’என்’ எழுத்து இகழேல்
’என்’ எழுத்து இகழேல் |
நான் ஒரு முஸ்லிம் ஆனால் விஸ்வரூபத்தை எதிர்க்கவில்லை ஏன்? Posted: 31 Jan 2013 05:48 AM PST உண்மை என்ன, உரைப்பது என்ன, நம் தன்மை என்ன, தனித்துவம் என்ன... (என் பேஸ்புக்கில் இருந்து...) விஸ்வரூபம் பற்றி இது வரை நான் இங்கே வாய் திறக்கவில்லை, காரணம் என் பேஸ்புக் பக்கத்துக்கு மதச்சாயம் பூசுவதை நான் எப்போதுமே விரும்புவதில்லை. இப்போது சொல்ல நினைப்பதும் நடுநிலையான கருத்து தான். நான் ஒரு முஸ்லிம். அதற்காக பெருமைப்படுகிறேன். என்னுடைய இஸ்லாம் ஒரு மதமல்ல, ஒரு மார்க்கம். அதாவது எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது என்று எனக்குக் கற்றுத் தரும் ஒரு ஆசான். அவ்வளவு தான். அது எனக்கு அமைதியைக் கற்றுத் தருகிறது. பொறுமையைக் கற்றுத் தருகிறது. அழகிய வாழ்வியலைக் கற்றுத் தருகிறது. உண்ணுவது முதல் உறங்குவது வரை, திருமணம், உறவு பேணல், கடன், பிள்ளை வளர்ப்பு என அனைத்திலும் எனக்கு அழகாக வழிகாட்டுகிறது. எனக்கு ஒரு போதும் அது தீவிரவாதத்தையும் மதவாதத்தையும் கற்றுத் தந்ததில்லை. அதனால் தான் நான் பேஸ்புக்கில் மதம் பிடித்து ஆடுவதில்லை, ஆடுபவர்களை நட்பு வட்டத்தில் அனுமதிப்பதுமில்லை. (பேஸ்புக்கில் இப்பதிவும் கமெண்ட்ஸும்: http://www.facebook.com/sumazla/posts/585331091482190) உங்களுக்குப் பிடிக்காவிட்டால் படத்தைப் பார்க்காதீர்கள். புறக்கணித்துவிடுங்கள். அதைவிட்டு விட்டு எதற்காக இப்படி ஆர்ப்பாட்டம் செய்து அடுத்தவர் எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறீர்கள்? தண்ணீருக்குள் பந்தை வைத்து அழுத்தினால் தான் அது வேகமாக வெளியே வரும். இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்ற கருத்தை நீக்க நீங்கள் பாடுபடும் அதே நேரத்தில், இஸ்லாமியர்கள் போராட்டக்காரர்கள் என்ற சாயல் படிந்துகொண்டிருக்கிறது. என் மக்களை மதம்பிடித்த போராட்டக்காரர்களாக இந்த சமுதாயம் பார்ப்பதை சத்தியமாக நான் விரும்ப மாட்டேன். பல்லாயிரம் வருடங்களாகப் போற்றிப்பாதுகாக்கப்படும் இஸ்லாத்தின் கண்ணியம் ஒரு படத்தினால் பாழ்படும் என்றால்.... எம் மீது மிகுந்த பாசம் வைத்துள்ள என் பல கோடி இந்து, கிறுத்துவ நண்பர்கள் ஒரு படத்தினால் தம் இஸ்லாமிய சகோதரர்களைத் தீவிரவாதிகளாகப் பார்க்கத் துவங்குவார்கள் என்றால்... அது முழு முட்டாள்தனம்! குறுகிய மனப்பான்மை!! உன் மார்க்கம் புனிதமான மார்க்கம் என்று நம்பினால், ஒரு சாதாரண திரைப்படம் அதை கெடுத்துவிட முடியுமா? அது என்ன அவ்வளவு சக்தி வாய்ந்ததா? என்னைப் பொறுத்தவரை, இந்த ஆர்ப்பாட்டங்களே போதும் விஸ்வரூபத்துக்கு விளம்பர செலவை மிச்சப்படுத்த என்பேன். அரசியல் ஆதாயத்துக்காக அதிமுக அரசு முஸ்லிம்களை பலிகடா ஆக்கிவிட்டது என்று தான் தோன்றுகிறது. மதவெறி கொண்டவர்கள் எல்லா மதத்திலும் உண்டு... ஆனால் அவ்வாறு வெறி கொள்ள அவர்கள் மதம் சொல்கிறதா என்றால், இல்லை என்பேன். அப்படி சொல்லும் மதம் சரியான மதமாகவும் இருக்க முடியாது. மற்றபடி இந்துக்கள் என்றென்றும் இஸ்லாமியர்களின் உற்ற தோழர்கள் தான். அவர்கள் இப்படத்தைப் பார்த்தாலும் சரி, பார்க்காவிட்டாலும் சரி, எம்மை ஒரு போதும் தவறாகவோ, தீவிரவாதிகளாகவோ பார்க்க மாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன்! மேலும் விஸ்வரூபம் பற்றிய என் கருத்துக்கள் இங்கே: Vishwaroopam என் கருத்துக்கள் சரி என்றால், இப்பதிவுக்கு தமிழ்மணத்தில் ஓட்டுப் போடுங்கள், முடிந்தவரை ஷேர் செய்து மதநல்லிணக்கத்தை உருவாக்குங்கள். நன்றி! - சுமஜ்லா |
You are subscribed to email updates from ‘என்’ எழுத்து இகழேல் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
கருத்துகள்