’என்’ எழுத்து இகழேல்

’என்’ எழுத்து இகழேல்


மழை விட்டாச்சு வாங்க எல்லாரும்....

Posted: 23 Jun 2010 07:28 AM PDT

அது ஒரு அழகான நந்தவனம். பூத்துக் குலுங்கும் அழகிய பூக்களின் வாசனை அனைவரையும் ஈர்த்தது. ஓங்கி உயர்ந்த மரங்களின் ஒய்யாரக் கிளைகளில் ஒயிலான பறவைகள் எந்நேரமும் பாடிக் கொண்டே இருந்தன. அந்த நந்தவனத்தில் ஒரு சின்ன சுண்டெலி ஒன்று இங்குமங்கும் ஓடி சேட்டைகள் செய்து கொண்டிருந்தது. அது செய்யும் சேட்டைகளை ரசிக்க, மயிலினங்களும் மான் கூட்டங்களும் பச்சைக் கிளிகளும் பாடும் பறவைகளும் சிங்கங்களும் சிறும் சிறுத்தைகளும் அவ்வப்போது வந்து சென்று கொண்டிருந்தன. இவை அனைத்தையும் சுண்டெலி தன் நண்பர்களாக்கிக் கொண்டது.

இவ்வாறு சந்தோஷமும் சங்கீதமும் நிறைந்திருந்த வேளையில், ஒரு நாள் லேசாக மழை தூற ஆரம்பித்தது. விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்ததால், அவ்வப்போது மட்டும் சுண்டெலி தலை காட்டிக் கொண்டிருந்தது. அதனால், அதை எதிர்பார்த்திருந்த அதன் நண்பர்களும் ஏமாற்றமடைந்து தாம் வருவதைக் குறைத்துக் கொண்டன. பின்பு தூறல், சாரலோடு கலந்த பெருமழையாக மாறியது. அதனால், சுண்டெலி போய், தன் பொந்தில் பதுங்கிக் கொண்டது. அதன் நண்பர்களும் வேறு நண்பர்களைத் தேடி போய் விட்டன.

ஒரு வழியாக மழை ஓய்ந்து விட்டது. கிழக்கு வெளுத்து விட்டது. வெளிச்சம் தெரிய ஆரம்பித்தவுடன், சுண்டெலி தன் இடத்தை விட்டு வெளியே வந்து பார்த்தால், அங்கு யாருமே இல்லை. ஆனாலும் அது மீண்டும் தன் விளையாட்டை ஆரம்பித்தது. எப்படியும் தன் நண்பர்கள் மீண்டும் வருவார்கள் என்ற நம்பிக்கை அதற்கு!

கதை அவ்வளவு தான்...நெருங்கிய நண்பர்களுக்கு அர்த்தம் புரிந்திருக்கும். புரியாதவர்கள் தலைப்பை ஒரு முறை மீண்டும் படிக்கவும்!

(படிப்பு எல்லாம் நல்லபடியாக முடிந்து ஸ்....அப்பாடா என்று இருக்கிறது. நேற்று தான் (22.6.10) ப்ராக்டிகல்ஸ் (வைவா) முடிந்தது.... அதுவரை பயங்கர அலைச்சல், டென்ஷன்...ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாத நிலைமை! பதிவுலகில் என் மறுபிரவேசம் இன்று...இனி வழக்கம் போல வருவேன்...எழுத நிறைய விஷயங்கள் மலை போல குவிந்திருக்கின்றன....அதோடு, நண்பர்களின் வலைப்பூக்களுக்கும் சென்று பார்க்கணும்...படிக்கணும்...ரசிக்கணும்...! என்னை மறவாமல் அவ்வப்போது வந்து பின்னூட்டமிட்ட(நான் உருப்படியாக எதுவும் எழுதாத போதும்...)நண்பர்களுக்கு நன்றி!!!)

-சுமஜ்லா.

நன்றி சகோதரா...

Posted: 12 May 2010 07:14 AM PDT

நேற்று நான் வெளியே இருந்த போது, என் தம்பி அழைத்து அன்னையர் தின நல்வாழ்த்து சொன்னான்...அவனுடைய ப்ளாக் பார்க்க சொன்னான்...!

இன்று தான் அதைப் பார்க்க நேரம் கிடைத்தது...! படித்தேன்... நெகிழ்ந்தேன்...!

தற்சமயம் மலேசியாவில் இருக்கும் அவனுடைய மன உணர்வுகள் நம் அனைவருக்கும் பொதுவானவை என்பதால், என் இனிய நண்பர்களின் பார்வைக்கு இங்கு லின்க் தருகிறேன்! எண்ணத்துளிகள்

இந்நாள் அன்னையர்களுக்கும் இனி அன்னையாகப் போகிறவர்களுக்கும் எனதினிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

-சுமஜ்லா

எழுதி வைக்க நேரமில்லையே!

Posted: 11 Aug 2012 08:11 AM PDT


வானத்திலே நிலவிருக்கு,
கவியூறும் சுவை எனக்கு,
எழுதி வைக்க நேரமில்லையே!!

தோட்டத்திலே மலரிருக்கு,
எழுதப்படா கவியிருக்கு,
பதிந்து வைக்க காலமில்லையே!!

மொட்டைமாடி தனிமையிலே,
வெட்டவெளி நோக்கையிலே,
வேகமாக நினைவு நகருதே!!

வட்டமாக புத்தகங்கள்,
திட்டமாக இடம்பிடிக்க,
காண அதைக் கனவு கலையுதே!!

பதிவுலகம் வர ஆசை,
பதில் கூறும் மனவோசை,
படிப்பு என்னை தடுத்து நிறுத்துதே!!

இணையத்தில் 'லாக்'(log) ஆனால்,
படிப்பிங்கு 'லாக்' (lock) ஆகும்,
கடிவாளம் பிடித்து இழுக்குதே!!

தேர்வு தரும் சுமையெனக்கு,
படித்துக் களைத்த இமையிருக்கு,
வேறெதிலும் நாட்டமில்லையே!!

படிப்பென்னும் துணை நமக்கு,
எதிர் காலம் அதிலிருக்கு,
அதனால், மன வாட்டமில்லையே!!

நண்பர்களுக்கு,

தற்சமயம் எனக்கு தேர்வு நெருங்கி வருவதால், (மே 27 தொடங்குகிறது) வலைப்பக்கம் தலைவைக்க முடியவில்லை....அதோடு, இப்போ, மாதிரித் தேர்வுகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன....அதில் நல்ல மதிப்பெண் பெற்று (முதல் இடம்) வருகிறேன். அதற்காக நிறைய உழைக்க வேண்டி இருக்கிறது. அதனால், பல பின்னூட்டங்கள், சந்தேகங்களுக்கு பதில் தர முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

நான் நல்ல முறையில் தேர்வெழுதி, நல்ல மதிப்பெண் பெற வேண்டிக் கொள்ளுங்கள்...! தேர்வு முடிந்த பின், மீண்டும் பழைய வேகத்துடன் பதிவுலகிற்கு வருவேன்....! அது வரைக்கும் பை...பை...!!

-சுமஜ்லா.

சொந்த கதை! நொந்த கதை!

Posted: 16 Mar 2010 08:42 AM PDT

நேற்று காலேஜில் என்ன ஆச்சுன்னா.....

காலங்காத்தால நல்ல தலைவலி..., முதல் நாள் ராத்திரி கண்ணு முழிச்சுப் படிச்சதுனால வந்த வினையோ என்னவோ, தைலத்தை எடுத்துத் தடவிக்கிட்டே உட்கார்ந்து இருந்தேன்...!

செகண்ட் பீரியட் ஒன்னும் முடியல. எங்க இங்கிலீஷ் சார்கிட்ட சொல்லிட்டு கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைத்தேன். சார் வேற டெஸ்ட்னு சொல்லியிருந்தார். டெஸ்ட்ல இருந்து நான் தப்பிக்கிறேன்னு பிள்ளைங்களுக்குப் பொறாமை...!

ரொம்ப முடியலைனு சொல்லிட்டு போய் கடைசி பெஞ்சில படுத்திட்டேன். பாவிப் புள்ளைங்க, "சார் சுஹைனாக்கா வேற படுத்திட்டாங்க (மொத்த இங்கிலீஷ் மேஜர் ஸ்டூடண்ட்ஸே 8 பேர் தான்)... அதனால, நாளைக்கு எல்லாரும் ஒன்னா டெஸ்ட் எழுதறோம், இன்னிக்கு நாங்க ரெக்கார்டு எழுதறோம்"னு பர்மிஷன் வாங்கிட்டு எழுதிட்டிருந்தாங்க...

சார் போயிட்டார். எல்லாரும், மாற்றி மாற்றி, என்னை எழுப்பி, எதாவது ஒன்னு கேட்டுட்டே இருந்தாங்க... அப்ப, சிந்துன்னு ஒரு பொண்ணு, "அக்கா, உங்க பேனாவுல இருந்து கொஞ்சம் இங்க் ஊத்திக்கிட்டுமா அக்கா?"னு கேட்டா!

"இல்ல சிந்து என் பேனா ஹீரோ பேனா...டேங்க் சின்னது...அதனால, நீ வேணா என் பேக்ல இருந்து, என் பேனாவ எடுத்து எழுதிக்கோ"னு நான் சொல்லிட்டு தூங்கிட்டேன்.

பீரியட் முடிஞ்சு பெல் அடிச்சாச்சு.

சிந்து என் பேனாவுல எழுதிட்டு இருந்தா...

"சிந்து, பேனாவக் கொடுப்பா"

"அக்கா, நா எழுதணும்க்கா"

பாரு, என் பேனாவக் கேட்டா தரமாட்டேங்குறா...அட என்கிட்ட ஒன்னு தான் இருக்கு, நான் எழுத என்ன செய்றது?

"கொடு சிந்து...பீரியட் முடிஞ்சுதுல்ல, இப்ப மேம் வந்திருவாங்க...அப்புறமா எழுதறப்போ நீ வாங்கிக்க" எழுதிக் கொண்டிருந்த பேனாவை விடாப்பிடியாக வாங்கிக் கொண்டு புறப்பட்டேன்.

மேத்ஸ் சார், என்கிட்ட எக்ஸலில் ஒரு சின்ன சாஃப்ட்வேர், டெஸ்ட் அண்ட் மெஸர்மெண்ட் ரெக்கார்டுக்காக செய்துட்டு வரச் சொல்லி இருந்தார். என் பென் ட்ரைவில் இருந்த அந்த ஃபைலை, அவருடைய சிஸ்டத்தில் காப்பி செய்துவிட்டு, அதை எப்படிப் பயன்படுத்துவது என்று விளக்கிவிட்டு, நான் மீண்டும் வகுப்பறைக்கு வந்தேன்.

சிந்து என்னைப் பார்த்து முறைத்தபடியே, "அக்கா, எனக்கு பேனா வேணும்க்கா...நான் எழுதணும்" என்றாள்.

எனக்கோ கோபமே வந்து விட்டது. இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல், "சிந்து இந்தா வேணும்னா ரெண்டு சொட்டு இங்க் வாங்கிக்க, பேனா இல்லாம நான் எப்படி நோட்ஸ் எடுக்கறது?" என்றேன்.

"அக்கா....அது என் பேனாக்கா....நான் உங்க பேனாவ எடுக்கவே இல்லக்கா, தோ இவகிட்ட அப்பவே இங்க் வாங்கிட்டேன்" என்று சொல்ல,

அசடு வழிந்தேன்...!

ஒரே மாதிரியான ரெண்டு பேனாவால் வந்த குழப்பம். என் பர்ஸில் சமத்தாகத் தூங்கிக் கொண்டிருந்த என் பேனாவை எடுத்து சிந்துகிட்ட காண்பித்து, "பாருடா என்னோடதும் இதே மாதிரி...அதான், நீ இதத்தான் எடுத்து எழுதறியோனு நினைச்சிட்டேன். சாரிடா...இந்தா உன்னோட பேனா" என்று கொடுத்தேன்...!

இன்னிக்கு கவர்மெண்ட் லீவு...!சோ, டெஸ்ட் நாளைக்கு...!

இந்த நிகழ்ச்சியால், எனக்கு பாடி வாழ்க்கை முதல் நாளன்று வந்த HRD Trainer ஜாஹிர் உசேன் அவர்கள் சொன்ன குட்டிக் கதை நினைவுக்கு வந்தது...!

இரு ஆண்கள், ப்ளாட்பார்மில் அருகருகே நின்று கொண்டு ட்ரைனுக்காகக் காத்திருகிறார்கள்...! அப்போ, முதல் நபர் பையிலிருந்து பிஸ்கட் எடுத்து சாப்பிட, இரண்டாமவர் ஒரு பிஸ்கட் கேட்டிருக்கிறார். என்னடா, ஆள் பார்க்க டீசண்டாக இருக்கிறார், இப்படி கேட்டு வாங்கி சாப்பிடறாரே என்று நினைத்தபடியே இவர் பிஸ்கட் கொடுக்க, ரயில் வந்து விட்டது.

ரயிலிலும் அவர் பக்கத்திலேயே அமர, இவருக்கு மனதிற்குள், 'இவன் இன்னும் என்னென்ன கேட்பானோ' என்ற எண்ணங்கள்.

கையில் மீதி இருந்த பிஸ்கட் பாக்கிட்டில், "சார், ஒரு பிஸ்கட் கொடுங்கள்" என்று அவர் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட, இவரோ தொல்லை பொறுக்க மாட்டாமல், எழுந்து, கம்பார்ட்மெண்ட் வாசலருகே வந்து நின்று கொண்டு எல்லா பிஸ்கட்டையும் சாப்பிட்டு விட்டு, வந்து தன் இருக்கையில் அமர்கிறார்.

"சே...இந்த விவரங்கெட்ட மனுசனுக்கு விவஸ்தையே இல்லை" என்று மனதிற்குள் திட்டியபடியே, தண்ணீர் பாட்டில் எடுக்க தன் பையைத் திறந்தவருக்கு அதிர்ச்சி!

இவருடைய பிஸ்கட் பாக்கிட் அங்கேயே இருக்கிறது...! இவர் தவறுதலாக அவருடைய பையில் இருந்து பிஸ்கட் எடுத்து சாப்பிட்டிருக்கிறார்....! ஆனால், அவரோ பெருந்தன்மையாக எதுவும் சொல்லாமல், பரிதாபமாக இவரிடம் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டிருக்கிறார். இப்போ சொல்லுங்க யாரு ரொம்ப டீசண்ட்னு???

கதையெல்லாம் ஓக்கே தான்...! இங்கே கதையடிச்சிட்டு இருந்தா...நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் டெஸ்ட்டில் நான் அம்பேல் தான்...! விடு....ஜூட்....!

-சுமஜ்லா...

அரபு சீமையிலே... - 17

Posted: 13 Mar 2010 07:37 PM PST

அருமைத் தோழர்கள் அண்ணலார் மேல்
பெருமதிப்பு கொண்டிருந்தனர்.
அவர்பொருட்டு, தம்முயிரையும்
ஆசையுடன் தரத்துடித்தனர்.

அத்தகைய தோழரொருவர் அர்க்கம்;
என்றும் நாடினார் சொர்க்கம்!
சபா குன்றின் மேலிருந்த
தம் மாளிகையை
நபிகளுக்கு செய்தார் தத்தம்!

அவர்
பதினெட்டு வயது
மக்ஜூமி கோத்திரத்தாரே!
அதே கோத்திரத்து
அபூஜஹலும்
தறிகெட்டு மதிகெட்டு
ஆத்திரத்தால்
கொக்கரித்தானே!!

அர்க்கமின் மாளிகையில்
சொர்க்கத்தைத் தேடி
சர்க்குண மார்க்கத்தின்
தொழுகை நடந்தது;
இறையை நோக்கி,
அழுகை புரிந்தது!

தாருஸ்ஸலாம் என்று அது
பேரும் பெற்றது!
சாந்தி மாளிகையில்,
சாந்தம் தவழ்ந்தது!!

கொக்கரித்த அபூஜஹல்,
தாருல் நத்வாவில் கூடினான்!
கட்டிளங்காளையர் பலரைக்
கூட்டினான்!
நபிகளுக்கு எதிராக
ஒரு வேள்வியை
மூட்டினான்!!

விலை வைத்தான்
நபிகள் தலைக்கு!
உலை வைத்தான்
முஸ்லிம்கள் நிம்மதிக்கு!!

நூறு ஒட்டகை தருவேனென்று
தத்தம் செய்தான்.
பேரும் புகழும் தமக்கே என்று
சத்தம் செய்தான்.

உமர் இப்னு கத்தாப் என்னும்
முப்பத்திமூன்று வயது
இளவல் ஒருவர்
அப்பக்கம் வந்தார்;
காட்டிய ஆசையில் தம்
கருத்தை இழந்தார் - தாம்
அக்காரியத்தை செய்து முடிப்பதாக
திருவாய் மலர்ந்தார்!

பளபளக்கும் வாளுடன்
கனல்தெறிக்கும் கண்ணுடன்
மனம் முழுக்க வெறியுடன்
மதிகெட்ட மனத்துடன்
தீரத்துடன் நடக்கிறார்
ஈர இதயர் இல்லம் நோக்கி!!

மக்களின் உள்ளங்கள்
மறைந்திருப்பதை அறியாது!
சொற்களின் வேகங்கள்
இறையாணையைத் தெரியாது!!

வழியில் ஸஅத் பின் அபீவக்காஸ்
என்னும் வாலிபர் அவரை
வழிமறித்தார்!
கோபத்தைத் தூண்டும் சில
மொழியுரைத்தார்!!

"கையில் வாளேந்தி,
கடுகி நடக்கும் காரணமென்ன
காளையரே?"

"முஹமதை ஒழித்துக் கட்டி
சகமதில் புகழைப்பெற
சபதம் பூண்டிருக்கிறேன்
நண்பரே!"

"சொல்வது சரிதான்
நான் புகல்வதை
சற்றுக் கேளும்!
உள்வீடு பூசித்தான்
வெளிவீடு பூச வேண்டும்!
உம் தங்கையும் மைத்துனரும்
புதுமார்க்கத்தில் இணைந்துள்ளனர்!
அவர்களையன்றோ முதலில்
திருத்த வேண்டும்???
பிறகல்லவா உம்பார்வை
முஹமதை நோக்கித்
திரும்ப வேண்டும்???"

உமரவரை வழிமறித்தார்,
நயம்படவே இடித்துரைத்தார்!

-சுமஜ்லா.
(வளரும்)

பாடி வாழ்க்கை - 5

Posted: 10 Mar 2010 12:31 AM PST

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமெல்லாம் முடியும் தருவாயில் ஏனோ ஒரு வித சோகம் மனதைக் கவ்விக் கொள்கிறது. எனக்குக் காலில் வலி வேறு...! ஆனாலும் எப்படியும் போயே தீர்வது என்று, கேம்ப் கடைசி நாளன்று, பெயின் கில்லர் எடுத்துக் கொண்டு போய் விட்டேன்.

காலையில், மனவளக்கலை புரபசர், திரு.பரமசிவன் ஐயா அவர்கள் வந்திருந்தார்கள். அவருடன் பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பற்றி கலந்துரையாடல் நடந்தது. சீஃப் கெஸ்ட்டாக, திரு.ரங்கசாமி ஐயா அவர்களும், திரு.சுவாமிநாதன் ஐயா அவர்களும் பங்கேற்றனர். இடையில் தேநீர் மற்றும் உளுந்து வடை தரப்பட்டது.


மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி மற்றும் தயிர் பச்சடி, தயிர் சாதம் வழங்கப்பட்டது.

மதியம் நடனப் போட்டி மற்றும் கல்சுரல்ஸ்! நடனப்போட்டியில் பங்கேற்றோர்:

குமாரி.பிரியா

குமாரி.சசிரேகா

திருமதி.மேகலா.

குமாரி.நித்யா.

நாங்க, ஒரு நாலுபேர் சேர்ந்து, அஞ்சலி படத்தின், 'இரவு நிலவு உலகை' பாடல் பாடினோம். அடுத்ததாக, ஒரு காமடி நாடகமும் பின், குழு நடனமும் நடை பெற்றது.

காலேஜ் சேர்மன் அவர்கள் தனது மகளுடன் வந்திருந்து பரிசுகள் விநியோகித்தார்கள். எவர்சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

எனக்குக் கிடைத்த பரிசுகள் விபரம்:

முதல் பரிசு
1.பேச்சுப் போட்டி
2.உடனடிப் பேச்சு

இரண்டாம் பரிசு
3.மிமிக்ரி
4.கண்ணைக் கட்டி வால் வரைதல்
5.ஓரங்க நாடகம்

மூன்றாம் பரிசு
6.ரங்கோலி
7.உடனடி சமையல்
8.பழமொழி கண்டுபிடித்தல்

எனக்குக் கிடைத்த அதிகப்பட்ச பரிசுகளைப் பார்த்து, பிரின்சிபால் 'சுஹைனா, பரிசுகளைக் கொண்டு போக டெம்போ எதாவது கொண்டு வரச் சொல்லி இருக்கியா?' என்று கிண்டலடிக்க, வெட்கத்துடனும், பெருமையுடனும் தூக்க முடியாமல் தூக்கி வந்தது வாழ்நாள் பூராவும் மறக்க முடியாத சிறுபிள்ளைத்தனமான சந்தோஷ நினைவுகள்.

மாலை பப்ஸுடன் ஐஸ்கிரீம் விநியோகிக்கப்பட்டது.

'கனமான பரிசு கையில்
சுகமான சோகம் மனதில்' கொண்டு பிரியா விடை பெற்றோம்.

இனி, அடுத்த வாரம், காலேஜ் டூர் 2 நாட்கள்(கேரளா) போகிறோம். போய் வந்தவுடன், சுடச்சுட உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

-சுமஜ்லா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!