குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட எளிய வழி..!
குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட எளிய வழி..!
குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வறட்சி மற்றும் சுத்தமின்மை தான். பாதத்திற்கு அவ்வப்போது முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கொடுக்காவிடில் குதிகாலில் வெடிப்புகள் ஏற்பட ஆரம்பித்து, அது அழகை கெடுப்பதோடு, கடுமையான வேதனையையும் தரும்.
இந்த குதிகால் வெடிப்பைப் போக்க எத்தனை க்ரீம்கள் வந்தாலும், அவற்றால் முழுமையான தீர்வைப் பெற முடியாது. ஆனால், இயற்கை வழிகளைப் பின்பற்றினால் குதிகால் வெடிப்பைப் போக்குவதோடு, குதிகாலை அழகாகவும் பராமரிக்கலாம்.
ரோஸ்வாட்டர் மற்றும் கிளிசரின் :
கிளிசரின் மற்றும் ரோஸ்வாட்டரை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, அந்த நீரில் 15-20 நிமிடம் பாதங்களை ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல் கொண்டு பாதங்களை தேய்த்து கழுவி, உலர வைத்து, இறுதியில் அந்த கிளிசரின் கலவையை பாதங்களில் தடவி வர வேண்டும்.
இப்படி, அன்றாடம் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், குதிகால் வெடிப்புகள் மறையும்.
ஆயில் மசாஜ் :
குதிகால் வெடிப்பு அதிகப்படியான வறட்சியினால் வருவதாகும். ஆகவே அன்றாடம் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு பாதங்களை மசாஜ் செய்து இரவு முழுவதும் ஊற வைத்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பாதங்கள் மென்மையாக இருக்கும்.
வேப்பிலை :
வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, பாதங்களில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
இந்த கலவையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தில் உள்ள காயங்களை விரைவில் குணப்படுத்தும். எனவே, தவறாமல் அன்றாடம் ஒருமுறையாவது செய்து வர வேண்டும். குதிகால் வெடிப்பு மிகவும் மோசமாக இருந்தால், இதனை தினமும் இரண்டு முறை செய்து வர வேண்டும்.
அரிசி மாவு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் :
அரிசி மாவு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, வெடிப்பு அதிகம் இருப்பவர்கள், இத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் பாதங்களை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் 20 நிமிடம் ஊற வைத்து, பின் இந்த கலவையைக் கொண்டு குதிகால்களை மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
வாழைப்பழ பேக் :
வாழைப்பழத்தை மசித்து, அதில் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, குதிகால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
வினிகர் :
வெள்ளை வினிகரில் அசிடிக் ஆசிட், அதிக அளவில் நிறைந்துள்ளது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும் தன்மை கொண்டது. எனவே 1/4 ப் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து 10 நிமிடம் அந்த கலவையில் பாதங்களை ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல் கொண்டு பாதங்களை தேய்த்து கழுவி, உலர வைத்து, மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.
ஓட்ஸ் மற்றும் ஜோஜோபா ஆயில் :
1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன் சிறிது ஜோஜோபா ஆயில் சேர்த்து பேஸ்ட் செய்து, அந்த கலவையை குதிகால் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவி உலர வைக்க வேண்டும்.
துளசி மற்றும் கற்றாழை :
துளசியில் குதிகால் வெடிப்பைப் போக்கும் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை உள்ளது. ஆகவே துளசியை அரைத்து, பேஸ்ட் செய்து, அதில் சிறிது மஞ்சள் தூள், கற்றாழை ஜெல் மற்றும் சூடம் சேர்த்து நன்கு பேட்ஸ் செய்து, பாதங்களில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் குதிகால் வெடிப்புகள் மறையும்.
தேன் :
1/2 வாளி வெதுவெதுப்பான நீரில், 1 கப் தேன் சேர்த்து கலந்து, அந்நீரில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வைத்து, மெருகேற்ற உதவும் கல் பயன்படுத்தி ஸ்கரப் செய்து வர வேண்டும். இதன் மூலமும் குதிகால் வெடிப்பைத் தடுக்கலாம்.
எலுமிச்சை சாறு மற்றும் பப்பாளி :
எலுமிச்சை சாறு இறந்த செல்களை போக்க பெரிதும் உதவியாக இருக்கும். அத்தகைய எலுமிச்சை சாற்றுடன் பப்பாளியை மசித்து சேர்த்து நன்கு கலந்து, பாதங்களில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் பாதங்கள் மென்மையாக, வெடிப்புகளின்றி இருக்கும்.
கருத்துகள்