Posted: 07 Mar 2010 05:05 AM PST ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தின் மூன்றாம் நாள் இனிதே தொடங்கியது....! உற்சாக வெள்ளம் கரைபுரண்டோட, மாணவிகளின் முகத்தில், மகிழ்ச்சி நிறைந்திருந்தது...!
காலையில் சீஃப் கெஸ்ட்டாக, அல் அமீன் பாலிடெக்னிக் காலேஜ் முதல்வர், திரு.ஜே.கமால் பாட்சா அவர்கள் உரையாற்ற, அதன் பின், முதலுதவி சிகிச்சை குறித்து, எங்களுக்கு, செயிண்ட்.ஜான்ஸ் ஆம்புலன்ஸ் அசோசியேஷனைச் சேர்ந்த, திருமதி.எஸ்.விஜயகுமாரி மற்றும், குமாரி.எம்.தாரணி ஆகியோர் சிறந்த முறையில் விளக்கமளித்தனர்.
இடையில் வாழக்காய் பஜ்ஜியும் காஃபியும் தரப்பட்டது. மதியம் சாப்பாடு, சாம்பார், ரசம், பொரியலுடன் ஜிலேபியும் தரப்பட்டது. என்ன சாப்பிட்டோம் என்பது முக்கியமாகத் தெரியவில்லை, ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு, ஒரே குடும்பமாகச் சாப்பிட்டது தான் பிரமாதம்!
அதன் பிறகு, போட்டிகள் தொடங்கின! முதல் போட்டி, நெருப்பின்றி சமையல்! அதாவது, அடுப்பில் வைக்காமல், ரெடிமேடாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உருவாக்க வேண்டும்.
எங்கள் குழுவில், பிரட் கட்லெட், மிக்ஸட் நட்ஸ் மற்றும், பேரிச்சை அல்வா ஆகியன செய்திருந்தோம்.
பிரட்டை அரைத்து, அதில் மில்க் மெய்ட் கலந்து, அதில் நறுக்கிய பேரிச்சை, வறுத்த முந்திரி, டுட்டி புரூட்டி ஆகியன கலந்து சுவையாக பேரிச்சை அல்வா செய்திருந்தோம்.
மிக்ஸட் நட்ஸில், பொட்டுக்கடலை, நிலக்கடலை, துருவிய தேங்காய், அரைத்த அஸ்கா, கல்கண்டு, பொடித்து வறுத்த முந்திரி ஆகியன கலந்து செய்திருந்தோம்.
துண்டுகளாக்கிய பிரட்டில் தயிர் கலந்து, அதில் துருவிய கேரட், பீட்ரூட், நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி, பச்சை மிளகாய் ஆகியவை கலந்து, அதில் கார்ன் பிளேக்ஸ் தூவி வைத்திருந்தோம்.
அலங்காரத்துக்கு, பிரட்டில் வீடு கட்டி, பிளம்கேக்கில் கூரை வேய்ந்து, வேஃபர்ஸ் பிஸ்கட்டில் ஓடு போட்டிருந்தோம். கேரட் மற்றும் குடை மிளகாய் உபயோகித்து மரம் செய்து, வெள்ளரியில் செடி தொட்டிகளாகக் கட் பண்ணி, கொத்து மல்லி இலைகளால் செடி நட்டு வைத்தோம். இவற்றைப் படத்தில் பார்க்கலாம்.
மற்றவர்கள், சேலட், சேண்ட்விச், இளநீர் பாயாசம், பிரட் தயிர்வடை, அவல் கார மசாலா, அவல் இனிப்பு, சோம்புத் தண்ணீர், பச்சை ரசம், இன்னும் பேர் தெரியாத நிறைய அயிட்டங்கள் செய்திருந்தனர்.
ஜட்ஜஸ் வந்து எல்லாவற்றையும் ருசி பார்த்து மதிப்பெண் போட்டுச் சென்றார்கள்.
அடுத்ததாக, பேச்சுப் போட்டி! தலைப்பு 'உள்ளத்தனையது உயர்வு'. ஏற்கனவே கொடுத்திருந்தார்கள். அதில் நான் கலந்து கொண்டு பேசியவை கீழே:
உள்ளத்தனையது உயர்வு
அன்பும் அறிவும் ஆழ்ந்தகன்ற கல்வியும் விழுமிய ஒழுக்கமும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற, எம் கல்லூரியின் முதல்வர் அவர்களே, நடுவர்களே, உயர்ந்த எண்ணங்களையும் சிறந்த கருத்துக்களையும் எம்முள்ளே விதைக்கும் விரிவுரையாளர்களே, எமது இனிய சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் என் வந்தனத்தை உரித்தாக்குகிறேன்.
எண்ணங்கள் கொள்ளும் வீச்சு, - புது
உயரத்தைத் தொடுகின்ற பொழுது,
வாழ்வினில் வருகின்ற வீழ்ச்சி - நம்
எண்ணத்தில் தோன்றிடும் பழுது!
நல்லதை நினைத்தால் நன்மை - அது
வல்லதை நினைத்தால் தாழ்வு
உள்ளத்தனையது உயர்வு - என்ற
வள்ளுவன் சொல்லே அமுது
என்று கூறி என்னுரையைத் தொடங்குகின்றேன்....
உள்ளத்தனையது உயர்வு என்றால் என்ன? உள்ளம் என்பது மனதின் எண்ணங்களே ஆகும்... ஒருவனின் எண்ணங்கள் போலவே அவனுடைய வாழ்க்கை அமைகிறது.
நம் வாழ்க்கையின் அடிப்படையே எண்ணங்கள்தான். எண்ண மில்லாமல் ஏதுமில்லை; எண்ணத்துக்கப்பாலும் ஒன்றுமே இல்லை.
நம் உடலில் உயிர் உள்ளவரை எண்ணங்கள் என்றென்றும் இருக்கும்.
நம் எண்ணங்களை நல்ல எண்ணங்கள் என்றும் தீய எண்ணங்கள் என்றும் பிரிக்கலாம்...
துணிச்சலான எண்ணம் தன்னம்பிக்கையைக் கொடுக்கும்
தூய்மையான எண்ணம் நேர்மைக்கு வித்திடும்
பொதுநல எண்ணம் பேர் வாங்கிக் கொடுக்கும்
போதுமென்ற எண்ணம் தன்னிறைவைத் தந்திடும்
அதே போல,
கோபமான எண்ணம் நோயை வரவழைக்கும்
வெறுப்பான எண்ணம் மனச்சங்கடத்தைத் தரும்
சுயநலமான எண்ணம் துன்பத்துக்கு வழிவகுக்கும்
சோகமான எண்ணம் சோதனையை உருவாக்கும்!
ஒவ்வொருவருக்கும் தத்தமது வாழ்க்கையைப் பற்றிய ஒரு மதிப்பீடு இருக்கும்; அதே போல, எதிர்காலத்தில் என்னாவாக ஆக வேண்டும் என்ற லட்சியமும் இருக்கும். அதை முதலில் நாம் மனதில் பதிய வைக்க வேண்டும். கனவு காண வேண்டும்; கற்பனை செய்ய வேண்டும்.
பேசும் போது நம் கருத்தை வலியுறுத்த வேண்டும் என்றால், சப்தமாகப் பேசுகிறோம். அதே போல, நம் எண்ணங்களை உரக்க எண்ண வேண்டும். இங்கே உரக்க என்றால், வலுவான என்ற பொருள் கொள்ளலாம்.
நம்முள் இருந்து நம்மை வழி நடத்தும் எண்ணங்களை அறிவது நமது தனித்திறமையாகும். இதை உள்ளுணர்வு என்றும் கூறுவார்கள்.
"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்றார் வள்ளுவர்.
"வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு" என்ற திருக்குறளை 'கனவு காணுங்கள்' என்று சொல்லி, நம் எண்ணங்களை சிறகடித்துப் பறக்க வைத்த நம் நாட்டின் முன்னால் குடியரசுத் தலைவர் திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள்.
நீர்மட்டம் குறைவாக இருக்கும் போது, மலரானது நீருக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். அதே நீர்மட்டம், உயரும் போது, அதற்கேற்றபடி மலரும் உயர்ந்து, அப்போதும் நீருக்கு வெளியே தான் இருக்கும். ஒரு போதும் நீருக்குள் அமிழ்ந்து விடாது. அதே போலத்தான் நமது உயர்வும். நம் உள்ளம் எந்த அளவுக்கு மேன்மையான சிந்தனைகளைக் கொண்டிருக்கிறதோ, அந்தளவுக்கு வாழ்க்கையில் நாம் வெற்றி பெறுவோம்.
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்"
என்னும் வள்ளுவர் வாக்குப்படி, வலுவான எண்ணங்கள் வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும்.
ஆலமரம், அரசமரம், சந்தன மரம் போன்ற பெரிய மரங்களின் விதைகளைச் சாப்பிடும் பறவைகள் எந்த இடத்தில் அந்த விதைகளை எச்சமாக இடுகின்றதோ, அங்கு அவை முளைத்து பிரம்மாண்டமாய் வளருகின்றன. ஒரு சிறு விதையே பெரும் விருட்சத்தை உருவாக்குகிறது. அதே போல எத்தகைய எண்ணங்கள் நம் உள்ளத்தில் உதிக்கின்றதோ, அது போலவே நம் வாழ்வின் போக்கும் அமைகிறது.
வெற்றி பெறுவதான மனக்காட்சிகள், உற்சாகமான எண்ணங்கள், மகிழ்வான எண்ணங்கள தூய்மையான எண்ணங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கின்றன. எதிர்மறையான எண்ணங்கள், தோல்விக்கும், அதனால் ஏற்படும் மனச்சோர்வுக்கும் காரணமாகிறது.
"சுடர்முகம் தூக்கி ஆய்ந்தறிந்தால்,
சூரியன் நமது கைக்கெட்டும்,
படர் மேகக் கூட்டம் தாரகையும்
பனித்துளியாகக் கரைந்து விடும்.
இடர்கள் இன்னல் தகர்த்தெறிந்து
இகபர வாழ்வில் வெற்றிபெற
தொடர்ந்த முயற்சி உழைப்புமிங்கே
தெள்ளிய அறிவுடன் வேண்டுவதாம்" என்ற கவிதைக்கு ஏற்ப,
முடியும் என்ற மந்திரச் சொல்லை, ஆழ்மனதில் கட்டளையாகக் கூறிவந்தால், எத்தகைய செயலையும் முடிக்க முடியும், எந்த உயரத்தையும் எட்ட முடியும்.. இது உண்மை. நமக்குத் தேவை முழு மன ஈடுபாடு மட்டுமே!
ஆனால், நம்மில் எத்துணை பேருக்கு அது இருக்கிறது? சற்று சிந்திக்க வேண்டும்...
பணம் இருந்தால் மட்டும் போதாது, நல்ல மனம் இருக்க வேண்டும். அந்த மனதிலே நல்ல எண்ணங்கள் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான உயர்வு கிடைக்கும்.
"தங்கத்துல சட்டை தைத்துத் தருகிறேன், வைரத்துல கூண்டு கட்டித் தருகிறேன், கிளியே நீ வானத்தை மட்டும் நினைக்காதே என்று சொன்னால், எப்படி இருக்கும்????
ஆனால், இன்று நம் நிலை இப்படித் தானே இருக்கிறது..... இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்ளுகிறோமே தவிர, இன்னும் இன்னும் உயர வேண்டும் என்று நினைக்கிறோமா? விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும், விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளிடையே தானே அடைபட்டிருக்கின்றன..... அதற்குக் காரணம் என்ன?
நல்ல எண்ணங்கள்...இல்லை, இல்லை, மேன்மையான எண்ணங்களை விதைத்திருந்தால், இன்று நாம் வானில் அல்லவா பறந்து கொண்டிருப்போம்!
உள்ளக் கருத்தை மாற்றாத நோயாளி, உணவு முறையை மாற்றியும் பயனில்லை.
எனவே,
மலராக, வாசனைப் பொருளாக, தென்றலாகத் திகழ வேண்டிய நம் எண்ணங்கள், முள்ளாக, சாக்கடையாக, புயலாக மாறிவிடக் கூடாது; அதற்கு பதிலாக, மலர்களிலே ரோஜாவாக, வாசனைப் பொருட்களிலே கஸ்தூரியாக, தென்றலிலே பொதிகைத் தென்றலாகத் திகழ வேண்டும்.
வாழ்க்கையையே வானவில்லாக்கி, பொழுதுகளையெல்லாம் பொன்மயமாக்கி, நரம்புகளில் தேன்பாயவிட்டு, இருதயத்துக்கு இன்னிசையைப் பாய்ச்சும் இனிய எண்ணங்களே நமக்குத் தேவை!
அமெரிக்க முன்னால் ஜனாதிபதி, ஜான். எஃப். கென்னடி ஒரு மாணவரிடம் 'நீ என்னவாக ஆக, விரும்பிகிறாய் என்று கேட்டாராம். அதற்கு அந்த மாணவர், 'உங்கள் இடத்துக்கு, நான் வர வேண்டும் என்று' என்றாராம். அவர், எண்ணம் போலவே, உயரத்தை அடைந்த அந்த மாணவர் தான் அமெரிக்க முன்னால் ஜனாதிபதி பில் கிளிண்டன்.
எப்படி இது சாத்தியமாயிற்று, அவர் நினைத்ததை அவர் சாதித்தபோது, நாம் நினைப்பதை ஏன் நம்மால், சாதிக்க முடியாது?
லாங் ஃபெல்லோ என்னும் ஆங்கில அறிஞரின் வரிகளை இங்கு நினைவு கூறுகிறேன்.
"HEIGHTS REACHED BY GREAT MEN AND KEPT,
WERE NOT ATTAINED BY SUDDEN FLIGHT,
THEY, WHEN THEIR FELLOW MEN SLEPT,
WERE TOILING UPWARDS IN THE NIGHT"
அதாவது,
எட்டமுடியாத உயரங்களை எட்டியவரெல்லாம்,
சட்டென்று மேலே உயர்ந்திடவில்லை,
மற்றவர் உறங்கிட்ட போதிலும், இவர்கள்,
வெற்றிக்கு உழைத்திட மறந்திடவில்லை"
நம் உள்ளம் எப்படியோ, நம் உயர்வும் அப்படி! வண்டியில் கட்டிய மாடு, போக வேண்டிய இடத்துக்குப் போய் சேரும், ஆனால், செக்கில் கட்டிய மாடு, நாள் பூராவும் நடந்தாலும், செக்கையே தான் சுற்றிச் சுற்றி வரும்.
எங்கெங்கிருந்தோ வருகிறோம் - புது
எண்ணங்களிங்கே பெறுகிறோம்
நம் உள்ளத்தைப் பண்படுத்தி,
அதில்
நல்லெண்ணம் என்னும் விதையை விதைப்போம்,
முத்துத் தமிழெடுக்க,
மூவுலகும் நாவெடுக்க,
சிற்பம் உயிரெடுக்க,
சிந்தனைகள் ஊற்றெடுக்க,
கல்லைச் சிலையெடுக்க,
களையும் திறன் எடுக்க,
நன்மை ஊற்றெடுக்க,
நம்பிக்கை நாம் படைக்க,
உள்ளத்தனையதுவே
உயர்வென்று நம்பிடுவோம்....!
நம்பியபடியே வாழ்ந்திடுவோம்....!
உறுதியாக உயர்ந்திடுவோம்.....!
நன்றி! நன்றி!! நன்றி!!!
-சுமஜ்லா.
இது முடிந்தபின், பழமொழி கண்டு பிடிக்கும் போட்டி!
இதில் குழுவுக்கு மூன்று பேர். ஒருவர், சீட்டில் இருக்கும் பழமொழியை அல்லது திருக்குறளை எடுத்துப் பார்த்து, அதை சாடையில் சொல்ல, மற்ற இருவரும் அதைக் கண்டு பிடிக்க வேண்டும்.
எனக்கு வந்த பழமொழி, தலைக்கு மேலே வெள்ளம் போனால், சான் என்ன? முழம் என்ன? எதிரில் நின்றிருந்த சங்கீதா மற்றும் தீபா ஆகியோர், கடைசி நிமிஷத்தில் கண்டு பிடித்தனர். மொத்தம் மூன்று குழுக்களே சரியான விடை சொன்னார்கள். அதில், நேரத்தைக் கணக்கில் கொண்டு, முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு ஆகியவற்றைத் தீர்மானித்தனர். கடைசி நிமிஷத்தில் சொன்னதால், எங்களுக்கு மூன்றாம் பரிசு.
இப்படியாக, எங்கள் மூன்றாம் நாள் பாடி வாழ்க்கையும் இனிதே முடிந்தது...! நான்காம் நாள் பற்றி அடுத்த பதிவு.
-சுமஜ்லா.
|
கருத்துகள்