Posted: 02 Jan 2010 08:15 AM PST " நன்னனா நன்னானா நன்னானா நன்னானா யேவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!"
வாய் ஆவென்று பிளக்க, சாதம் உள்ளே தானாய் இறங்குகிறது!
அவனுடைய பாஷையை, 'சோறு தான் திங்கறீயா? பிடிச்சிட்டு போகட்டுமா? யேவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!' என்பதாக மொழி பெயர்க்கிறார் அம்மா!
யார் அவன்? ஏன் அந்த ஆளைக் கண்டு பதுங்குகிறோம், நானும் தம்பியும்!
அந்த அவன் குடிகார முனியப்பன்...! எப்பவும் கத்திக் கொண்டே தான் போவான். அவன் போடும் கூப்பாட்டின் கடைசியில் ஒரு யேவ்வ்வ்வ்வ் என்று ஏப்பம் விடுவது போல சைரன் கொடுப்பான்! அது அவனுடைய டிரேட் மார்க்! அதிலிருந்து, குடிகாரர்களைக் கண்டால் எனக்கு ரொம்பவும் பயம். அம்மாமார்கள் பிள்ளைகளுக்கு சாதம் ஊட்ட, இப்படி எதையாவது காண்பித்து பயப்படுத்துகிறார்கள்.
இன்னொரு பூச்சாண்டி எங்களை பயத்தில் ஆழ்த்துவாள்! அவள் பெயர் பீக்குட்டி. ஒரிஜினல் பெயர் பீவிக் குட்டியாம்! பூர்வீகம் கேரளா என்று கேள்வி! அவளுடைய வயிறு மிகவும் பெரியதாக இருக்கும். அவள் யாரையும் நம்பமாட்டாளாம்...ஏதோ மனநோயாம்...அதனால் அவளுடைய பண்டபாத்திரங்கள் எல்லாம் வயிற்றில் வைத்துக் கட்டி போகும் இடமெல்லாம் கொண்டு போவாள்.
சொன்னபேச்சைக் கேட்காத பிள்ளைகளையும் வயிற்றில் மூட்டையாகக் கட்டி செல்வாள் என்று அம்மா சொன்னதால், எனக்கு ஏக பயம்...வாரம் ஒரு முறை தர்மகாசு வாங்க வரும் அவளைக் கண்டு பம்மி பதுங்குவேன்!
கொஞ்ச நாட்களில் அவள் வருவதை நிறுத்திக் கொண்டாள். செத்துப் போயிருப்பாளோ என்னவோ?! அதற்குப் பிறகு, சாப்பிடும் போதெல்லாம் அவளைப் பற்றிய கதைகள் அம்மா சொல்வாள்...! அந்த கதைகளில் பீக்குட்டியோடு அம்மா நிறுத்த மாட்டார். ஏக்குட்டி, சீக்குட்டி, டீக்குட்டி என்று இன்னும் மூன்று பேர் இருப்பார்கள். கண்களில் மிரட்சியோடு, நாங்கள் அக்கதைகளைக் கேட்போம். நல்லவேளை அம்மா எங்களை அதிகம் பயப்படுத்தாமல், ஏபிசிடி நான்கு எழுத்துக்களோடு நிறுத்தி விட்டார்.
இதாவது பரவாயில்லை, எங்க பக்கத்து வீட்டு பையனை 'ரெண்டு கண்ணன் வர்ரான்' என்று சொல்லி பயம் காட்டுவார்கள். எல்லாருக்கும் எத்துணைக் கண்ணு என்று கேட்க யாருக்குமே ஏனோ அன்று தோன்றவில்லை!
இந்த முனியப்ப குடிகாரன் ரோட்டில் எங்காவது விழுந்து கிடப்பதைப் பார்த்தால், அந்தப் பக்கமே நாங்கள் போக மாட்டோம், அவ்ளோ பயம். இதுல தமாஷ் என்னன்னா, கேணப்பையனாட்டம் கத்துறவங்க எல்லாருமே எங்களுக்கு குடிகாரன் தான்! ஒரு ஆள், தன்னுடைய கையைப் பார்த்து பேசிக் கொண்டே வருவான். கையைத்தன் எதிரியாக நினைத்துக் கடிப்பான், இன்னொரு கையால் அடிப்பான், திட்டுவான்! மனநோயாளியான அவனுக்கு நாங்கள் வைத்த பெயர், 'கை கடிக்கிற குடிகாரன்'!
முனியப்பம் மேலான அலர்ஜி சொல்ல முடியாதபடி வளர்ந்து கொண்டே போன போது தான் அந்த சம்பவம் நடந்தது! அப்போ, வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டுவேன்...அதென்னமோ, எவ்வளவுக்கெவ்வளோ பெரிய சைக்கிள் எடுத்து ஓட்டுறோமோ, அவ்வளவுக்கவ்வளோ பெருமையா இருக்கும்!
அன்னிக்குத் தான் நான் முதல் முறையா சற்று பெரிய சைக்கிள் எடுத்து ஓட்டுறேன்! கால் நிலத்தில் எட்டவில்லை என்றாலும், ஓட்டமுடிந்தது! எங்காவது கம்பத்தைக் கண்டால், அதைப் பிடித்துக் கொண்டு இறங்குவேன்! ஆனால், அப்படியே இறங்குவதென்பது என்னால் முடியாது அல்லது தெரியாது!
எங்க வீடு மெயின் ரோட்டில் இருப்பதால், அம்மா அங்கெல்லாம் சைக்கிள் ஓட்டக் கூடாது, பின்புறம் இருக்கும் சின்னத் தெருக்களில் தான் ஓட்டவேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருந்தார். அன்றும் அவ்வாறே அந்த பெரிய சைக்கிள் எடுத்து, கொஞ்சம் திணறித் திணறி ஓட்டி, பிறகு நன்றாக ஓட்ட முடிந்தபின், எங்கள் தெருவில் இருக்கும் தோழர்களிடம் காட்டவேண்டும் என்று ஆசையாக இருந்தது!
மெயின் ரோட்டுக்கு வந்து விட்டேன்...ஒரு ரெண்டு ரவுண்டு ஸ்டைலாக அடித்தேன்...தோழிகளெல்லாம் வாய்பிளக்கவும், எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை! மெயின் ரோட்டிலேயே சுற்றி சுற்றி வந்தேன்! வந்தது வினை! பஸ்காரன் வேகமாக வர, நடுரோட்டில் ஓட்டிக் கொண்டிருந்த என்னால் பேலன்ஸ் செய்யவும் முடியாமல், இறங்கவும் முடியாமல்(கால் எட்டாதே?...கம்பம் வேண்டுமே???)....
என்னைச் சுற்றி ஒரு கூட்டமே கூடிவிட்டது! நான் தான் சைக்கிளைப் போட்டு நடுரோட்டில் விழுந்து விட்டேனே??? பஸ்ஸின் சக்கரம் என் சைக்கிளை உரசியபடி....! பயத்துடன் எழுந்து திரும்பிப் பார்த்தால், அங்கு குடிகார முனியப்பன், சைக்கிளை எடுத்து தலைக்கு மேல் ஒரு சுழற்று சுழற்றி(சாகசம் செய்கிறானாம்), எங்கள் வீட்டருகே கொண்டு வந்து வைத்து விட்டான். முதல்முறையாக அவனை பயத்துடன் பார்க்காமல் நன்றியுடன் பார்த்தேன்.
வீட்டுக்கு வந்தால், அர்ச்சனையோ அர்ச்சனை! இனி மேல் சைக்கிளே ஓட்டக்கூடாது என்று அப்பா சட்டம் போட்டுவிட்டார். நான் வாடகை சைக்கிள் ஓட்டியது அது தான் கடைசி!
லீவுக்கு கசின் வீட்டுக்கு வந்திருந்தேன்! அங்கும் அதே போல ஒரு வாடிக்கை குடிகாரன். பேரு கமால்! குடிகாரக் கமால் என்று தான் எல்லாரும் சொல்வார்கள்! இவனுக்கு குழந்தைகள் என்றால் ரொம்பவும் பிடிக்கும். குழந்தைகள் போட்டோக்கள் எங்காவது கிடைத்தால், ஆசையாக எடுத்து வைத்துக் கொள்வானாம். 'நாளை முதல் குடிக்க மாட்டேன்...' என்று பாட்டு தினமும் பாடுவானாம்.
நான் போயிருந்த போது, கசின் வீட்டுக்குள் நுழைந்து விட்டான். வெளியே போடா என்று அவங்கம்மா சொல்லியும் கேட்பதாக இல்லை! அங்கு மாட்டியிருந்த காலண்டரைக் கேட்டு அடம்பிடிக்கிறான். அதில் அழகான குழந்தை சிரித்துக் கொண்டிருந்தது! கடைசியில் அந்த காலண்டரைக் கொடுத்த பிறகுதான் போனான்!
குடிகாரர்களைப் பற்றிய பயம் நான் வளர்ந்த பிறகும் போகவில்லை! இன்றும் குடிகாரர்களை எங்கள் வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை! அல்லது, எங்கள் வீட்டிற்குள் வருமளவுக்கு எந்த குடிகாரர்களும் இல்லை!
எட்டாம் வகுப்பு, பள்ளிச் சுற்றுலாவின் போது, எல்லாரையும் வட்டமாக அமர வைத்தார்கள். டப்பாவில் கைவிட்டு ஏதேனும் ஒரு சீட்டை எடுக்க வேண்டும். அதில் வருவது போல நாம் செய்ய வேண்டும். ஒரு பெண்ணுக்கு நிலத்தை முத்தமிடவும் என்று வந்தது! அவள் சுலபமாக செய்து விட்டாள். இப்படி ஆளாளுக்கு ஒன்றாக வர, எனக்கு, குடிகாரனைப் போல நடித்துக் காட்டவும் என்று வந்தது...
நான் முடியவே முடியாதென்று சொல்லி விட்டேன். குடிகாரர்களின் மேல் அவ்வளவு பயமும் வெறுப்பும் எனக்கு! வேறொரு தோழி அதைச் செய்கிறேன் என்று சொல்லி, ஒரு வாட்டர்கேனை கையில் எடுத்துக் கொண்டு, 'என்னடி முனியம்மா...கருவாட்டுக் குழம்பு வைத்தியாடி' என்று கத்தி, அழகாக நடித்தாள்! (முனியம்மாவையும், முனியப்பனையும் விட்டா வேற பெயரே கிடைக்காதா?)
நான் இன்னொரு சீட்டு எடுத்தேன்! ஏ,பி,சி,டி, தலைகீழ சொல்லவும் என்று வந்தது! டி,சி,பி,ஏ என்று சுலபமாக சொல்லி விட்டாலும், வீட்டுக்கு வந்து, முழுவதும் தலைகீழ மனப்பாடம் செய்தது தனிக்கதை!
டிஸ்கி: குடிகாரனுக்கு அப்புறம், ஏ,பி,சி,டி வந்ததுக்கும், முனியப்பனுக்கு அப்புறம், ஏக்குட்டி, பீக்குட்டி, சீக்குட்டியைக் கண்டு பயந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!
-சுமஜ்லா.
|
கருத்துகள்