Posted: 02 Mar 2010 09:02 AM PST முதல் நாள் கேம்ப்பை விட இரண்டாம் நாள் கேம்ப் சூப்பர்!
வழக்கமானபடி, சீஃப் கெஸ்ட்டெல்லாம் வந்து நிறைய்ய்ய பேசினார்கள்! திரு.செந்தில் என்பவர் உலக வெப்பமயமாதல் பற்றி பேசினார். இன்னொருவர் (பெயர் மறந்து போச்சு!) மரம் நடுவது பற்றி, பசுமை உலகம் பற்றியெல்லாம் பேசினார்!
இறுதியில், எங்களிடம் இருந்து கருத்து கேட்டார்கள். நான் இவ்வாறு சொன்னேன், "ஐயா, காற்றில் பறக்கும் விதைகள் பல திசைகளுக்கும் பறக்கின்றன. அதில் சில உழவுக் காட்டில் விழுகின்றன. சில, மொட்டைப் பாறையின் மேல்! காட்டில் விழுந்த விதைகள் விருட்சமாகின்றன....! பாறையில் விழுந்த விதைகள் பட்டுப் போகின்றன. ஆக, குறை விதையின் மேல் அல்ல, அது விழுந்த இடத்தில் தான்....! இப்போ, நீங்கள் ஒரு விதை போட்டிருக்கிறீர்கள், எம்முடைய மனதில்! அது விருட்சமாவதும், வீணாவதும் எம் கையில் தான் இருக்கிறது. நாங்கள், உழவுக்காடாக இருக்கவே விரும்புகிறோம்!"
நான் சொன்னதும், பலத்த கரகோஷம்....! சந்தோஷமாக இருந்தது!
இடையில், பருப்பு வடை மற்றும் டீ! இன்று சப்ளை எங்க குரூப் (லில்லி குரூப்) பொறுப்பு என்பதால், எனக்கு இரண்டு வடை கிடைத்தது!
மதிய உணவு, நேற்றைக்கு இன்று பரவாயில்லை....! அதாவது அடிசனலாக, பாயாசம் மட்டும் ஒரு கப்!
உணவுக்குப் பின், ரங்கோலிப் போட்டி! ஒரு குரூப்புக்கு ஆறு பேர் என்று எட்டு குரூப்புகள்! முதலில் இருக்கும் மயில் தான் நாங்க போட்ட கோலம்! படத்தை நெட்டில் சுட்டு, அதை பேப்பரில் பெயிண்ட் செய்து, கான்செப்ட் ரெடி பண்ணி, என்று ஏகப்பட்ட முன் ஏற்பாடுகள். எல்லா பாரமும் நான் சீனியர் என்பதால் என் தலையில்!
வேக வேகமாக, நான் சாக்பீஸில் வரைந்து கொடுக்க, தோகையில் பச்சை நிறமூட்டப்பட்ட அரிசியை, துழாவி, அதன் மேல் பிங்க் வண்ணக் கோடுகள் இழுத்து, உப்புக்கல்லில் கலர் கலந்து போட்டு, பாதியாய் நறுக்கிய கத்தரிக்காய்களை கலர் செய்து கவிழ்த்து, மயில் தோகையின் கண்களாக்கினோம். எங்கள் காலேஜில் வளர்க்கும் அன்னப்பறவைகளின் இறகுகளைப் பொறுக்கி வைத்திருந்தோம். அதை மஞ்சள் மற்றும் சிவப்பில், கலர் செய்து, ஒரு வழியாக எல்லாம் அழகாக முடித்து விட்டோம். முதலில், வேப்பங்குச்சியை ஒடித்து வந்து, மரம் போல் வைத்தோம். பிறகு அது சரியில்லை என்று, மணலால், மரம் வரைந்து, மாந்தழைகளால் அதற்கு உயிரூட்டினோம். "கானுயிர் காப்போம்" என்று ஒரு கான்செப்ட்டும் எழுதி வைத்தோம்.
கொடுக்கப்பட்ட நேரம் ஒரு மணி நேரம். எங்களுடைய டீம் ஸ்பிரிட்டால், அரை மணி நேரத்திலேயே முடித்து விட்டோம். எங்க கோலம் எப்படிங்க இருக்கு??? கஷ்டப்பட்டு வரைந்து முடித்த களைப்பில், எங்க டீம் மெம்பர்ஸ் "அக்கா, நெட்டில் எங்களையும் போடுங்க அக்கா... என்று போஸ் கொடுத்தார்கள்!"
ஜட்ஜஸ் வந்து, எப்படி செய்தீர்கள்? மொத்தம் எத்துணை வண்ணங்கள்? என்றெல்லாம் கேள்வி கேட்டார்கள். ரிசல்ட் வெள்ளிக் கிழமை.
அடுத்த போட்டி, உடனடிப் பேச்சு! நிறைய தலைப்புகள் பேப்பரில் எழுதி சுருட்டப்பட்டிருந்தன. ஏதேனும் ஒன்றை எடுக்க வேண்டும். நம்ம லக்! யோசிக்க 2 நிமிடம் டைம். பேச, 3 நிமிடம் டைம்!
முதல் ஆளாக, என்னைத் தள்ளி விட்டார்கள். முதலாவதாக சென்று, முதலாவதாக ஒரு பேப்பர் எடுத்தால், தலைப்பு, முதலுதவி!
"காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தில் மானப் பெரிது" என்ற திருக்குறளோடு ஆரம்பித்து, ஒரு வழியாகப் பேசி முடித்தேன். நட்பு, பாசம், சச்சின் டெண்டுல்கர், ஆசிரியர், பெண்கல்வி, அன்பு, ஈ.வெ.ரா. போன்றவை இன்ன பிற தலைப்புகள்.
அடுத்து, பலகுரல் பேச்சு!
நான் எடுத்துக் கொண்ட கான்செப்ட், "ட்விங்கிள், ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்" போயமை, எல்.கே.ஜி.பாப்பா, ஸ்கூல் பாய், காலேஜ் பாய், பட்டிக் காட்டான், கிழவன் ஆகியோர் பாடினால், எப்படி இருக்கும் என்று! இந்த போட்டிக்கு ஆளே இல்லை! அதான் சும்மா அட்டெண்ட் பண்ணினால் பரிசு என்று போனேன்....!
அடுத்து ம்யூசிக்கல் சேர்! சமத்துப் பிள்ளையாக முதல் ஆளாக அவுட் ஆனேன்! எனக்கு கிடைத்த சூப்பர் கமெண்ட் : "அக்கா, எல்லாத்துலயும் பர்ஸ்ட்! அதான், இங்கயும் பர்ஸ்ட்டா வெளிய வந்துட்டீங்க" (புகழ்றாங்களா? இகழ்றாங்களா?னு யாராச்சியும் சொல்லுங்களேன்)
நாளைக்கு குக்குங் வித்தவுட் ஃபயர் போட்டி, பேச்சுப் போட்டி (தலைப்பு: உள்ளத்தனையது உயர்வு) மற்றும் பழமொழி போட்டி ஆகியன உண்டு! இதைப் பற்றியும் எழுதறேங்க!
-சுமஜ்லா.
மேலே படத்தில், ஜீவா, பாகிரதி, சங்கீதா, தீபா.மேலே படத்தில் ஜீவா, மேகலா.
கீழே இருப்பதெல்லாம் மற்றவர்கள் வரைந்த கோலங்கள்....
|
கருத்துகள்