’என்’ எழுத்து இகழேல்
’என்’ எழுத்து இகழேல் |
Posted: 24 Jun 2010 07:01 AM PDT உமரின் கால்கள் திசை மாறியது! தங்கையை மனது வசை பாடியது!! கண்களில் தீப்பொறி பறந்தது! கருத்ததில் மதவெறி சூழ்ந்தது!! ஏகினார் தங்கையில்லம் மிதந்து வந்தது இனிய நாதம்! செவிகளில் பாய்ந்ததை காது தாழ்த்திக் கேட்கிறார் - பின், பொறுமையிழந்து, தாழிடப்பட்ட கதவைத் தட்டுகிறார். திறந்த தங்கையை கண்டபடி திட்டுகிறார். தம் தங்கையை நோக்கி, "ஏ, பாத்திமா.... நீவிர் என்ன பாடினீர் சொல்லும்...!" என்று வினவுகிறார். ஒன்றுமில்லை என்று பயத்துடன் தங்கை பதிலளிக்க, ஆத்திரத்துடன் மைத்துனர் மேல் பாய்கிறார்!! குறுக்கே விழுந்து பர்த்தாவை காக்கிறார் பாத்திமா! செறுக்குற்ற வாளின் முனை முகத்தில் குத்த வழிகிறது குருதி! குருதியைக் கண்ட உமருக்கு குலைகிறது உறுதி!! அண்ணனின் வீர ரத்தம் தங்கைக்கு இருக்காதா? வீறுகொண்டு எழும் மனது உரிய பதில் சொல்லாதா?! உத்வேகமும் உணர்ச்சியும் தைரியமும் பிறக்கிறது! சத்வேத போதத்தால் சாத்வீகம் திறக்கிறது!! "ஆம்! அண்ணா! நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோம்; அடித்தாலும் இடித்தாலும் எம்முயிரை எடுத்தாலும் கவலையில்லை எமக்கு! செய்வதைச் செய்து கொள்! உய்யுமிடம் நானறிவேன்! பயமில்லை எமக்கு! பணியமாட்டேன் உமக்கு!!" தங்கையின் வேகம் கண்டு தளர்வுற்றார் தமையன்! மங்கல நாத வேதம் வேண்டிநின்றார் அவ்வீரன்!! கைகால்கள் சுத்தம் செய்தபின் வேதத்தின் பிரதியைக் கையில் தந்தார் தங்கை! மரியாதையும் பணிவும் கொண்டு மண்டியிட்டு அமர்ந்து, திருக்குர்ஆனின் இருபதாம் அத்தியாயமாம் தாஹாவை பொருந்தி ஓதத் தொடங்கினார்! ஓதுகிறார் ஓதுகிறார், ஓதி ஓதி உளமகிழ்கிறார்! வேதம் தந்த இனிய போதம் தளர்த்தியது அவர் பிடிவாதம்! சக்தியொன்று ஆகர்ஷிக்கிறது, புத்தியெல்லாம் புல்லரிக்கிறது! உடலும் உள்ளமும் நடுங்கி விந்தைகள் புரிகின்றன! நயனங்கள் இரண்டும் ஆனந்தக் கண்ணீர் சொறிகின்றன!! அதுவரை உள்ளே மறைந்திருந்த போதகாசிரியர் கப்பாப் பின் அல் அரத் வெளிப்படுகிறார்! உமருடன் கூடி அளவளாவுகிறார்! மனம் மாறியவராக, உளம் தேறிய்வராக, தங்கையில்லம் விட்டு, அர்க்கம் இல்லம் நோக்கி அடியெடுத்து வைக்கிறார் வீர மைந்தர்! - புது மனிதராக! - மனிதருல் புனிதராக!! இறையின் கொடைகளை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமையது! மறையை ஓதி, முறைகள் காட்டி அண்ணல் செய்தார் போதமது!! அவ்விடம் ஏகினார் உன்னதர்! மனதினிலே மாற்றம் கொண்ட உமர்!! -சுமஜ்லா. |
You are subscribed to email updates from ‘என்’ எழுத்து இகழேல் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
கருத்துகள்