’என்’ எழுத்து இகழேல்
’என்’ எழுத்து இகழேல் |
Posted: 31 Oct 2010 10:28 AM PDT சோதனையைக் கண்டு மனம் வேதனையை அடையப் பெற்று, ஜைதவரும் நபிகளிடம், வன்னெஞ்சை சபிக்க சொன்னார்!!! காருண்யக் கடலாம் காத்தமுந்நபிகளோ, 'நெறிப்படுத்தத் தரித்துள்ளேன், சாபமிட அல்ல, அறியாமை இருளகல பாபம்போம் மெல்ல, ஒரு நாள் இம்மக்களெல்லாம் நேர்வழியில் வருவார்கள், ஒரு காலும் வராவிட்டால், வழித்தோன்றல் வருவார்கள்! – என் வறிய நிலை நீக்கிவிட வல்லவனே போதுமப்பா! உரிய பதில் அவன் தருவான், உண்மை என்றும் வெல்லுமப்பா!' தளராத மனதோடு தக்க பதில் தந்தநபி, கண்ணிறைந்த நீரோடு, கையிரண்டை ஏந்தியவர் கருத்ததிலே கவலைகொண்டு வல்ல இறையை வேண்டிநின்றார். இளைப்பாறி களைப்பாறி முனைப்போடு தடுமாறி முன்னெட்டு வைத்தவரும் சின்னாட்கள் பயணப்பட, சிரமங்கள் இருந்தாலும் கருமத்தில் கண்ணாக, இஸ்லாத்தின் தூததனை இதமாக எடுத்தோத, மண்ணினத்து ஜின்களெல்லாம், மறையோதி முறைதழுவ, சீறாப்புதல்வரவர், ஹீரா குகையடைந்தார். வலக்கரமாய் இருந்ததனது வளர்ப்புமகன் ஜைதவரை திருமக்கா அனுப்பி வைத்து, நிலவரத்தை அறியக் கண்டார். ஆதரிப்பார் யாருமில்லை சோதரர்கள் தயவுமில்லை, சோதனைகள் மலையளவு சோர்ந்து நின்றார் நபியவர்கள். பகிஷ்காரப் பத்திரத்து முத்திரையைப் பிய்த்தெறிந்த முத்யிம் பின் அதீ அவர்கள் முஸ்லிமாய் ஆகவில்லை, ஆனாலும், நபியவரின் அறிய பண்பும், சபியாத நல்லுள்ளமும் நேரிய மனமும் நேசத்துடன் கூரிய மதியும் நோக்கியவர், தம்மிரு புதல்வர்கள் ஆயுதமேந்த, உம்மிநபிக்கு அரணாக, ஒட்டகையில் ஏற்றி காபா வந்து, சட்டமாய் குரலுயற்றி, கூவுகிறார், 'அபயம் அளிக்கிறேன் அருமை நபிக்கு! ஆதரவளிக்கிறேன் இன்று முதல்!' இவர்தம் கூற்றுதனைக் கேட்ட குறைஷிகளின் கொக்கரிப்பு நின்றது! ஆற்றலிழந்த நாவுகளும் கரங்களும் தக்க பதில் தேடியது!! அது முதலே, முத்யிமுடனே தங்கி, முதலோனைத் தொழுதழுதார், முஹமது ரசூல் நபியவர்கள் (ஸல்)! ஆயினும் முத்யிமை குறைஷிகள் இடித்துரைத்த காரணத்தால், இறையவன் பாதுகாப்பு தனக்குப் போதுமென்று ஈருலக ரட்சகனை நாடி நின்றார். நபி நாதர். பிரச்சாரத்தை பகிரங்கமாய் செய்தார், சிலைவணக்க வழிபாட்டை வைதார், இஸ்லாத்தை எத்தி வைக்கப் பாடுபட்டார். ஏகத்துவப் பணிதனிலே ஈடுபட்டார். (தொடரும்) -சுமஜ்லா |
Posted: 30 Oct 2010 01:28 PM PDT சொல்லடியோடு கல்லடியும் சொல்லவொணா துயரங்களும் நல்ல நபியைத் தொடர்ந்ததுவே! புல்லர் மனம் மகிழ்ந்ததுவே!! விண்ணவரும் மண்ணவரும் வியந்து போற்றும் நபியவரை, கண்ணின் மணியாய் கலங்கரையாய் தீனைத் தந்த தூயவரை, புனித மேனிப் புண்ணாக, குருதி வெள்ளம் வழிந்தோட, மலர் பாதம் செந்நிறமாய், கலர் மாறிப் போனதம்மா….! சொல்மாரியுடன் சேர்ந்து கல்மாரி பொழிந்ததம்மா!! சோர்வுற்று தரிக்க நின்றாலும், சீர் கொடுமை நிறுத்தவில்லை! பார்வை மங்கி, மயங்கினாலும், ஊர் துரத்தல் நிற்கவில்லை!! வாட்டம் கொண்ட நபியவர்கள் தோட்டமொன்றில் புகுந்திட்டார்கள். அத்தோட்டம், உத்பா பின் ரபீ ஆ மற்றும் அவர் சோதரர் ஷைபாவுக்கு சொந்தமானது! பெருங்காயம் கண்டவர்கள் அனுதாபம் மிகக் கொண்டு, திராட்சைக் குலையொன்று, திருத்துவ அடிமை அத்தாஸிடம் கொடுத்தனுப்பினர். திருவதனம், மலர்ப்பாதம் வழிந்த உதிரத்துளிகளையே, ஜைதவர்கள் துணிகொண்டு, துடைத்திட்ட நிலைகண்டு, குலைத் தட்டை தாம் நீட்டி நபியவர்க்கு அளித்திட்டார்!! நன்றி சொன்ன நபியவர்கள், பிஸ்மி சொல்லி உணவுண்ண, யாதென்று அவ்வடிமை, சொன்ன சொல்லை விளம்பி நிற்க, விளக்கத்தை நபிபெருமான், துலங்கும்படி எடுத்துச்சொல்ல, திருத்துவத்தை ஒட்டி இது, இருப்பதுதான் எங்ஙனமோ? என்றவரும் வியந்து சொல்ல, ஏந்தலிடம், விளக்கம் கேட்க, "நினோவா நாட்டு யூனூஸ் போல, நானும் ஒரு நபியாவேன், இறையொருவன், துணையில்லை, பெறப்படவுமில்லையில்லை! யாரையுமவன் பெறவில்லை, இணைத்துணையும் இங்கில்லை!! அருளாலன் ஆண்டவனும் அவதாரம் எடுக்கவில்லை! பெருந்தேவன் குமாரனென்று பூமிதனில் பிறக்கவில்லை!! என்று சொல்ல வந்துள்ளேன்…. நன்று எல்லாம் எடுத்துரைப்பேன் உமக்கும் எமக்கும் வித்தியாசம் இத்துணைதான் அறிந்திடுவீர்," நாயகத்தின் சொல்லைக் கேட்டு, நல்வழியில் அவரிணைந்தார்!! கருணை நபி காயத்தைக் கண்டு மனம் கசிந்து நின்றார்!! (தொடரும்) -சுமஜ்லா. |
Posted: 30 Oct 2010 01:26 PM PDT "மரணம் நெருங்கி விட்டது, என் இரணம் தீர்ந்து விட்டது, முஹம்மதிடம்(ஸல்) யாவரும் அன்பு கொள்ளுங்கள்…. அவருடைய மார்க்கத்துக்கு பண்பு காட்டுங்கள்…" முதியவர் அபூ தாலிப், மதுர வாய் திறந்து, மக்களிடம் உரைத்தார், கண்ணியமிக்க அண்ணலார், தீனின் தூதுவத்தைத்தம் பெரிய தந்தைக்கு, தீதின்றி எடுத்துச் சொல்ல, குலப்பெருமை வேண்டி அதையேற்க வில்லை! தலைமகனின் சொல்லை மனமேற்க வில்லை!! அவர் மரணம் தந்த அதிர்ச்சி மறையாதிருக்கும் போதே, இமை கண்ணைக் காப்பதுபோல், இருபத்தாறு ஆண்டு, இணையற்ற துணைவியாக, இதமான மனைவியாக, செல்வத்தைத் தத்தம்செய்து – நபி சொல்வதை ஏற்று நடந்து, மாந்தரெல்லாம் வெறுத்த போதும், வேந்தலுக்கு சேவை செய்து, சோரும் போது ஆறுதலும், - மன பாரத்துக்குத் தேறுதலும், தந்து வந்த கதீஜாவும் ஏகனடி சேர்ந்து விட, வருத்தம் கொண்டார் – மனச் சுணக்கம் கொண்டார்! வாடி நின்றார் – இறை நாடி நின்றார்!! இரு அரண்கள் இழந்ததனால், பெரு மகளும் இறந்ததனால், எதிர்ப்பு தந்த மக்கள் கூட்டம் கும்மாளமிட்டது! கூடி மகிழ்ந்தது!! ஆதரவு தந்தால், பலம் கூடுமென்று, ஆசை மனதில் கொண்டு, தாகிப் கோத்திரத்துக்கு இஸ்லாத்தை எடுத்துரைக்க, வளர்ப்பு மகன் ஜைதோடு தாயிப் நகரம் சென்றார்! மும்மூர்த்திகளாம் தலைவர்களை முகமன் கூறி சந்தித்தனர்! மூவரும் மூன்று ஈட்டிகளை முஹமதின் மேல் எறிந்தனர்! முதலாமவன் கேட்டான், "தூதராக அனுப்பியவன், பாதத்திலே அனுப்பியதேன்??? ஏறிவர கேவேறுக் கழுதை, தர அவனும் அறியானோ??" இரண்டாமவன் கேட்டன், "உன்னைத் தவிர யாரையுமே, தன்னின் தூதர் ஆக்கிக் கொள்ள, தெரியாத ஒருவனை நான், இறையென்று கொள்ளணுமோ?" மூன்றாமவன் சொன்னான், "உண்மையில் நீ தூதனென்றால், உன்னுடன் நான் உரையாட, அருகதை எனக்கில்லையடா! இல்லை, நீயொரு பொய்யனென்றால், என்னுடன் நீ பேச அருகதை உனக்கில்லையடா!!" சாதுர்ய மொழிகேட்ட சாத்வீக நபிமகனார், பொதுமக்கள் இடத்தினிலே மெதுவாக எடுத்துரைத்தார். முடிவாகக் கண்ட பலன், முழுத்தோல்வியன்றி ஒன்றில்லை!! ஆயினும் பெருமகனார், அம்மக்களைச் சபிக்கவில்லை!! (தொடரும்) -சுமஜ்லா. |
Posted: 30 Oct 2010 01:20 PM PDT இஸ்லாத்திற்கு வலு சேர்ந்ததால், காபிர்களின் நிம்மதி குலைந்தது! சோதி ஒளிர்ந்தது - அந்த சேதி கிடைத்தது! நீதி தழைத்தது - அதனால் பீதி நிறைந்தது! இஸ்லாத்தின் வளர்ச்சியை அடக்க வேண்டும்! அதை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டும்! என்று, குறைஷிகள் கூடினர்! அதற்கான வழிமுறை தேடினர்!! முடிவாக ஒரு முடிவும் கண்டனர்!!! அதன்படி, நபியவர் சார்ந்திருக்கும் ஹாஷிம் குலத்தவரை சமூகப் பிரதிஷ்டம் செய்தனர்! சொல்லொணாத் துயரம் தந்தனர்!! கொடுக்கல் வாங்கல் செய்வதில்லை! சம்பந்தம் சார்படி ஏதுமில்லை! உணவு தண்ணீர் அனுமதிப்பதில்லை! எவ்விதத் தொடர்பும் கொள்வதில்லை!! இதனால், ஒற்றுமை குலைந்து கோத்திரத்தார் பிரிந்திடுவர் என்று மனப்பால் குடித்தனர்! ஒப்பந்தம் வடித்தனர்!! ஹாஷிம் குலத்தினர் யாவரும் தத்தமது உடைமைகளுடன் அருகிலிருந்த பள்ளத்தாக்கில் குடியேறினர்! கொஞ்ச காலத்தில், உணவுப் பொருட்கள் தீர்ந்திட, பசியால் வாடினர்! அளவிலாத் துன்பங்களைத் தாங்கினர்! பகிஷ்கார நடவடிக்கையால், ஏங்கினர்!! இலை தழை எல்லாம் உணவானது! இயல்பு வாழ்க்கையே கனவானது! மழலைகள் பசியால், கருகினர்! பண்டமின்றி, பாலின்றி பெற்றோர் உருகினர்!! ஆயினும் பிரச்சாரம் தொடர்ந்தது! பிரம்மாதம் நடந்தது!! இவ்வாராக மூன்று ஆண்டுகள் கழிந்தது! காபாவில் தொங்கிய ஒப்பந்தக் காகிதமும் கிழிந்தது!! கரையான் அரித்த காகிதத்தால், உடன்படிக்கை தானாகவே செத்து மடிந்தது!! முஸ்லிம்கள் பட்ட துயர்தீர நல்லதொரு பொழுது விடிந்தது!! வெள்ளம் வடிந்து வெள்ளி முளைக்க, பள்ளத்தாக்கை விட்டு, வெளியேறி, மக்காவை அடைந்தனர்! என்றும் போல, வசிக்கலாயினர்!! இதுவரைக்கும் நபியவர்க்கு அரணாக இருந்து, நபித்துவ பத்தாம் ஆண்டில், முதுமையுற்ற சிறிய தந்தை அபூதாலிப், மீளா நோயுற்றார்! மரணம் தன்னை நெருங்குவதை உணர்ந்தார்!! அழைத்தார் தமது உறவுகளை! உரைத்தார் தமது மனக்குரலை!! (தொடரும்) -சுமஜ்லா |
You are subscribed to email updates from ‘என்’ எழுத்து இகழேல் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
கருத்துகள்