள்ளறையில் இருக்கும் ஒற்றை சன்னல்! அவரவர் தத்தம் பொக்கிஷங்களை சேகரித்து வைத்திருந்த அலமாரிகள்! அதிகாலைக் குளிரில், கைகால் அலம்ப தண்ணீர் மெத்தும் உள்வாசல் தண்ணீர் தொட்டி! யாரிடமும் வெளியிடாத உண்மை நண்பனாய் பல ரகசியங்களை சுமந்து நிற்கும் சுவர்கள்!

மனிதர்கள் மாறிவிட்டாலும், நினைவலைகள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி இருக்கின்றனவே! கச்சாமா பட்ட வேதனைகளின் சுவடுகள் ஆங்காங்கே பிரதிபலித்தது! அதோடு, இம்மூன்று பிள்ளைகளுக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்த பாத்திமாவின் உருவம், அவள் உருவத்தின் வடிவம், அந்த தாயின் கனவு, அங்கு ஒவ்வொரு இண்டு இடுக்கிலும் தெரிந்தது....!

பசுமையான பழைய நினைவுகள் தந்த மனபாரத்தால், ஒவ்வொருவரும் தம்முடைய கண்ணீர் துளியை பிறர் அறியாமல் துடைத்துக் கொண்டனர்! உதடு சிரித்தாலும் உள்ளம் ஏனோ, பலப்பல ஞாபக அலைகளின் வேகத்தால் உந்தப்பட்டு அழுதது! நினைத்ததை நடத்திக் காட்டிவிட்ட மந்தகாசத்தில் காலம் அவர்களைப் பார்த்து சிரித்தது!

(முற்றும்)

-சுமஜ்லா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!