ஆஸ்துமா நோய்க்கான ஊக்கிகள்


ஆஸ்துமா நோய்க்கான ஊக்கிகள்


ஊக்கிகள் என்பது உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா நோயை மோசமாக்கும் காரணிகளாகும். உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா நோய்க்கு ஒரு தொகுப்பு ஊக்கிகள் இருக்கலாம். அவை மற்றப் பிள்ளைகளிலிருந்து வித்தியாசப்பட்ட ஊக்கிகளாக இருக்கலாம். உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா நோய்க்கான ஊக்கிகள் என்ன என்பதைக் கண்டறிந்து அவற்றை நீக்க அல்லது குறைக்க முயற்சிப்பது முக்கியமானது.

பொதுவான ஊக்கிகள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

  • தடிமல் மற்றும் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள்
  • சிகரெட் புகை மற்றும் வளிமண்டல மாசு, குளிர் காற்று, மற்றும் இரசாயனப் புகை போன்ற வேறு எரிச்சலுண்டாக்கக்கூடிய பொருட்கள்
  • செல்லப்பிராணிகளின் முடி, இறகு, செதில், தூசியிலுள்ள நுண்ணுயிர்கள், மகரந்தப்பொடிகள், மற்றும் பூஞ்சணம் போன்ற ஒவ்வாமை ஊக்கிகள்
  • குறிப்பிட்ட சில மருந்துகள்  
    சில பொதுவான ஆஸ்துமா ஊக்கிகள்

தடிமல் மற்றும் காய்ச்சல் (ஃப்ளூ) போன்ற தொற்றுநோய்கள்


தடிமல் மற்றும் காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுநோய்கள் ஆஸ்துமா நோயின் சாதாரணமான ஊக்கிகள் ஆகும். உங்கள் பிள்ளையைப் பாதுகாப்பதற்கு உதவக்கூடியவை பின்வருமாறு:

  • தடிமல் அல்லது காய்ச்சல் உள்ளவர்களிடமிருந்து உங்கள் பிள்ளையைத் தனியே வையுங்கள்.
  • உங்கள் பிள்ளை மற்றும் உங்கள் குடும்ப அங்கத்தினர் அடிக்கடி தங்கள் கைகளைக் கழுவிக்கொள்கிறார்கள் என்பதில் நிச்சயமாயிருங்கள்.
  • ஒவ்வொரு வருட இலையுதிர்காலத் தொடக்கத்திலும் உங்கள் பிள்ளைக்கு, ஃப்ளூ ஊசி கொடுப்பதைப்பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்து பேசுங்கள்.
  • எல்லா வேளைகளிலும், உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா நோயைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். இது உங்கள் பிள்ளைக்குத் தடிமல் அல்லது காய்ச்சல் வரும்போது ஆஸ்துமா நோய்க்கான குறைந்த அறிகுறிகளைக் கொண்டிருக்க அவனுக்கு உதவி செய்யும்.

உறுத்தல் உண்டாக்கக்கூடிய பொருட்கள்


உறுத்தல் உண்டாக்கக்கூடிய பொருட்கள் என்பது உங்கள் பிள்ளையின் சுவாசப் பாதையில் உறுத்தலையுண்டாக்கி ஆஸ்துமாவுக்கான அறிகுறிகளை ஏற்படுத்தும் பொருட்களாகும். சில சமயங்களில் உறுத்தல் உண்டாக்கக்கூடிய பொருட்களிலிருந்து தூர விலகியிருப்பது கடினமாக இருந்தாலும், உங்கள் பிள்ளைக்கு அவற்றைத் தவிர்க்க உதவி செய்யக்கூடிய வழிகள் உள்ளன.

உறுத்தல் உண்டாக்கக்கூடிய பொருட்களின் சில உதாரணங்கள் பின்வருமாறு:

  • சிகரெட் புகை
  • விறகு மற்றும் எண்ணெய்ப் புகை
  • வளிமண்டல மாசு
  • குளிர் காற்று
  • இராசயனப் புகை அல்லது கடுமையான வாசனைகள்

சிகரெட் புகை


பிள்ளைகளில் ஆஸ்துமா அடிக்கடி, பிறர் புகை பிடிப்பதால் ஊக்குவிக்கப்படுகிறது. உங்கள் பிள்ளையை புகை ஊக்கியிலிருந்து பாதுகாப்பதற்கான சில வழிகள் பின்வருமாறு:

  • நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால், அதை நிறுத்த முயற்சிக்கவும்.
  • வீட்டிற்குள் புகை பிடிக்கவேண்டாம். புகை பிடிப்பவர்களை வீட்டுக்கு வெளியே போய் புகை பிடிக்கும்படி கேட்கவும்.
  • சிகரெட் புகை உடைகளில் தங்கிக்கொள்ளும் என்பதை நினைவில் வையுங்கள். சிகரெட் புகைக்கு அருகாமையிலிருந்த எவராவது உங்கள் பிள்ளைக்கு அருகில் வந்தால், அது உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா நோயை மோசமாக்கும்.
  • புகை உள்ள இடங்களைத் தவிர்க்கவும். நீங்கள் வெளியே போயிருக்கும்போது உங்கள் பிள்ளை சிகரெட் புகையிலிருந்து தூர விலகியிருக்க அவனுக்கு உதவி செய்யுங்கள்.
  • மோட்டார் வண்டிக்குள் எவரேனும் புகை பிடிப்பதை அனுமதிக்கவேண்டாம்.

விறகு மற்றும் எண்ணெய்ப் புகை


விறகு அடுப்பு அல்லது உல்லாச முகாமில் அடுப்பு எரிக்கும்போது வரும் புகையும் எரிச்சலை உண்டாக்கும். உங்கள் பிள்ளையைப் பாதுகாக்க சில வழிகள் பின்வருமாறு:

  • உங்கள் பிள்ளையை ஃபையர் பிளேஸ், விறகடுப்பு, அல்லது உல்லாச முகாம்களில் அடுப்பு எரிக்கும்போது வரும் புகை என்பனவற்றிலிருந்து தூர விலக்கி வையுங்கள்.
  • எண்ணெய் வெப்பமூட்டியிலிருந்து வரும் புகையிலிருந்து உங்கள் பிள்ளையை தூர விலக்கி வையுங்கள்.

வளிமண்டல மாசு


வெப்ப மற்றும் கோடையில் ஈரலிப்பான காலங்களில் வளிமண்டல மாசு மிகவும் அதிகமாயிருக்கும். உங்கள் பிள்ளையை வளிமண்டல மாசிலிருந்து பாதுகாக்க சில வழிகள் பின்வருமாறு:

  • தொலைக்காட்சியில் அல்லது இணைய தளத்தில் அறிவிக்கப்படும் வளிமண்டல தன்மை பற்றிய அட்டவணையைப் பின்பற்றவும்.
  • வளிமண்டலத் தன்மை வெளியில் மோசமாக இருக்கும்போது ஏர்கண்டிஷன் வசதி கிடைக்கக்கூடிய உள்ளரங்கினுள் உங்கள் பிள்ளையைத் தங்க வைக்கவும். இது ஏர்க்கண்டிஷன் உள்ள வீடு, ஷொப்பிங் மால், அல்லது ஒரு அலுவலகக் கட்டிடமாக இருக்கலாம்.
  • வளிமண்டலத் தன்மை மோசமாக இருக்கும்போது வீட்டின் மற்றும் மோட்டார் வண்டியின் கதவுகளை மூடி வைக்கவும். முடியுமானால் ஏர்கண்டிஷனைப் போடவும்.

குளிர் காற்று


வெப்பநிலையில் ஒரு திடீர் மாற்றம் ஏற்படும்போது உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா நோய் மோசமாகலாம். ஒரு ஆஸ்துமா நோய்த் தொடர் நிகழ்வை தூண்டும், குளிர் காற்றைத் தடுப்பதற்கான சில வழிகள் பின்வருமாறு:

  • உங்கள் பிள்ளை குளிரான காலநிலையில் வெளியே போவதற்கு முன், அவனின் மூக்கு மற்றும் வாயை மூடக்கூடிய, கழுத்தில் சுற்றும் சால்வையை அணிந்திருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் பிள்ளை சுவாசிக்கும் காற்றை வெப்பமாக்க மற்றும் ஈரலிப்பாக்க உதவும்.
  • குளிர் காலங்களில் உங்கள் பிள்ளையை உள்ளரங்குக்குள் உடற்பயிற்சி செய்ய அனுமதியுங்கள்.
  • உங்கள் பிள்ளையின் ஆசிரியரிடம், இடைவேளையின்போது உங்கள் பிள்ளையை உள்ளரங்குக்குள் தங்க அனுமதிக்கும்படி கேட்கவேண்டியிருக்கலாம்.

இரசாயனப் புகை மற்றும் கடுமையான வாசனைகள்


சில கடுமையான வாசனையுள்ள வாசனைத் திரவியங்கள் மற்றும் இரசாயனப் புகைகள் என்பன உங்கள் பிள்ளையின் சுவாசப் பாதையில் உறுத்தலை உண்டாக்கக் கூடும். சில உதாரணங்கள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

  • சுத்தம் செய்யும் பொருட்கள்
  • பெயின்ட்கள் மற்றும் பெயின்டை உரிக்கும் மருந்துகள்
  • வாசனைப் பொருட்கள்
  • ப்ளீச்
  • காற்றைப் புத்துணர்ச்சியடையச் செய்யும் வாசனைப் பொருட்கள்
  • கிருமிநாசினிகள்

இந்த எரிச்சலூட்டும் பொருட்களிலிருந்து உங்கள் பிள்ளையைப் பாதுகாக்க சில வழிகள் பின்வருமாறு:

  • இரசாயனப் புகைகள் மற்றும் கடுமையான வாசனைகளிலிருந்து உங்கள் பிள்ளையைத் தூர விலக்கி வையுங்கள்.
  • உங்கள் அறைக்கு வர்ணம் பூசிய பின்னர் உங்கள் அறை யன்னல்களை திறந்து காற்றை வெளியேறவிட முயற்சி செய்யுங்கள். வாசனை வெளியேறிய பின்னர் உங்கள் பிள்ளையை அறையினுட் செல்ல அனுமதியுங்கள்.

ஒவ்வாமையை உண்டாக்கும் பொருட்கள்


ஒவ்வாமையை உண்டாக்கும் பொருட்கள் என்பது உங்கள் பிள்ளைக்கு உடலில் எதிர்விளைவை உண்டாக்கும் பொருட்கள் ஆகும். ஆஸ்துமா நோய் உள்ள பிள்ளைகள் எல்லாருக்குமே ஒவ்வாமை இருப்பதில்லை. ஆனால் உங்கள் பிள்ளைக்கு ஒவ்வாமைகள் இருந்தால், அவளுக்குத் தொல்லை கொடுக்கக்கூடிய ஒவ்வாமையை உண்டாக்கும் பொருட்களை கட்டுப்படுத்துவது அல்லது அவற்றிலிருந்து தூரமாக இருப்பது முக்கியம்.

ஒவ்வாமையை உண்டாக்கும் பொருட்களை உங்கள் பிள்ளை சுவாசித்தால் அவை அவளின் ஆஸ்துமாவை மோசமாக்கும். ஒவ்வாமையை உண்டாக்கும் பொருட்கள் நுரையீரலிலுள்ள சுவாசப் பாதையை வீக்கமடைய மற்றும் குறுகியதாகச் செய்யும். இது காற்று கடந்து போவதைக் கடினமாக்கும். இது இருமல், மூச்சிரைப்பு, விரைவாகச் சுவாசித்தல், மற்றும் வேறு ஆஸ்துமாவுக்கான அறிகுறிகளை உண்டாக்கலாம்.

ஒவ்வாமையை உண்டாக்கும் பொருட்களுக்கான சில உதாரணங்கள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

  • செல்லப் பிராணிகளின் முடி, இறகு மற்றும் செதில்கள்
  • தூசியிலுள்ள நுண்ணுயிர்கள்
  • மகரந்தப் பொடிகள்
  • பூஞ்சணங்கள்

செல்லப் பிராணிகளின் முடி, இறகு மற்றும் செதில்கள்


உங்கள் பிள்ளை செல்லப் பிராணிகளுக்கு ஒவ்வாமையைக் காண்பித்தால், ஆஸ்துமா தொடர் நிகழ்வைத் தடுப்பதற்காக, உங்கள் செல்லப் பிராணிகளுக்கு வேறொரு வீட்டைத் தயார் செய்வது சிறந்த முறையாகும். செல்லப் பிராணிகள் வெளியேற்றப்பட்டபின்னர் உங்கள் வீட்டை முழுமையாகச் சுத்தம் செய்வது மிகவும் முக்கியம், ஏனென்றால், நீண்ட காலங்களுக்கு அவை வாழ்ந்த இடங்களில் அவற்றின் அடிச்சுவட்டின் அறிகுறிகள் காணப்படும். நீங்கள் தளபாடங்கள், கம்பளங்கள், பிள்ளைகளின் பஞ்சடைக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்கள், மற்றும் வெப்பமாக்கும் மற்றும் குளிராக்கும் சாதனங்கள் போன்றவற்றைச் சுத்தம் செய்யவேண்டியிருக்கலாம்.

தூசியிலுள்ள நுண்ணுயிர்கள்


தூசியிலுள்ள நுண்ணுயிர்கள் உதிரும் மனிதத் தோலில் உயிர்வாழும் மிகச் சிறிய பூச்சிகளாகும். தூசுக்கு ஒவ்வாமையுள்ள பிள்ளைகளுக்கு தூசியிலுள்ள நுண்ணுயிர்களின் எச்சங்களும் ஒவ்வாமையைக் கொடுக்கும். தூசியிலுள்ள நுண்ணுயிர்கள் பெரும்பாலும் மெத்தை, தலையணை, படுக்கை, கம்பளம், தரைவிரிப்புகள், மற்றும் தளபாடங்களின் உறைகள் போன்ற வெப்பமான மற்றும் ஈரலிப்பான மனிதத் தோல் அதிகமாக உதிரும் இடங்களில் வசிக்கும். உங்கள் பிள்ளையின் ஒவ்வாமையைக் கட்டுப்படுத்துவதற்கு, நீங்கள் தூசியிலுள்ள நுண்ணுயிர்களை அழித்து அவற்றின் எச்சங்கள் முழுவதையும் அகற்றிச் சுத்திகரித்துவிடவேண்டும்.

உதவிசெய்யக்கூடிய சில நடவடிக்கைகள் பின்வருமாறு:

  • ஒவ்வ்வொரு வாரமும் துணிகள் எல்லாவற்றையும் கொதிநீரால் கழுவவும்.
  • உங்கள் பிள்ளையின் மெத்தை , பொக்ஸ் ஸ்ப்ரிங், மற்றும் தலையணைகள் என்பனவற்றை விசேஷ ஒவ்வாமையை எதிர்க்கும் உறைகளால் அல்லது ஊடுருவ முடியாத உறைகளினால் முழுமையாக மூடவும்.
  • உங்கள் பிள்ளையின் படுக்கையறையிலிருந்து கம்பளங்கள், தரைவிரிப்புகள், மற்றும் பாரமான திரைச்சீலைகள் என்பனவற்றை அகற்றிவிடவும். முடிந்தால், வீட்டின் மற்றப் பாகங்களிலுள்ளவற்றையும் அகற்றிவிடவும்.
  • உங்கள் பிள்ளையின் படுக்கையறையிலிருக்கும் பஞ்சடைக்கப்பட்ட பொம்மைகளை அகற்றிவிடவும் அல்லது அவற்றை அலுமாரியில் வைத்து மூடிவிடவும். படுக்கையறையில் சிதறிக்கிடக்கும் பொருட்களைக் குறைத்தால் அங்கு தூசி சேர்வதும் குறையும்.
  • ஒவ்வொரு வாரமும் கம்பளத்தை வக்கியூம் களீனரால் சுத்தப்படுத்தவும்.
  • வீட்டின் ஈரப்பத நிலையை 50%க்குக் கீழாக வைத்துக்கொள்ளவும். ஈரமான பகுதிகளில் ஈரப்பதமகற்றியை நீங்கள் உபயோகிக்கலாம். உலர்ந்த சுற்றுச் சூழலில், தூசியிலுள்ள நுண்ணுயிர்கள் நன்கு உயிர் வாழ முடியாது.

மகரந்தப் பொடிகள்


மரங்கள், புற்கள், மற்றும் களைகளில் மகரந்தப்பொடிகள் இருக்கின்றன. அவற்றால் காற்றில் பல மைல்களுக்குப் பயணம் செய்யமுடியும். அவை வசந்த காலம் மற்றும் வெப்பகாலங்களில் அதிக பிரச்சினையுள்ளதாயிருக்கும்.

உங்கள் பிள்ளைக்கு மகரந்தப் பொடி ஒவ்வாமை இருந்தால், உங்கள் பிள்ளை அதைத் தவிர்ப்பதற்காக நீங்கள் செய்யவேண்டிய சில காரியங்கள் பின்வருமாறு:

  • மகரந்தப் பொடிகள் அதிகமாக விழும் காலங்களில் முடிந்தளவுக்கு உங்கள் வீட்டு யன்னல்கள் மற்றும் மோட்டார் வண்டியின் யன்னல்கள் என்பனவற்றை மூடிவிடுங்கள். தேவைப்பட்டால் குளிர் சாதனப்பெட்டியை உபயோகிக்கவும் மற்றும் வடிகட்டியை ஒழுங்காக மாற்றவும்
  • மகரந்தப் பொடி விழும் எண்ணிக்கையை அவதானிக்கவும் மற்றும் உங்கள் பிள்ளை அதிகமான மகரந்தப் பொடி விழும் நாட்களில் வீட்டிற்குள் இருக்கவேண்டுமா என்பதையும் தீர்மானிக்கவும். மகரந்தப் பொடி விழுவதைப் பற்றிய அறிக்கையை தொலைக்காட்சி அல்லது இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.
  • மகரந்தப்பொடி அதிகமாக விழும் நாட்களில் உங்கள் பிள்ளை வெளியே சென்றிருந்தால், அவள் வீட்டிற்குத் திரும்பி வந்தவுடன் ஷவரில் குளிப்பாட்டவும் மற்றும் அவளின் உடைகளை மாற்றவும்.
  • உங்கள் பிள்ளையின் ஆடைகளை வெளியே தொங்கவிடுவதற்குப் பதிலாக அவற்றை துணி உலர்த்தியைக் கொண்டு உலர்த்தி விடவும்.

பூஞ்சணங்கள்


பூஞ்சணங்கள் பேஸ்மன்ட் மற்றும் குளியலறை போன்ற ஈரமான பிரதேசங்களில் வருடம் முழுவதும் வளருகின்றன. காற்றின் மூலமாக வீட்டின் எப்பகுதிக்கும் அவற்றால் பயணம் செய்யமுடியும்.

உங்கள் வீட்டை பூஞ்சணங்கள் இல்லாது வைத்துக்கொள்ள சில வழிகள் பின்வருமாறு:

  • சோப் அல்லது மருந்து மற்றும் தண்ணீர் உபயோகித்து உங்கள் வீட்டின் சிறிய பூஞ்சணப் பகுதிகளைச் சுத்தம் செய்யவும். பெரிய பகுதிகளுக்கு பூஞ்சணக் கொல்லி போன்ற பூஞ்சணத்தை அழிக்கக்கூடிய குறிப்பிட்ட சில பொருட்களை உபயோகிக்கவேண்டும்.
  • உங்கள் வீட்டின் பேஸ்மன்ட் போன்ற ஈரமான பகுதிகளுக்கு ஒரு ஈரப்பதமகற்றி யை உபயோகிக்கவும். உங்கள் வீட்டின் ஈரப்பதத்தை 50% க்குக் குறைவாக வைத்துக்கொள்ளவும்.
  • உங்கள் வீட்டை நல்ல காற்றோட்டமுள்ளதாக்கவும்; பூஞ்சணம் காற்றோட்டமுள்ள பிரதேசங்களில் நன்கு உயிர் வாழாது.
  • ஷவர்க் குளியலின்பின் யன்னல்களைத் திறந்துவிடவும் அல்லது ஒரு குளியலறை மின்விசிறியை உபயோகிக்கவும்.
  • கூரையில் தண்ணீர் கசிவு அல்லது தண்ணீர்க்குழாய்க் கசிவு போன்றவற்றை உடனே சரி செய்யவும்.

உணவுகள்


பெரும்பாலும், உணவு ஒவ்வாமை, ஆஸ்துமா அறிகுறிகளை ஏற்படுத்தாது, ஆனால் உணவு ஒவ்வாமையுள்ள பிள்ளைகள் ஆஸ்துமாவை பெறுவதற்கு அதிக சாத்தியமுள்ளது. மேலுமாக, உணவு ஒவ்வாமையுள்ள பிள்ளைகளுக்கு கடுமையான ஆஸ்துமா உண்டாகக் கூடும். ஆகவே உங்கள் பிள்ளைக்கு உணவு ஒவ்வாமை இருந்தால் ஆஸ்துமாவை நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். பால், முட்டை, கச்சான், கொட்டைகள், கோதுமை, சோயா, மட்டி, மற்றும் மீன்கள் போன்றவை மிகவும் பொதுவாக ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளாகும்.

உங்கள் பிள்ளை குறிப்பிட்ட சில உணவுகளுக்கு ஒவ்வாமையுடையவளாக இருக்கிறாள் என்று நீங்கள் சந்தேகப்பட்டால், ஒவ்வாமையியல் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

மருந்துகள்


ASA (அசெடில்சாலிசிலிக் அசிட் அல்லது அஸ்பிரின்) மற்றும் ஐபியூபுரோஃபென் போன்ற குறிப்பிட்ட சில மருந்துகள், ஆஸ்துமா நோயுள்ள சில பிள்ளைகளுக்கு ஆஸ்துமா நோய் அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.

உங்கள் பிள்ளை இந்த மருந்துகளுக்கு மிகுந்த உணர்வைக் (சென்சிடிவ்) காண்பித்தால், உங்கள் மருந்தாளுனரிடம் அதைப் பற்றிப் பேசவும். உங்கள் பிள்ளைக்கு நீங்கள் கொடுக்கும் மருந்தின் மேலுள்ள விபரச் சீட்டில் ஐபியூபுரோஃபென், அஸ்பிரின், ASA, அல்லது அசெடில்சாலிசிலிக் அசிட் போன்ற வார்த்தைகள் இல்லாதிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.

Sharon Dell, BEng, MD, FRCPC

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!