சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்பெஷல் ரெசிபிகள்
சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்பெஷல் ரெசிபிகள்
இன்றைய தலைமுறையினரைப் பாடாய்ப்படுத்திவரும் மிக முக்கிய நோய்களில் ஒன்று... சர்க்கரை நோய். இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்ட உடனேயே, பலரும் பெருங்குழப்பத்துக்கு ஆளாவது உணவு பற்றித்தான்.''இனிமே இனிப்பையே தொடக் கூடாதோ? அரிசி, உருளைக்கிழங்கு கிட்டக்கூட நெருங்கக் கூடாதாமே. வெறும் பாகற்காய்தான் சேர்த்துக்கணுமா?'' என்பது போன்று பல சந்தேகங்கள் மனதில் எழும்.
''சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று தெரிந்து கொள்வது மிக முக்கியம்.
உணவுப்பழக்கத்தின் மூலமே சர்க்கரை நோயைப் பெரும்பாலும் கட்டுப்படுத்திவிடலாம்'' என்று சென்னை எம்.வி.டயபடீஸ் சென்டரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணராகப் பணிபுரியும் ஷீலா பால் கூறுகிறார்.
''சர்க்கரை நோயாளிகள், மூன்று வேளை உணவை, ஆறு வேளையாக சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். எதையுமே அளவோடு கொஞ்சமாக சாப்பிட வேண்டும். சர்க்கரை, இனிப்பைத் தவிர உடலுக்கு வேறு எந்தப் பலனையும் தருவது இல்லை. இனிப்புகளை நிறைய சாப்பிடுவதால்தான், உடலில் சர்க்கரைச் சத்து சேர்ந்துவிடுகிறது. எனவே, தவிர்ப்பது முக்கியம்'' என்கிற ஷீலா பால், சர்க்கரை நோய்க்கான சில ஸ்பெஷல் ரெசிபிகளைச் சொல்ல, அவற்றைச் செய்து காட்டி அசத்தினார் சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்.
சத்துமாவு பாசிப்பருப்பு அடை
--------------------------------------------
தேவையானவை: எல்லாத் தானியங்களும் சேர்த்து அரைத்த சத்து மாவு, பாசிப்பருப்பு - தலா அரை கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய பூண்டு, கொத்துமல்லித் தழை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன், சத்துமாவையும் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். அதில் வெங்காயம், பூண்டு, கொத்துமல்லி, மிளகு, சீரகத்தூள் எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, சிறிய அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும். அடைக்குத் தொட்டுக்கொள்ள, காரச்சட்னி அருமையாக இருக்கும்.
கம்பு தயிர் சாதம்
-------------------------
தேவையானவை: கம்பு - ஒரு கப், தண்ணீர் - 5 கப், பால் - ஒன்றரை கப், தயிர் - ஒரு கரண்டி, தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2, இஞ்சி - ஒரு துண்டு, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, உப்பு - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: கம்பை சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி வைக்கவும். சிறிது நேரம் கழித்து, மிக்ஸியில் போட்டு, 'விப்பர்’ பட்டன் கொண்டு, இரண்டு முறை அடித்து எடுத்துப் புடைத்து, தோலை நீக்கிக்கொள்ளவும். (கம்பை ஒரு தட்டில் பரத்தி ஊதினால், தோல் போய்விடும்). பிறகு, மீண்டும் மிக்ஸியில் போட்டு ரவைப் பதத்தில் உடைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கவும்.
உடைத்த கம்புடன் 5 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் மிதமான தீயில் வைக்கவும். நாலைந்து விசில் வந்ததும் இறக்கி, பிரஷர் போனதும் திறந்து, பால் சேர்த்து நன்கு கிளறவும்.
பிறகு, கடாயைக் காயவைத்து, எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, பொன்னிறமானதும், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் கிள்ளிப்போட்டு, பச்சை மிளகாய், இஞ்சியை வதக்கி, கம்பு சாதத்தில் சேர்க்கவும். கடைசியாக, உப்பு, தயிர், தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.
மாங்காய் இஞ்சி நெல்லிக்காய்த் துவையல்
----------------------------------------------------------------
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 4, மாங்காய் இஞ்சி - 50 கிராம், கொத்துமல்லித் தழை - கைப்பிடி, பச்சை மிளகாய் - 2, புளி - சிறு அளவு, துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: மாங்காய் இஞ்சியைத் தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கவும். நெல்லிக்காயையும் கொட்டை நீக்கி, நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இஞ்சி, நெல்லிக்காயுடன் மற்ற பொருட்களையும் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, ஆறவைத்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்.
சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், பிரெட், தோசையின் மேலே தடவி சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு: இந்தத் துவையலை சாதத்தில் கலந்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, ஒரு துளி நெய்விட்டுக் கலந்தால், சுவையான 'மாங்காய் இஞ்சி - நெல்லிக்காய் சாதம்’ தயார்.
கலர்ஃபுல் குடமிளகாய் சாலட்
--------------------------------------------
தேவையானவை: சிவப்பு, மஞ்சள், பச்சை குடமிளகாய்கள் - தலா பாதி அளவு, லெட்டூஸ் இலை - சிறிதளவு, தக்காளி - 1, ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன், வினிகர் (அல்லது) எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய புதினா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மூன்று நிற குடமிளகாய்களையும் நீளவாக்கில், மெல்லியதாக நறுக்கவும். தக்காளியையும் மெல்லிய நீள வில்லைகளாக நறுக்கவும். லெட்டூஸ் இலைகளைக் கிழித்துப் போடவும்.
ஒரு சிறிய பாத்திரத்தில் ஆலிவ் ஆயில், உப்பு, சர்க்கரை, வினிகர் (அல்லது) எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய புதினா சேர்த்து, நறுக்கி வைத்திருக்கும் காய்களை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: நகரங்களில் உள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் 'ஓரிகானா’ என்னும் பதப்படுத்திய, வாசனை இலை கிடைக்கிறது. புதினாவுக்குப் பதிலாக இந்த இலை அரை டீஸ்பூன் சேர்க்கலாம். சாலட்டின் மணமும் சுவையும் இன்னும் தூக்கலாக இருக்கும்.
முளைகட்டிய பாசிப்பயறு சூப்
--------------------------------------------
தேவையானவை: முளைகட்டிய பாசிப்பயறு - அரை கப், பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 4 பல், தனியாதூள் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, கொத்துமல்லி, எண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தேங்காய்ப்பால் - ஒரு கரண்டி.
செய்முறை: வெங்காயம், பூண்டைத் தோலுரித்து பொடியாக நறுக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பூண்டு, வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதங்கியதும், புதினா, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும். 3 டம்ளர் தண்ணீரில், தனியாதூளைக் கரைத்து வடிகட்டி, வதக்கிய கலவையில் சேர்க்கவும். நன்றாகக் கொதிக்கும்போது, முளைகட்டிய பயறைச் சேர்த்து, வேகவிடவும். அரை வேக்காடு வெந்ததும் இறக்கி, தேவையான உப்பு சேர்த்து, தேங்காய்ப்பாலை ஊற்றிக் கலந்து பரிமாறவும். தனியா வாசத்துடன், வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த சூப்.
விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் மிளகுத்தூளை, கொதிக்கும்போது சேர்க்கலாம். சிறிது கெட்டியாக வேண்டும் என்பவர்கள், பாதி வெந்த நிலையில் இருக்கும் பயறை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, அரைத்து, சூப்பில் சேர்த்துக் கலக்கிக்கொள்ளலாம்.
நச்சுக்கொட்டைக் கீரை மிளகுப் பொரியல்
--------------------------------------------------------------
தேவையானவை: கழுவி நறுக்கிய நச்சுக்கொட்டைக் கீரை - 2 கப், பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 6 பல், வறுத்துப் பொடித்த மிளகுத்தூள், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்.
செய்முறை: பூண்டு, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, சீரகம் தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி, கீரையைச் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து, மூடி வைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
கீரை நன்கு வெந்ததும், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். விருப்பப்பட்டால் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.
பொரியலில் மிளகு வாசம் மூக்கைத் துளைக்கும்.
குறிப்பு: நச்சுக்கொட்டைச் செடி எல்லா இடத்திலும் பரவலாக வளர்ந்து கிடக்கும். பொதுவாக யாரும் தேடாமல் கிடக்கும் இந்த இலைகள், அதிக சத்து நிரம்பியவை. அடிக்கடி செய்து சாப்பிடலாம். உடலுக்கும் நல்லது.
கருத்துகள்