Posted: 01 Mar 2010 07:22 AM PST அதென்ன பாடி வாழ்க்கை??? இப்படித்தான் நானும் குழம்பினேன்.... Citizenship Camp என்பதன் தமிழாக்கமாம்....! காலேஜ் கேம்ப்னா ஒரே ஜோரு தான்.....! ஐந்து நாட்கள் நடக்கிறது! இன்று தான் (மார்ச் 1, 2010) ஆரம்பம்....!
கேம்ப்புக்காக, பலப்பல ஏற்பாடுகள் போனவாரமே தொடங்கியாச்சு! அதில் ஒன்று, காலேஜ் கிரவுண்ட் க்ளீனிங். மொத்தம் ஐந்து குரூப்புகள்....அதில் ஆளுக்கு இவ்வளவு என்று இடம் பிரித்துக் கொடுத்து விட, எல்லாரும் மம்மட்டி, சீமாறு, காரைச்சட்டி சகிதம் களத்தில் இறங்கினோம்....! உஸ்....அப்பாடா! நமக்கு பழக்கமில்லாத வேலையா? பட்டிக்காட்டுப் பக்கமிருந்து வந்தவங்கள்ளாம், தோட்ட வேலை ஏற்கனவே பழகியிருப்பதால், சக்கை போடு போட, எனக்கோ மூச்சு வாங்கியது!
எங்க குரூப் இடத்தில் ஒரு ஏரியா அப்படியே க்ளீன் பண்ணப்படாமல் இருக்க, கல்லூரியில் வேலை செய்யும் ஆயா எனக்கு கை கொடுத்தார்கள். நான் அவ்வப்போது அவரை கவனித்துக் கொள்வதால், அவர் உதவினார்.
வெட்டிய சருகுகளையெல்லாம் நடுவில் போட்டு தீ மூட்டி, கேம்ப் ஃபயர் என்று ஒரே ஆட்டம்! களைப்பு தெரியாமல் இருக்க இடையிடையே ஜூஸ் சப்ளை வேற!
அடுத்து வகுப்புகளையெல்லாம் சுத்தம் செய்து, அலங்கார தோரணங்கள் எல்லாம் தொங்க விட, கேம்ப் களை கட்டி விட்டது. ப்ளாக் போர்டு வண்ணமலர் காடாக மாற, ஜன்னல்கள் எல்லாம் மாலை போட்டுக் கொண்டன. ஐந்து நாட்களும் போட்டிகள் மற்றும் கல்சுரல்ஸ்!
இன்று முதல் நாள்!
சேர்மன் வந்து துவக்கி வைக்க, அடுத்து, ஜாகீர் உசேன் என்னும் HRD Trainer அருமையாக, சுயமுன்னேற்றம் குறித்து உரையாற்றினார். அவர் சொன்ன விஷயங்கள் சில....
"நம்மால் முடியாது யாரால் முடியும்?
யாராலும் முடியாதது நம்மால் முடியும்!"
உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டார். பலரும் பலவிதமாகச் சொல்ல, அவர் எதிர்பார்த்த பதில், எனக்கு என்னைப் பிடிக்கும், என்பதை!
"Achievers are not who do different things, but do things differently"
பல குட்டி குட்டி கதைகள் மூலமாக வாழ்க்கையின் தத்துவத்தை தெளிவாக, அதே சமயம் போரடிக்காமல் சொன்னார்.
காலையில் போண்டா, டீ, மதிய உணவு மற்றும் மாலையில் பிஸ்கட் ஆகியவை வழங்கப்பட்டது. மிகவும் சுமாரான ஒரு உணவு தான்! செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈந்து விட்டு, அடுத்து போட்டிகளுக்கு தயாரானோம்.
முதலில், ஓரங்க நாடகப் போட்டி! மொத்தம் இரண்டு நாடகங்கள்....! அதில் ஒன்று எங்கள் குரூப்! நான் எழுதிய நாடகம்! நாடகத்தைத் தனியொரு பதிவாகத் தருகிறேன்....!
அடுத்து, மெமரி கேம்...! அடியேன் அதில் சறுக்கி விட்டேன். 10 வினாடி பொருட்களைப் பார்த்து விட்டு, அதை எழுத வேண்டும். வயசாயிருச்சுல்ல...! அதான் ஞாபக சக்தி குறைஞ்சு போச்சு! எல்லாம் 9, 10 பொருட்களின் பெயர்களை எழுத, நான் எழுதியது 7 பொருட்களின் பெயர்கள் மட்டும் தான்!
அடுத்து, கண்ணைக் கட்டி வால் வரையும் போட்டி! போர்டில் வாலில்லாத யானைப் படம்! நம் கண்ணைக் கட்டி, இரண்டு சுற்று சுற்றி விடுவார்கள்....! பிறகு நடந்து சென்று அப்படத்துக்கு வால் வரைய வேண்டும்.
இது தான் காமெடி கலாட்டா! அதுக்கு தமிழ் சார் கொடுத்த ரன்னிங் கமெண்ட்ரி தூள்! போர்டில் வரையாமல் சுவரில் வரைபவருக்கு வெரி குட், வெரி குட் என்று சொல்ல சிரித்து சிரித்து வயிறு புண்ணாயிற்று!
ஒரு மாணவி, யானை ஒன் பாத்ரூம் போவது போல வரைய, மீண்டும் சிரிப்பலை! மொத்தத்தில் எங்கள் சிரிப்பால் கட்டிடமே குலுங்கியது!
எல்லாம் சரி, நீ எப்படி வரைஞ்ச, அதை முதல்ல சொல்லுங்கறீங்களா??? கரெக்டாக வரைந்து விட்டேன். யானைக்கும் நான் போட்ட வாலுக்கும் ஒரு செ.மீ தான் இடைவெளி! இன்னும் 2 பேர் ஓரளவுக்கு சரியாக வரைய, பரிசு யாருக்கு என்ற விவரம், வெள்ளிக்கிழமை தான் தெரியும். முழுக்க முழுக்க என்ஜாய்மெண்ட் என்றாலும், சில கசப்பு மாத்திரைகளும் உண்டு! திறமையானவர்கள் ஒதுக்கப்படுவது எல்லா இடத்திலும் நடப்பது தானே? அதை இன்னொரு நாள் சொல்கிறேன். இனிவரும் கேம்ப் நிகழ்ச்சிகளை நேரம் கிடைக்கும் போது, அப்டேட் செய்கிறேன்.
-சுமஜ்லா.
|
கருத்துகள்