ஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்


Posted: 21 Dec 2009 09:25 AM PST
பதிவர் சந்திப்பில் நிஜமாகவே நான் கலந்து கொள்வேன் என்று சிறிதும் நினைக்கவில்லை. அதற்கு பல காரணங்கள். நேற்று அவசர அவசரமாக சுடச்சுட விவரங்கள் தர வேண்டும் என்று பதிவிட்டதால், சில சுய விவரக் குறிப்புகளைத் தர முடியவில்லை.

நான் கொஞ்சம் நாட்களாக பதிவுலகில் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை, காரணம் என்னுடைய படிப்பு என்பது என்னுடைய ரெகுலர் வாசகர்களுக்குத் தெரியும்.

ஒரு நாள் கதிர் சார் அவர்கள், இது குறித்து எனக்கு மெயில் அனுப்பி இருந்தார். பிறகு தான் எனக்கு இப்படி ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதே தெரிந்தது.

அவருக்கு போன் செய்த போது, இடம் இன்னமும் முடிவாகவில்லை, முடிவானபின்பு மெயிலில் தெரிவிப்பதாக சொன்னார். சரி, இது பற்றி எழுதியிருக்கும் இடுகைகளைப் படிக்கலாம் என்று அலசினேன்...! அதில் வாலும், இன்னும் ஒருவரும் எழுதியிருந்த இடுகைகளைப் படித்த போது, 'சிகப்பு கம்பள வரவேற்பு', 'திராட்சை ரசம்' போன்ற வார்த்தைகளைப் படித்து சற்று பின் வாங்கி விட்டேன் என்பது தான் உண்மை!

அதனால், அது பற்றி அதிகம் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை....! அதோடு, போன வாரம், தொண்டைவலி, காய்ச்சல்! அப்போது தான் கதிர் அவர்கள், இது பற்றி என்னுடைய ப்ளாகில் ஒரு இடுகை எழுதி, இதை என் வாசகர்களுக்குத் தெரியப்படுத்த சொன்னார். நான் அந்த இடுகையும் எழுதவில்லை. அதற்குக் காரணம், அவ்வாறு இடுகையிட்ட பின்னர், நானே செல்ல முடியாத சூழ்நிலை வந்தால், எனக்கு அது பெரும் ஏமாற்றமாக இருக்கும். அதோடு, போன வாரத்தில், என்னவரோடு சிறு ஊடல் வேறு! அவ்வாறு இருக்கையில், இது பற்றி அவரிடத்தில் மூச்சு கூட விடவில்லை(மூஞ்சியைத் தூக்கி வைத்திருக்கும் போது, மூச்சாவது பேச்சாவது?).

என்னவர் அனுமதி பெறாமல், நான் எக்காரியத்திலும் இறங்க மாட்டேன். அதனால், இது பற்றி அதிகம் எந்த ஒரு பரபரப்பும் என்னிடம் இல்லை. அப்போதான் கதிர் எனக்கு மெயில் செய்திருந்தார். கூட்டத்தில் ஒரு ஐந்து நிமிடம் பேச வேண்டும் என்று அன்பாக வேண்டுகோள் விடுத்திருந்தார். நான் என்ன சொல்வது? வருவதே இங்கு நிச்சயமில்லை, அங்கு பேசுவதாவது? நான் என் உடல் நிலை சரியில்லை(உண்மையில் மனநிலையும் தான் சரியில்லை) சரியானவுடன் மெயில் செய்கிறேன் என்று பதிலிட்டேன்.

பிறகு, மீண்டும் எனக்கு போன் செய்தார் கதிர். அதில், 'சிகப்பு கம்பள வரவேற்பு' பார்த்து பயந்து விட்டேன் என்று கூறினேன். அது போன்ற விஷயங்கள் இருக்காது, ரொம்பவும் டீசண்ட்டாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம் என்று உறுதியளித்தார். அதன் பிறகு தான் சனிக்கிழமை, இவ்விழா பற்றி அவசர அவசரமாகக் கட்டுரையிட்டேன்.

இஸ்லாமிய பாரம்பரியப்படி வளர்க்கப்பட்டு, அதே சூழ்நிலையில் வாழ்க்கைப்பட்டிருக்கும் என் போன்ற பெண்களால், டிரிங்க்ஸ் என்ற வார்த்தையைக் கூட ஜீரணிக்க முடியாது. எந்த ஒரு சைட்டில் அது பற்றி எழுதிகிறார்களோ, அந்த ப்ளாகையே நான் டோட்டலாக ஒதுக்கிவிடுவது வழக்கம். எங்கள் குடும்பத்திலோ, நெருங்கிய உறவு வட்டத்திலோ, யாருக்கும் அதன் வாடை கூட பிடிக்காது என்பதும் ஒரு காரணம்.

ஆக, ஒரு நான்கு நாட்கள் ஆயிற்று. ஊடலுக்கு பின்னால் கூடல் என்ற பழமொழிக்கேற்ப, சமாதானம் ஆனபின் எப்போதும் கொஞ்சம் அன்பு ஜாஸ்த்தியாகத் தானே இருக்கும். இங்கேயும் அவ்வாறிருக்க, அட, இது தான் சாக்கு என்று அவரிடம் மெதுவாக சொன்னேன், சனிக்கிழமை மாலை. சொன்னதும் ஒப்புக் கொண்டதோடு, தானும் வருகிறேன் என்று சொன்னது தான் இமாலய ஆச்சரியம். பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்த கதை தான்.

சந்தோஷத்தோடு, நான் கிளம்ப முற்படுகையில், கதிர், ஒரு ஐந்து நிமிட பேச்சுக்காக தயாரிப்புடன் வர சொன்னார். பேசுவது ஈஸி தான். ஆனா, நம் கருத்துக்களை ஐந்து நிமிடத்துக்குள் முடிப்பது ரொம்பவும் கஷ்டம். ஒரு பேப்பரில் சில குறிப்புகள் எடுத்துக் கொண்டேன். ஆனாலும் அதில் முக்கியமான விஷயங்களைக் கூற முடியவில்லை.

ஞாயிறு காலை, ஒரு திருமணத்துக்குப் போய் விட்டு, 12 மணிக்குத் தான் வீட்டுக்குத் திரும்பினேன். ஒரு சிறு தூக்கம் போடலாமென்று படுத்தால்....ம்...ஹூம்...மனசுக்குள்ள ஒரு பரபரப்பு தொத்திக்கிச்சு....!

என்னை பேசச் சொல்லி இருக்காங்கன்னு அவர்கிட்ட மெதுவா சொன்னேன்...எனக்கு பயம் வேற, எங்கே வேண்டாம்னு சொல்லிடுவாரோ என்று! ஆனா, அவரோ காசுவலாக எடுத்துக் கொண்டார். நான் எந்த அளவுக்கு ப்ளாக் பைத்தியமென்று அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால், சந்தோஷமாக என்னோடு ஒத்துப் போனார். பில்டர்ஸ் அசோசியன் ஹால் செல்ல, வழி சொல்லி, ரூட் எல்லாம் போட்டுக் காண்பித்தார். மறக்காமல் கேமரா எடுத்துக் கொள் என்று சொல்லியதோடு, பேட்டரிகளை சார்ஜ் போட்டு வைத்தார்.

மாலை 3.30 மணி இருக்கும் நான் கிளம்பிக் கொண்டிருந்தேன். திடீரென்று என் மகன் நானும் வருவேன் என்றான். இவனை அழைத்துப் போனால், திடீரென்று பாதியில், வீட்டுக்கு போகலாம் என்று அடம் பிடித்தாலும் பிடிப்பான், அதனால், நீங்கள் தனியாக உங்கள் வண்டியில் வந்துவிடுங்கள், நான் முதலில் போகிறேன், அவன் அடம் பிடித்தால், நீங்கள் திரும்ப அழைத்துப் போக வசதியாக இருக்கும் என்றேன்.

கிளம்பும் அவசரத்தில் நான் இருந்த போது, 'இரு...இரு...இன்னிக்கு தேதி இருபது. நெட்டில் வாட் ரிட்டர்ன் ஃபைல் பண்ணனும்...பண்ணிட்டு போகலாம்' என்றார். நானோ, மணியைப் பார்த்தால், நாலுக்கு 5 நிமிடம் தான் இருந்தது. எப்போதும், எங்கேயும் சரியான நேரத்தில் போவது என் பழக்கம். தாமதமாக போவதை நான் வெறுப்பேன். இருந்தாலும்...சரி என்று அவருக்காக ஒரு ஐந்து நிமிடங்கள் ஒதுக்கி, ரிட்டர்ன் ஃபைல் செய்து விட்டு, 'நீங்கள் பையனை ரெடி பண்ணி கூட்டிட்டு வந்திருங்க' என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டேன்.

நான் முன்னால் போனதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அங்கே ஏதாவது ஹாட் டிரிங்க்ஸ் பார்ட்டி நடந்து கொண்டிருந்தால், அப்படியே திரும்பி விடலாம். அப்படி இருக்க, ஏன் அவரும் வேஸ்ட்டாக வர வேண்டும் என்று நினைத்தேன்.

போனா, நிறைய தலைங்க...முன்னாடியே நின்று டீ குடிச்சிட்டு இருந்தாங்க! எனக்கு மட்டும் பர்தா காரணத்தால், அறிமுகமே தேவைப்படல!

அப்புறம் என்ன நடந்ததுன்னு போன பதிவுல படிச்சிருப்பிங்க!

சில விஷயங்கள் மட்டும் நச்சுனு மனசுல நிற்கிறது!

என்னை பேசச்சொன்ன போது, டெக்னிக்கலா ரொம்ப டீப்பா போயிட்டேன். மொத்தத்தில் நம் பதிவுகளை பின்னூட்டத்தோடு சேவ் செய்து வைத்துக் கொள்ள எக்ஸ்ப்போர்ட் ப்ளாக் ஆப்ஷனை பயன் படுத்திக்கலாம் என்பதை சொன்னேன்.

முக்கியமா, நான் சொல்ல நினைத்து சொல்ல முடியாமல் போனது, டெக்னிக்கல் சமாச்சாரங்களை தவறாக சிலர் பயன்படுத்துவது பற்றி! இங்கே கூட, ஈமெயில் போஸ்ட்டிங் ஐடியை என்னுடைய ஃபீட்பர்னர், ஈமெயில் சப்ஸ்க்ரிப்ஷனில் கொடுத்திருக்கிறார் ஒருவர். அதன் மூலமாக நான் பதிவிடுவது அனைத்தும் அவருடைய ப்ளாகில் ஆட்டோமேட்டிக்காக ரீபப்ளிஷ் ஆகிக் கொண்டிருக்கிறது. http://asainayagi.blogspot.com/ என்பது தான் அந்த ப்ளாக். இது போல இன்னும் சிலர் அனுமதியில்லாமல் அத்துமீறி டெக்னாலஜியைப் பயன்படுத்துகிறார்கள். இது பற்றி ப்ளாகரிடையே விழிப்புணர்வு வேண்டும்.

நேற்று காலை கூட எனக்கு மின்னஞ்சல் லின்க் மூலமாக ஒரு ஈமெயில் வந்தது. அதில்... 'Dont think too proud of yourself' என்று பெயரில்லாத அன்பர் ஒருவர் அனுப்பி இருந்தார். அவர் யார் என்று அதற்கு பிறகு நான் கண்டுகொண்டாலும், ஏன் அவருக்கு விளம்பரம் தேடித் தர வேண்டும் என்று அதை இங்கு குறிப்பிடவில்லை. அனானிகள் பற்றி பேசிக் கொண்டிருந்த போது, இதை நான் சொன்னதற்கு, லதானந்த் அவர்கள், 'இவ்வாறு அனுப்பி இருப்பதே உங்களுக்கு பெருமை தான், இதற்கு ஏன் கவலைப் படுகின்றீர்கள்' என்றார்.

மொத்தமாக நான் சொன்னது, அனானிக்கள் திட்டும் அளவுக்கு நான் பதிவிடுவதில்லை. சினிமா, அரசியல், பாலிடிக்ஸை எல்லாம் நான் தொடுவதில்லை. இதையெல்லாம் விட்டு விட்டால், பதிவிட என்ன இருக்கும் என்று கூட சிலர் நினைக்கிறார்கள். நம்முடையது எல்லாம் கிரியேடிவ் லிட்டரேச்சர் வகை தான். தேவையில்லாமல் வம்புக்கு இழுப்பது, அடுத்தவரை தாக்கி பதிவிடுவது எல்லாம் எனக்கு பிடிக்காத விஷயங்கள். அப்படியும் ஒரு சில அனானிக்கள் எழுதுவதுண்டு. அவர்களுக்கு நான் எப்போதும் பதிலிடுவதில்லை. அந்த பின்னூட்டத்தை அப்படியே தூக்கி விட்டு போய்க்கொண்டே இருப்பேன்.

பரிசல்காரன், ரொம்ப டீசண்ட்டாக இருந்தார். நல்லதொரு குடும்பத்தில் பிறந்து நல்லபடியாக வளர்க்கப்பட்டிருக்கிறார் என்று எனக்கு தோன்றியது. வால் பையன் உண்மையில் சிறு பையன் என்று நினைத்தேன். நான் நினைத்தது தவறு என்று அங்கு பார்த்துத் தெரிந்து கொண்டேன். முருக.கவி என்ற பெயரில் எழுதும் கவிதாராணி என்னும் பி.வி.பி. பள்ளியில் ஒர்க் பண்ணும் தமிழ் ஆசிரியையை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

வெயிலான் என்ற பேரைக் கேட்டாலே, இனி அவர் சொன்ன சேனைகிழங்கு என்னும் அனானி தான் நினைவுக்கு வரும். ஒருவர் தம் ப்ளாகுக்கு அப்பன் என்று பெயர் வைத்திருக்கிறேன், இனி தான் எழுதணும் என்றார். தண்டோரா அவர்கள் பட்டையடித்து(நெற்றியில் இடுவதுங்கோ) வந்திருந்தார். அவரும் என்னை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். நிறைய புது பதிவர்கள், அதில் பல பேர் பேசவே இல்லை.

அமீரகத்து அன்பர்கள் சொன்னது 'உங்க ப்ளாக் அங்க நல்லா ரீச் ஆகி இருக்கு! எல்லாருக்கும் உங்களை நன்றாகத் தெரியும். பொதுவா முஸ்லிம் லேடீஸ் யாரும் அதிகமா எழுதறது இல்ல. ஜஸீலா, ஹுசைனம்மா இப்படி ரெண்டு மூன்று பேர் இருக்காங்க, ஆனாலும், இந்த மாதிரியான கூட்டங்களுக்கு, ஜஸீலாவைத்தவிர யாரும் வருவதில்லை. இங்க, நீங்க, அதுவும், இந்தியாவில இருந்து ஒரு பெண் இந்தளவுக்கு எழுதறீங்கன்னா, அது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விஷயம். இப்ப, நீங்க பிஸியா இருக்கறதுனால, எப்பலாம் டைம் கிடைக்கிறதோ, அப்பலாம் எழுதுங்க, நீங்க விட்டு விட்டு பதிவு போட்டாலும், உங்க வாசகர்கள் தேடி வந்து படிப்பாங்க. அதுவும், நீங்க போடற டெக்னிக்கல் பதிவுக்கு நல்ல வரவேற்பு இருக்கு' இவ்வாறு சொன்னார்கள். மனம் நிறைவாக இருந்தது.

எனக்கு முதலில், சற்று நேரம் வரை வால் பையன் யார் என்று தெரியவில்லை. அவர் ஈரோடு என்பதும், அவர் பெயர் அருண் என்பதும் எனக்குத் தெரியும். அவரவர் தம்மை அறிமுகம் செய்து கொண்ட போது, இவர் தம் பெயரைச் சொல்லாமல், என்னைப் பற்றி என் நண்பர் சொல்வார் என்று கூறி விட்டார். நண்பரும் எதுவும் சொல்லவில்லை. பிறகு, பார்த்தால், கசமுசாவென்று இடையிடையே அவர் பேசிக் கொண்டே இருந்தார். எனக்கு சத்தியமாக அவர் தான் வால்பையன் என்று தெரியவில்லை.

நான் மேடையில் அப்போது அமர்ந்திருந்தேன். யார் இந்த அதிகப்பிரசங்கி? ஏன் இவரை உள்ளே விட்டு வைத்திருக்கிறார்கள்? என்ற எண்ணம் ஒரு புறம் ஓடிக் கொண்டிருந்தது. அதே சமயம், எல்லாரும் இங்கே இருக்கிறார்களே, வால்பையன் மட்டும் ஏன் வரவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வெகு நேரம் கழித்து, இவர் தான் வால்பையன் என்று தெரிந்த போது, இந்த உண்மை கடைசிவரை தெரியாமலே போயிருக்ககூடாதா... என்று தான் எனக்குத் தோன்றியது.

கடைசியில், ரம்யாவிடம் மெயில் ஐடி கேட்ட போது, என்னிடம் ரொம்பவும் சுவாதீனமாக, என்னிடம் இருக்கிறது, உங்களுக்கு சேட்டிங்கில் தருகிறேன் என்றார் வால்பையன். இதில் காமெடி என்னவென்றால், வால்பையன் ஐடியே எனக்குத் தெரியாது. அவரிடம் மட்டுமல்ல, யாரிடமும் நான் சேட்டிங் செய்வதே இல்லை. ரொம்ப க்ளோஸாக இருக்கும் ப்ரெண்ட்ஸ் அதுவும் லேடீஸ் என்றால், ஆடிக்கொரு முறையாக நலம் விசாரித்துக் கொள்வோம் அதோடு சரி!

மற்றவர்கள் எல்லாரும், அவர்கள் பர்சனல் லைஃப் எப்படியும் இருக்கலாம்...புட்டி, குட்டி என்று எந்த மாதிரியும் இருக்கலாம்... ஆனால், ஒரு அரங்கத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொண்டார்கள். அதுவே மனதுக்கு மிகவும் நிறைவாக இருந்தது.

ஒரு மணி நேரம் இருந்து விட்டு கிளம்பி விட வேண்டும் என்று சென்றவள், நிகழ்ச்சி முடியும் வரை இருந்து, விருந்தும் சாப்பிட்டு வந்தது, உண்மையில் அந்த சூழ்நிலையில் மனம் ஒன்றியதால் தான். கிளம்பி வரவே மனமில்லை. என்னமோ, நம் உறவுகளையே பார்த்தது போல இருந்தது. பதிவு என்னும் குடும்பத்தில் நாமெல்லோரும் அங்கத்தினர் தானே?!!

பதிவர் சந்திப்பால் என்ன பயன் என்று ஒரு பேச்சு வந்தது. நிறைய பேரை பதிவுலகத்துக்கு வர வைக்கணும். பதிவிடாதவர்களையும் பதிவிடத் தூண்டணும் என்று பேசினார்கள். உண்மை தான். என்னுள் உறங்கிக் கொண்டிருந்த பதிவர், விழித்திருக்கிறார். மீண்டும் பழையபடி பதிவிட வேண்டும் என்ற ஆர்வம் இது போன்ற விழாவால் தானாகவே உண்டாகிறது.

கடைசிவரை மச்சானும் பொறுமையாக கடைசி வரிசையில் அமர்ந்திருந்து, எல்லாவற்றையும் ரசித்தார். சில பதிவர்கள் அவரிடம் வந்து, உங்க மனைவி நல்லா எழுதறாங்க, அவங்கள ஊக்கப்படுத்துங்க என்று சொன்னார்கள். அனானி பற்றிய விவாதத்தில், மனைவியே தன் கணவனுடைய பதிவில் அனானியாக பின்னூட்டமிடுவார் என்று ஒருவர் சொன்னதைக் கேட்டு என்னவர் பெரிதும் ரசித்து வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தார். எனக்கென்னமோ சந்தேகமாக இருக்கிறது, என்னைத் திட்டி பதிவிட்ட ஓரிரு அனானியும் இவராக இருக்குமோ என்று?!!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!