முள்ளங்கி
ஆரோக்கியப் பெட்டகம்: முள்ளங்கி
முள்ளங்கியில் உள்ள சத்துகளையும் நல்ல விஷயங்களையும் பற்றி அறிந்தால், அது அத்தனை பேரின் உணவிலும் தினசரி இடம் பெறும் அவசியக் காயாக மாறும். ‘‘வாசனை பிடிக்காமல் முள்ளங்கியை வெறுப்பவரா நீங்கள்? தலை முதல் கால் வரை உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் நன்மை செய்கிற முள்ளங்கியை வாசனைக்காக ஒதுக்குவது எத்தனை பெரிய தவறு தெரியுமா?’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்.
‘‘குறுக்கு வெட்டுக் காய்கறிகளில் முக்கியமானது முள்ளங்கி. வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ அதிகம் கொண்ட காய். இதிலுள்ள ஃபோலேட், நார்ச்சத்து, தாதுச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் ஆகிய அனைத்தும் முதுமைத் தோற்றத்துக்குக் காரணமான விஷயங்களில் இருந்து நம்மைக் காக்கக்கூடியவை. புற்றுநோய்க்கு எதிராகப் போராடக்கூடிய குணம் முள்ளங்கியில் உள்ளது. முள்ளங்கியை பச்சையாகவோ, சமைத்தோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். மாவுச்சத்து இல்லாத காய் இது என்பது குறிப்பிடத் தக்கது. சாலட்டுகளில் சேர்க்கும் போது, ஒருவித காரத் தன்மையுடன், நறுக்கென்ற ருசியையும் கொடுக்கக்கூடியது. நீரிழிவு உள்ளவர்களும் அல்லது எப்போது வேண்டுமானாலும் நீரிழிவு வரலாம் என்கிற நிலையில் இருப்போரும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உச்சத்துக்குப் போகாமலிருக்க மாவுச்சத்து இல்லாத காய்கறிகளை சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். முள்ளங்கிக்கு அதில் முதலிடம். ஆனால், ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை முள்ளங்கியை சாப்பிட்டு மட்டுமே சரிக்கட்ட முடியாது என்பதும் முக்கியமான தகவல். என்ன இருக்கிறது? (100 கிராம் அளவில்) ஆற்றல் - 16 கிலோ கலோரிகள் கார்போஹைட்ரேட் - 3.4 கிராம் புரதம் - 0.68 கிராம் தயாமின் - 0.012 மி.கி. ரிபோஃப்ளோவின் - 0.039 மி.கி. நியாசின் - 0.254 மி.கி. வைட்டமின் பி6 - 0.071 மி.கி. வைட்டமின் சி - 14.8 மி.கி. கால்சியம் - 25 மி.கி. இரும்பு - 0.34 மி.கி. மக்னீசியம்- 10 மி.கி. மாங்கனீசு - 0.069 மி.கி. பொட்டாசியம் - 233 மி.கி. துத்தநாகம் - 0.28 மி.கி. குளிர்ச்சியானது முள்ளங்கி குளிர்ச்சியான தன்மை கொண்டது. அதனுடைய கடுமையான வாசனையும் குளிர்ச்சியான தன்மையும் சீன மருத்துவத்தில் கொண்டாடப்படுபவை. வெயில் அதிகமுள்ள மாதங்களில் ஏற்படுகிற வெம்மையைத் தணிக்கும் மருந்தாகவே அங்கு முள்ளங்கியைப் பயன்படுத்துகிறார்கள். தொண்டைக்கு இதமானது முள்ளங்கியின் காரத்தன்மையும் வாடையும் உடலிலுள்ள அதிகப்படியான சளியை விரட்டி, ஜலதோஷம் பிடிக்காமலிருக்க உதவும். சைனஸ் தொந்தரவிலிருந்து விடுதலை கொடுத்து, கரகரப்பான தொண்டைக்கு இதமும் தரக்கூடியது முள்ளங்கி. செரிமானத்தை சீராக்கும் இயற்கையாக ஜீரண மண்டலத்தை சுத்திகரிக்கக்கூடிய இயல்பு இதற்கு உண்டு. பல வருடங்களாக உடலில் படிந்த உணவு நச்சுகளையும் கழிவுகளையும் வெளியேற்றக் கூடியது. வைரஸ் தொற்றைத் தவிர்க்கும் இதிலுள்ள இயற்கையான சுத்திகரிப்புத் தன்மையும் அதிக அளவிலான வைட்டமின் சி சத்தும் வைரஸ் தொற்று ஏற்படாமல் காக்கக்கூடியவை. நச்சுகளை வெளியேற்றும் சீன மற்றும் ஆயுர்வேத மருத்துவங்களில் முள்ளங்கிக்கு நச்சுகளை முறிக்கிற தன்மை உள்ளதாகவும் புற்றுநோய்க்குக் காரணமான தன்மைகளை வெளியேற்றும் குணம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. புற்றுநோயுடன் போராடும் பிராக்கோலி, முட்டைகோஸ் போன்ற குறுக்கு வெட்டுக் காய்கறிக் குடும்பத்தைச் சேர்ந்ததால் முள்ளங்கியில் உள்ள ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ், தாதுச்சத்துகள், வைட்டமின்கள் போன்றவை புற்றுநோய்க்கு எதிராகப் போராடக் கூடியவையாக இருக்கின்றன. அஜீரணத்துக்கு மருந்தாகும் வயிற்று உப்புசத்தைப் போக்கி, வயிற்றுப் பொருமலை சரியாக்கி, இதமான உணர்வைக் கொடுக்கக் கூடியது. குறைந்த கலோரியும் அதிக ஊட்டமும் கொண்டது ஒரு கப் முள்ளங்கி எடுத்துக் கொண்டாலுமே அதில் 20க்கும் குறைவான கலோரிகளே இருக்கும் என்பதால், எப்போதும், எந்த உணவுடனும் இதைச் சேர்த்து உண்ணலாம். குறைந்த கலோரி கொண்டதானாலும் அதிக ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியது என்பதும் மறுக்க முடியாத உண்மை. உடல் வறட்சியை விரட்டும் முள்ளங்கியில் நீர்ச்சத்தும், வைட்டமின் சி சத்தும், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகச் சத்தும் அபரிமிதமாக உள்ளன. இது திசுக்களுக்கு ஊட்டமளிக்கவும் உடல் வறண்டு போகாமலும் சருமம் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும். முள்ளங்கியின் மகத்துவம் பற்றிப் பேசுகிற மீனாட்சி, அதை வைத்துச் செய்கிற சுவையான 3 உணவுகளின் செய்முறைகளையும் தந்துள்ளார். முள்ளங்கிக் கீரை மசாலா என்னென்ன தேவை? கீரையுடன் இருக்கும் முள்ளங்கி - பெரிதாக 2, உப்புத் தண்ணீரில் வேக வைத்து எடுத்த முள்ளங்கிக் கீரை - 1 கப், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப, பெருங்காயம் - கால் டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், மிளகாய் தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், சர்க்கரை - அரை டீஸ்பூன், ஆம்சூர் தூள் - 1 டீஸ்பூன் அல்லது எலுமிச்சைச்சாறு - அரை டீஸ்பூன், கரம் மசாலா - 1 சிட்டிகை. எப்படிச் செய்வது? முள்ளங்கியை சின்னத் துண்டுகளாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போடவும். முள்ளங்கிக் கீரையையும் நறுக்கி அதில் சேர்க்கவும். உப்பு சேர்த்துப் பிசறி சிறிது நேரம் வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், சீரகம் தாளிக்கவும். தயாராக வைத்துள்ள முள்ளங்கி மற்றும் அதன் கீரைத் துண்டுகளை அதில் சேர்க்கவும். நன்கு கலந்து வேக வைத்துள்ள முள்ளங்கிக் கீரையையும் சேர்த்துக் கிளறவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு வேக விடவும். 4 நிமிடங்கள் வெந்ததும், சர்க்கரை மற்றும் ஆம்சூர் தூள் அல்லது எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். முள்ளங்கி நன்கு வெந்ததும் எடுத்துப் பரிமாறவும். முள்ளங்கி பக்கோடா என்னென்ன தேவை? முள்ளங்கித் துருவல் (உப்பு சேர்த்து, தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்) - 1 கப், கடலைப் பருப்பு - 1 கப், அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன், துருவிய பனீர் - கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2, கரம் மசாலா தூள் - 2 சிட்டிகை, சோம்புத் தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு, உப்பு - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது? கடலைப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் அத்துடன் சேர்த்துப் பிசையவும். எண்ணெயைக் காய வைத்து, சின்னச் சின்னதாகக் கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.தயிர் அல்லது தக்காளி சாஸ் உடன் பரிமாறவும். முள்ளங்கி பரோட்டா என்னென்ன தேவை? கோதுமை மாவு - கால் கப், முள்ளங்கித் துருவல் (உப்பு சேர்த்து, தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்) - சிறிது, பொடியாக நறுக்கிய முள்ளங்கிக் கீரை (நறுக்கியதும், தண்ணீரை வடித்து வைக்கவும்) - சிறிது, மிளகாய் தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, கரம் மசாலா தூள் - 2 சிட்டிகை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப, பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், ஓமம் - 2 சிட்டிகை, எண்ணெய் - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது? கடைசியாகக் கொடுத்துள்ள எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லா பொருட்களையும் கோதுமை மாவுடன் சேர்த்துப் பிசையவும். தேவையானால் மட்டும் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையவும். சப்பாத்திக்குத் தேவையான அளவு உருண்டைகளாக உருட்டி, கனமான சப்பாத்திகளாக இட்டு,தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும். |
கருத்துகள்