ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்


Posted: 29 Dec 2009 04:53 AM PST
மனிதர்களின் உண்மை முகங்களை புரிந்து கொள்ள எனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாகத்தான் நான் இந்த சச்சரவுகளை நினைக்கிறேன்.

முதலில், நான் புரிந்து கொண்டது, இங்கு இந்துபெயரில் கமெண்ட் போடுபவர்கள் எல்லாம் இந்துக்கள் அல்ல; அதே போல இஸ்லாமியப் பெயரில் கமெண்ட் போடுபவர்கள் எல்லாம் இஸ்லாமியர்கள் அல்ல!

பத்து பேர் சேர்ந்து ஒரு யானைப்பார்த்து பன்றி என்றால் அது பன்றியாகத்தான் தெரியும்; அது மனிதர்களின் மனப்பான்மை! பர்தா விஷயத்திலும் நிகழ்ந்தது இது தான்! பின்னூட்டத்தில் பொறுமையாக பதில் தந்திருக்கிறேன், ஆனாலும் காதையும் கண்ணையும் பொத்திக் கொண்டு கத்துபவர்களை என்ன செய்ய முடியும்??? பேஜ் இம்ப்ரஷன் அதிகரிக்க, ஒரே நாளில் ஃபேமஸாக என்று எதிர் தாக்குதல் நடத்தி இருப்பார்களோ!

எந்தப்புறம் என்றாலும் கொம்பு சீவி விட ஒரு கூட்டம்! ஆனாலும், நான் பொறுமையாகத் தான் பதில் சொல்லி வந்தேன்! முந்திய என் பதிவில் இருக்கும் கவிதையின் உட்கருத்து கூட, பல பதிவர்கள் பல நேரங்களின் எனக்கு அளித்த பின்னூட்டத்தின் விளைவாகத் தான்! அசிங்கமாகத் திட்டி தனிமனிதத் தாக்குதலோடு வந்த பின்னூட்டத்தையெல்லாம் என்னால் வெளியிட முடியவில்லை; அதே சமயம் ஜீரணிக்கவும் முடியவில்லை! என்னை மோசமான வார்த்தைகளில் தாக்கி அவ்வளவு அசிங்கமாக...வக்கிரமாக...காது கூசும் வார்த்தைகள்! அதே போல மதத்தை விமர்சித்தும்....! அந்த பின்னூட்டங்களையெல்லாம் வெளியிட்டால், மதக்கலவரம் உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்கி, ஒரு சிலர் பதிவு எழுதி இருக்கிறார்கள்! அதையெல்லாம் நான் ஒரு பொருட்டாகவே நினைக்காமல் புறந்தள்ளி விட்டேன்! ஆனால், நான் பெரும்மதிப்பு வைத்திருந்த ஒரு சிலர் இந்தளவுக்கு தரம் தாழ்ந்து போவார்கள் என்று நினைக்கவில்லை!

அந்த பின்னூட்டங்கள் மற்றும் முஸ்லிம் பெண்களை வராகங்கள் என்றும் கரும்பன்றிகள் என்றும் சித்தரித்து வந்த கவிதைக்கான பதிலைத்தான் அந்த கவிதையில் கொடுத்தேன்! அது சம்பந்தபட்டவர்களுக்குப் புரியும்! தனியொருவரைத் தாக்கி விமர்சனம் எழுதி என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை! ஆகையால், உறைக்க வேண்டியவருக்கு தானாக உறைக்கட்டும் என்று பெயர் குறிப்பிடாமல் பொதுவாக எழுதினேன்! இதில் சம்பந்தப்படாத மாற்றுமத நண்பர்கள் மனத்தையும் இத்துடன் சேர்த்து புண்படுத்தி விட்டோமே என்று வருந்துகிறேன்!

என் தோழியர் பலரிடமிருந்து நிறைய மின்னஞ்சல்கள்! அதில் வயதில் மூத்த இலக்கியத்துறையில் இருக்கும் நான் மதிக்கும் ஒரு பதிவுலக அம்மையார் அனுப்பிய மெயில் இதோ:

'அன்பின் சுமஜ்லா,
உங்கள் குறிப்பிட்ட பதிவைப்படித்து உங்கள் துணிவையும்,நேர்மையையும்,பொறுமையையும் வியக்கிறேன்.இவ்வாறான சூழலில் எனக்கு அறச்சீற்றம் ஏற்பட்டு நிதானமிழந்திருப்பேன்.நீங்கள் அமைதியாக...நிதானமாக விளக்கியிருக்கிறீர்கள்.
அப்படி ஒரு மோசமான,வக்கிரமான கருத்தை வெளியிட்டவர்கள் உங்கள் பொறுப்பான,கண்ணியமான பதிலுக்குப் பாத்திரமானவர்கள் அல்ல.அவர்கள் விஷமத்தனமான சகதிகளை வாரி இறைப்பதையே பொழுதுபோக்காகக் கொண்டவர்கள்.

தாஙள் மட்டும் கோட்டும்,சூட்டும் போட்டுக் கொண்டு,''சேலை உடுத்தத் தயங்கறியே''என்று பாடும் ஆண் வர்க்கத்தின் வேறு வகைப் பிரதிநிதிகள் இவர்கள்.
பெண் எதை எப்படி எழுதினாலும் இந்த ஆணாதிக்க உலகம் அதை எள்ளலாகவே எடைபோடும்.

கட்டுண்டோம்;பொறுத்திருப்போம்;காலம் மாறும்.
வீணர்களுக்குப் பதில் தந்து பொழுதை விரயமாக்க வேண்டாம்- ஆனால் இந்தப் பதில் பதிவும் கூட அர்த்தச் செறிவுடன் தான் இருக்கிறது என்பது வேறு விஷயம்.
அன்பு வாழ்த்துக்களுடன்,'

இந்த சகோதரி ஒரு இந்து தான்! அவர் அனுமதி இல்லாமல், பெயர் வெளியிட விரும்பவில்லை! இது போல பல மின்னஞ்சல்கள்! தரக்குறைவான பதில் விமர்சனத்துக்கு பயந்து, பலரும் என்னை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டது, பதிவுலகம் எந்த திசையில் போய்க்கொண்டிருக்கிறது என்று எண்ண வைத்து, வேதனை தந்தது!

இஸ்லாம் சாந்தியும் சமாதானமும் போதிக்கும் சத்திய சன்மார்க்கம்! பலரும் நினைப்பது போல, அது வாளால் வளரவில்லை, இறைத்தூதரின் நற்குணத்தால் தான் வளர்ந்தது! இந்த சூழலை சாக்காக வைத்து, இதை மதச்சண்டையாக கொண்டு வர முயன்ற ஓரிரு இஸ்லாமியப் பெயரில் வந்த பின்னூட்டங்களையும் நான் அதன் காரணமாகத் தான் வெளியிடாமல் புறக்கணித்து விட்டேன்!

அடுத்து, குழந்தைக்கு எழுதிய தாலாட்டுப் பாடலுக்குக் கூட மைனஸ் ஓட்டு! அதுவும் கோகுலக்கண்ணனின் குறும்புகளை எழிலோடு சித்தரிக்கும் தாலாட்டுப் பாட்டைத் தழுவி எழுதியதற்கு! எனக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களாம்! சிரிப்பு தான் வருகிறது! எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஏன் என்னுடைய ப்ளாகுக்கு வர வேண்டும்?படிக்க வேண்டும்? இனி, மைனஸ் ஓட்டு விழுந்தால், எதிர் டீம் படிக்கிறார்கள் என்று புரிந்து கொள்வேன்!

அடுத்து சுகுணாதிவாகரின் பின்னூட்டம்! நிறைய பேர் நினைப்பது போல, இவரும் ஆனந்த விகடனில் எழுதும் சுகுணாதிவாகரும் ஒருவரே அல்ல என்று உடனே நான் அவருடைய ப்ரொஃபைல் பார்த்துத் தெரிந்து கொண்டேன்! சுகுணாவுக்கும் திவாகருக்கும் இருக்கும் இடைவெளியை வைத்தே சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம், அவர் யாரென்று! ஒரு அப்பாவியின் இமேஜ் கெடக்கூடாது!

அவர் சொன்ன அந்த கருத்துக்களையெல்லாம் நான் சரி என்று சொல்லவில்லை, சில விஷயங்கள் சரி...ஆனாலும் புனித நூலைப் பழித்து சொன்னதையெல்லாம்(அது எந்த மதத்தினுடையதாக இருந்தாலும் சரி) என் மனம் ஏற்கவில்லை! இது குறித்து நான் மேலும் கருத்துக்கள் சொன்னால், அதை அக்கு வேரு ஆணி வேராய் பிய்த்து ஆராய்ந்து புதுப் பிரச்சினையைக் கிளப்புவார்கள் என்பதால், மேற்கொண்டு பதில் தர விரும்பவில்லை! இத்தோடு விட்டு விடுகிறேன்!

எனக்கு இந்த பிரச்சினையால், பேஜ் இம்ப்ரஷன் கூடியுள்ளது, அதே போலவே எதிர்கருத்து சொன்னவர்களுக்கும் இருக்கும்! ஒரு நாளைக்கு 3000 பேஜ் இம்ப்ரஷன்ஸ்! அதில் 20 மைனஸ் ஓட்டுக்கள்... அதாவது ஒரு சதவீதம் கூட இல்லை! அப்போ மற்றவர்களெல்லாம் நடுநிலையாளர்கள் என்று தானே அர்த்தம்!

உண்மையில், நான் என் ப்ளாகுக்கென்று ஒரு தரம் வைத்திருக்கிறேன். எச்சூழ்நிலையிலும் அதை விட்டுக் கொடுத்தலில் எனக்கு விருப்பமில்லை! ஒவ்வொரு கவிதையோ, கட்டுரையோ எழுதியவுடனே, சைடில் இருக்கும் ட்ராப் டவுன் மெனுவில் அதை ரகத்துக்கு தகந்த மாதிரியாக இணைத்து விடுவேன். ஆனால், சாது மிரண்டால், கவிதையை இது வரை இணைக்கவில்லை என்பது கவனித்திருந்தால் தெரிந்திருக்கும்! காரணம் நிரந்தரமாக அது என் ப்ளாகில் இடம் பெறுவதில் எனக்கு விருப்பமில்லை! அதே போல, இந்த பதிவும், ஒரிரு நாட்களுக்குத் தான் இருக்கும் அதன் பின்பு இதை எடுத்து விடுவேன்!

எனக்கு பல ஆக்கப்பூர்வமான வேலைகள் இருக்கின்றன! இனி, இவ்விஷயத்தில் சொல்ல ஏதும் இல்லை! வழக்கம் போல என் மற்ற பதிவுகள் அவ்வப்போது வெளிவரும்! உண்மையை உண்மையென்று சொல்ல நான் என்றும் தயங்க மாட்டேன், அது கசந்தாலும் சரியே....!

-சுமஜ்லா.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!