Posted: 16 Mar 2010 08:42 AM PDT நேற்று காலேஜில் என்ன ஆச்சுன்னா.....
காலங்காத்தால நல்ல தலைவலி..., முதல் நாள் ராத்திரி கண்ணு முழிச்சுப் படிச்சதுனால வந்த வினையோ என்னவோ, தைலத்தை எடுத்துத் தடவிக்கிட்டே உட்கார்ந்து இருந்தேன்...!
செகண்ட் பீரியட் ஒன்னும் முடியல. எங்க இங்கிலீஷ் சார்கிட்ட சொல்லிட்டு கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைத்தேன். சார் வேற டெஸ்ட்னு சொல்லியிருந்தார். டெஸ்ட்ல இருந்து நான் தப்பிக்கிறேன்னு பிள்ளைங்களுக்குப் பொறாமை...!
ரொம்ப முடியலைனு சொல்லிட்டு போய் கடைசி பெஞ்சில படுத்திட்டேன். பாவிப் புள்ளைங்க, "சார் சுஹைனாக்கா வேற படுத்திட்டாங்க (மொத்த இங்கிலீஷ் மேஜர் ஸ்டூடண்ட்ஸே 8 பேர் தான்)... அதனால, நாளைக்கு எல்லாரும் ஒன்னா டெஸ்ட் எழுதறோம், இன்னிக்கு நாங்க ரெக்கார்டு எழுதறோம்"னு பர்மிஷன் வாங்கிட்டு எழுதிட்டிருந்தாங்க...
சார் போயிட்டார். எல்லாரும், மாற்றி மாற்றி, என்னை எழுப்பி, எதாவது ஒன்னு கேட்டுட்டே இருந்தாங்க... அப்ப, சிந்துன்னு ஒரு பொண்ணு, "அக்கா, உங்க பேனாவுல இருந்து கொஞ்சம் இங்க் ஊத்திக்கிட்டுமா அக்கா?"னு கேட்டா!
"இல்ல சிந்து என் பேனா ஹீரோ பேனா...டேங்க் சின்னது...அதனால, நீ வேணா என் பேக்ல இருந்து, என் பேனாவ எடுத்து எழுதிக்கோ"னு நான் சொல்லிட்டு தூங்கிட்டேன்.
பீரியட் முடிஞ்சு பெல் அடிச்சாச்சு.
சிந்து என் பேனாவுல எழுதிட்டு இருந்தா...
"சிந்து, பேனாவக் கொடுப்பா"
"அக்கா, நா எழுதணும்க்கா"
பாரு, என் பேனாவக் கேட்டா தரமாட்டேங்குறா...அட என்கிட்ட ஒன்னு தான் இருக்கு, நான் எழுத என்ன செய்றது?
"கொடு சிந்து...பீரியட் முடிஞ்சுதுல்ல, இப்ப மேம் வந்திருவாங்க...அப்புறமா எழுதறப்போ நீ வாங்கிக்க" எழுதிக் கொண்டிருந்த பேனாவை விடாப்பிடியாக வாங்கிக் கொண்டு புறப்பட்டேன்.
மேத்ஸ் சார், என்கிட்ட எக்ஸலில் ஒரு சின்ன சாஃப்ட்வேர், டெஸ்ட் அண்ட் மெஸர்மெண்ட் ரெக்கார்டுக்காக செய்துட்டு வரச் சொல்லி இருந்தார். என் பென் ட்ரைவில் இருந்த அந்த ஃபைலை, அவருடைய சிஸ்டத்தில் காப்பி செய்துவிட்டு, அதை எப்படிப் பயன்படுத்துவது என்று விளக்கிவிட்டு, நான் மீண்டும் வகுப்பறைக்கு வந்தேன்.
சிந்து என்னைப் பார்த்து முறைத்தபடியே, "அக்கா, எனக்கு பேனா வேணும்க்கா...நான் எழுதணும்" என்றாள்.
எனக்கோ கோபமே வந்து விட்டது. இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல், "சிந்து இந்தா வேணும்னா ரெண்டு சொட்டு இங்க் வாங்கிக்க, பேனா இல்லாம நான் எப்படி நோட்ஸ் எடுக்கறது?" என்றேன்.
"அக்கா....அது என் பேனாக்கா....நான் உங்க பேனாவ எடுக்கவே இல்லக்கா, தோ இவகிட்ட அப்பவே இங்க் வாங்கிட்டேன்" என்று சொல்ல,
அசடு வழிந்தேன்...!
ஒரே மாதிரியான ரெண்டு பேனாவால் வந்த குழப்பம். என் பர்ஸில் சமத்தாகத் தூங்கிக் கொண்டிருந்த என் பேனாவை எடுத்து சிந்துகிட்ட காண்பித்து, "பாருடா என்னோடதும் இதே மாதிரி...அதான், நீ இதத்தான் எடுத்து எழுதறியோனு நினைச்சிட்டேன். சாரிடா...இந்தா உன்னோட பேனா" என்று கொடுத்தேன்...!
இன்னிக்கு கவர்மெண்ட் லீவு...!சோ, டெஸ்ட் நாளைக்கு...!
இந்த நிகழ்ச்சியால், எனக்கு பாடி வாழ்க்கை முதல் நாளன்று வந்த HRD Trainer ஜாஹிர் உசேன் அவர்கள் சொன்ன குட்டிக் கதை நினைவுக்கு வந்தது...!
இரு ஆண்கள், ப்ளாட்பார்மில் அருகருகே நின்று கொண்டு ட்ரைனுக்காகக் காத்திருகிறார்கள்...! அப்போ, முதல் நபர் பையிலிருந்து பிஸ்கட் எடுத்து சாப்பிட, இரண்டாமவர் ஒரு பிஸ்கட் கேட்டிருக்கிறார். என்னடா, ஆள் பார்க்க டீசண்டாக இருக்கிறார், இப்படி கேட்டு வாங்கி சாப்பிடறாரே என்று நினைத்தபடியே இவர் பிஸ்கட் கொடுக்க, ரயில் வந்து விட்டது.
ரயிலிலும் அவர் பக்கத்திலேயே அமர, இவருக்கு மனதிற்குள், 'இவன் இன்னும் என்னென்ன கேட்பானோ' என்ற எண்ணங்கள்.
கையில் மீதி இருந்த பிஸ்கட் பாக்கிட்டில், "சார், ஒரு பிஸ்கட் கொடுங்கள்" என்று அவர் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட, இவரோ தொல்லை பொறுக்க மாட்டாமல், எழுந்து, கம்பார்ட்மெண்ட் வாசலருகே வந்து நின்று கொண்டு எல்லா பிஸ்கட்டையும் சாப்பிட்டு விட்டு, வந்து தன் இருக்கையில் அமர்கிறார்.
"சே...இந்த விவரங்கெட்ட மனுசனுக்கு விவஸ்தையே இல்லை" என்று மனதிற்குள் திட்டியபடியே, தண்ணீர் பாட்டில் எடுக்க தன் பையைத் திறந்தவருக்கு அதிர்ச்சி!
இவருடைய பிஸ்கட் பாக்கிட் அங்கேயே இருக்கிறது...! இவர் தவறுதலாக அவருடைய பையில் இருந்து பிஸ்கட் எடுத்து சாப்பிட்டிருக்கிறார்....! ஆனால், அவரோ பெருந்தன்மையாக எதுவும் சொல்லாமல், பரிதாபமாக இவரிடம் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டிருக்கிறார். இப்போ சொல்லுங்க யாரு ரொம்ப டீசண்ட்னு???
கதையெல்லாம் ஓக்கே தான்...! இங்கே கதையடிச்சிட்டு இருந்தா...நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் டெஸ்ட்டில் நான் அம்பேல் தான்...! விடு....ஜூட்....!
-சுமஜ்லா...
|
கருத்துகள்