அரபு சீமையிலே... - 13


Posted: 26 Dec 2009 06:40 AM PST
மாதவத்தால் வந்துதித்த
மாணிக்கமாம் முகமதுவை
சாதகமாய் மணமுடிக்க
சம்மதத்தை வேண்டியந்த
மாதவரும் குடும்பத்திலே
பெரியராம் அபுதாலிபிடம்,
தூதுவிட்டார், துயரம் விட்டார்
இனிய நாளில் மணம்முடித்தார்.

முகமதுக்கு இருபத்தைந்து வயது,
கதிஜாவின் வயதோ நாற்பது!
இவரை எங்ஙனம் ஏற்பது?
என தயங்கவில்லை முகமது!
ஏற்றிட மலர்ந்தது கதிஜாவின் முகமது!!

ஐநூறு தினார் தங்ககாசும்
இருபது பெண் ஒட்டகையும்
என மஹர் கொடுத்து மணம்முடித்தார்,
மனிதர் குல புனிதர் நபி!

செவிலித்தாய் ஹலிமாவையும்
நன்முறையில் உபசரித்து,
பரிசாய் பல கால்நடையும்,
அன்பளிப்பாய் உவந்தளித்தார்.

பெண்ணினத்தின் கண்மணியாய்,
வியனுலக நன்மலராய்
ஒருமித்த தாம்பத்யம் - என
ஒழுகி நின்றார் கதிஜாவும்!!

காஸிம், அப்துல்லாஹ்
என்ற இரு ஆண்மக்களும்,
ஜைனப், ருகையா
உம்முகுல்தூம், பாத்திமா,
என்று நான்கு பெண்மக்களும்,
கதிஜாவின் மணிவயிற்றில்
உதித்து வந்த கண்மணிகள்.

ஆண்மக்கள் இருவருமே,
இறப்பெய்த சிறுவயதில்,
பெண்மக்கள் நால்வருமே,
சிறப்பாக வாழ்ந்தனரே!

விக்கிரக வணக்கமும்,
வீணான பழக்கமும்
மது அருந்துவதும்,
மாதரை முயங்குவதும்
சூதில் மூழ்கியும்,
தீதில் திளைத்தும்
மக்கா நகர மக்கள்
இருந்த நிலைகண்டு
வருத்தம் மிக கொண்டார் நபி!!

மனசாட்சியும்,
அறிவாராய்ச்சியும்,
காட்டிய வழியில்
நாட்டங்கள் கொண்டார்!

பரம்பொருள் கருணையை
சிரமதில் கொள்ள,
பெருவழி காண
அருந்தவம் புரிந்தார்!!

அழகிய ரமலான் மாதத்தில்,
பழகிய ஹீரா குகை சென்று,
விலக்கிட உணும் உறக்கங்களும்,
துலங்கிட்டார் தவத்தின் பயனாக!

நான்கு உயர் கோத்திரத்தார்,
அந்நாளில்,
யாங்கு காபாவை புனரமைக்க,
ஹஜ்ருல் அஸ்வத் புனிதகல்லை,
அதனிடத்தில் இனிதாய் பொருத்த,
தக்க நபர் யாரென்று,
சிக்கல் மிகக் கொண்டனரே!!

முற்றியது சண்டை!
பிடித்து கொண்டனர் சிண்டை!!

பிறந்திட ஓர் விடிவு!
எடுத்தனர் நல்ல முடிவு!!

முதல்வராய் காபாவரும்,
புதல்வர் புகல்வதை கேட்க,
கோத்திரத்தார் யாவருமே
காத்திருந்தனர் காபாவில்!!

வந்தார் முகமது!
தந்தார் முடிவது!!

போர்வையில் கல்லைவைத்து
சேர்த்தெடுத்து செல்லசொல்ல,
தீர்வையில் அகமகிழ்ந்து
ஓர்மையாய் செய்தனர் மக்கள்!!

நல்லவரில் நாயகரை
சண்டை தீர்த்த நல்லவரை,
புனித கல்லை பதித்து தர
இனிதுடனே இயம்பி நிற்க,
அங்கந்த கல்லைதம்
செங்கரத்தால் பதித்தாரே!
அங்கமெல்லாம் பேருவகை
அந்த மக்கள் பெற்றனரே!!

-சுமஜ்லா.

(வளரும்)


Posted: 25 Dec 2009 08:00 PM PST
இந்த இடுகை நேற்றே எழுதியிருக்க வேண்டும். ஒரு நாள் லேட்டாகி விட்டது!

கிருஸ்த்துமஸ் நெருங்கி விட்டாலே, சின்ன வயதில், என் மனதில் சந்தோஷம் நிரம்பி விடும். அதற்கு மூன்று காரணங்கள் - முதலாவது, அதைத் தொடர்ந்து வரும் அரையாண்டு பரிச்சை விடுமுறை, அடுத்து கிருஸ்த்துமஸுக்கு அடுத்த மூன்றாவது நாள் வரும் என்னுடைய பிறந்த நாள், அடுத்து வேண்டுமட்டும் தின்னக் கிடைக்கும் கேக்கும், கேக்குத்தூளும்!

கேக்கை விட, இந்த கேக்குத்தூள் எனக்கு மிகவும் பிடிக்கும்... பாக்கிட் பாக்கிட்டாக அப்பா வாங்கி வருவார். அதில் பல டேஸ்ட்டுகள் கொண்ட கேக்குகள், சிறு சிறு கட்டிகளாக இருக்கும்! விரும்பியவரை அதை சாப்பிட்டு விட்டு, பல நேரங்கள் சாப்பாடே வேண்டாம் என்று சொல்லி விடுவேன்!

இப்போது, நான் படித்த அதே பள்ளியில் டீச்சிங் ப்ராக்டிஸ் போய்க் கொண்டிருக்கும் வேளையில், அங்கு போன வாரம் கிருஸ்த்துமஸ் கொண்டாடினார்கள். தீபாவளிக்கு இந்து டீச்சர்ஸும், கிருஸ்த்துமஸுக்கு கிரிஸ்டியன் டீச்சர்ஸும் ஏற்பாடு செய்கிறார்கள்.

டீச்சிங் ப்ராக்டிஸ் ஸ்டூடண்ட்ஸ் மொத்தம் ஆறு பேர்! அதில் மூவர் இந்துக்கள், இருவர் இஸ்லாமியர், ஒருவர் கிரிஸ்டியன் என்று என்ன ஒரு சமத்துவம் பாருங்கள்.(பாகிரதி, சுதா, தேன்மொழி, சுஹைனா, இல்ஹாம், அருள்செல்வி)

அங்கு, கிருஸ்த்துமஸ் கொண்டாட்டத்துக்கு எங்களை அழைக்க மறந்து விட்டார்கள். எங்களுக்கு சொல்ல முடியாத வருத்தம். இல்ஹாமோ அழுதே விட்டாள். அன்று மாலை, கிருஸ்டியன் டீச்சர்ஸின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். அதோடு அவர்கள் அளித்த டின்னர்!

நாங்கள் அனைவரும் முதல்நாள் வரை அழைப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து, ஏமாந்து, மனம் வெதும்பி போயிருந்தோம். அன்று காலையில் முகமே வாடிப் போய் விட்டது!

டூட்டி முடிந்து லன்ச்சுக்காக ரூமுக்கு வந்தால்...அழகான கிருஸ்த்துமஸ் கேக் அங்கே!

கேக் சாப்பிட்டதும், பப்ஸ், அடுத்து பால்கோவா! எல்லாம் அருள்செல்வியின் ஏற்பாடு!

பாகிரதி, அருமையான சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்திருந்தார். நான் புரோட்டாவும் சாப்ஸும் கொண்டு போயிருந்தேன். ஒரே தம்மா...கும்மா தான் அன்று! எல்லாரும் டீன் ஏஜுக்கு திரும்பி விட்டிருந்தோம்! மற்ற டீச்சர்ஸை விட அதிகம் கொண்டாடியது நாங்களாகத்தான் இருக்கும்!!!

எல்லாருடைய டிபனும் அன்று திறக்கப்படாமலே திரும்பிப் போயிற்று!

முகத்தில் கிரீமைப் பூசிக் கொண்டு ஆட்டம் போட்டது மறக்க முடியாத நினைவாக அமைந்து விட்டது! அருள் இந்த ஏற்பாட்டை சஸ்பென்ஸாக செய்திருந்ததால், அன்று கேமரா கொண்டு போயிருக்கவில்லை...இல்லாவிட்டால், அந்த அழகு கோலங்களை உங்களுடன் பகிர்ந்திருப்பேன்!

அரைப்பரிச்சை லீவ் என்ற சந்தோஷத்துக்கு பதிலாக, மீண்டும் பத்து நாட்கள் ஆகுமே, நாம் ஆறு பேரும் மீட் பண்ண, என்ற நினைவில், எங்கள் கண்கள் குளம் கட்டிக் கொண்டன.

( "அக்கா... நம்மளப் பற்றி ஒரு ஆர்ட்டிக்கிள் எழுதுங்கக்கா... "என்று தேன்மொழி ஆசைப்பட்டதற்காக இந்த பதிவு!)

அனைவருக்கும் (தாமதமான) கிருஸ்த்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!