வெள்ளை சோளம்
சிறப்புமிக்க சிறுதானியங்கள்: வெள்ளை சோளம்
வெள்ளை சோளத்தை ஆங்கிலத்தில் Great millet (கிரேட் மில்லெட்) என்று அழைப்பார்கள். பெயருக்கேற்றபடியே சிறுதானியங்களில் சிறப்பான இடம் உண்டு இதற்கு. இதன் இன்னொரு பெயர் சொர்கம் (Sorghum). ‘மைலோ’ என்றாலும் வெள்ளை சோளத்தைத்தான் குறிக்கும். இதை தெலுங்கில் - ஜொன்னலு, இந்தியில் - ஜோவர், கன்னடத்தில் - ஜுலா என்றும் அழைப்பார்கள்.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்களுக்குப் பரிச்சயமானவை சிறுதானியங்கள் மட்டுமே. மிகவும் சுலபமாக வளரக்கூடியவை. 1966ம் ஆண்டுதான் ‘பசுமைப் புரட்சி’ என்ற பெயரில் அரிசி, கோதுமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். சிறுதானியங்கள் பயிரிட்ட 44 சதவிகித இடங்களில் இதை பயிரிட்டார்கள். உலக உற்பத்தியில் 42 சதவிகித சிறு தானியங்கள் இந்தியாவில் மட்டுமே பயிரிடப்படுகின்றன. இந்த சிறுதானியங்களை பயிரிடும்போது அரிசி, கோதுமையைப்போல அதிக தண்ணீர் பாய்ச்சத் தேவையில்லை. வாழை, கரும்பு பயிரிடும்போது உபயோகப்படுத்தும் தண்ணீரில் கால் பங்கு இருந்தாலே போதும். அதிக ஆழம் உழத் தேவையில்லை.
அதிக உரமும் போட வேண்டிய அவசியமில்லை. இதற்கு ரசாயன உரம் போடாமல் இயற்கை உரத்தை மட்டுமே போட்டால் போதும். ஊடு பயிராக பயிரிட இயலும். இதற்கு புழு, பூச்சி, வண்டுகள் வராது. பாசனத்துக்காக மற்ற வேலைகள் செய்ய ஆட்களை கூலிக்கு அமர்த்த வேண்டியதில்லை. மணற்பாங்கான இடத்திலும் வளரும். மற்ற தானியங்களுக்கு அரசாங்கம் உரத்துக்காக மானியம் தருகிறார்கள். அதற்குப் பதில் சிறுதானியங்களை அதிகம் சாப்பிடும்போது, விவசாயிகள் அதிகம் பயிரிடுவார்கள். அரசாங்கம் மானியம் தருவதையும் வெகுவாக குறைக்க இயலும். பஞ்சாப், ராஜஸ்தான்
போன்ற வறண்ட இடங்களில் வெள்ளை சோளத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
கோதுமையைவிட சோளத்தை அதிகம் பயிரிடுகிறார்கள். அரிசி, கோதுமையைவிட மூன்றிலிருந்து ஐந்து மடங்கு புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் அதிகம் உள்ளவை சிறுதானியங்கள். நம் நாட்டில் சத்துகள் உள்ள உணவை உண்ணாமல் இருக்கும் சிறு குழந்தைகள் மிகவும் அதிகம். இவர்களுக்காக உலக சுகாதார நிறுவனம் பலவித உதவிகள் செய்கிறது. இவர்களுக்கு அளிக்கப்படும் சத்துமாவுக் கஞ்சியில் முக்கியமான இடம் வெள்ளை சோளத்துக்குத் தரப்படுகிறது. இதைக் கொண்டு உணவு தயாரிக்கும்போது, உடன் வைட்டமின் ‘சி’, ‘ஏ’ இருக்கும்படி தேர்ந்தெடுத்தாலே போதும். மற்ற சிறுதானியங்களைவிட சோளத்தில் தோல் அதிக கடினமாக இருக்காது.
பல விதமான உணவுகளை சுலபமாக சமைக்க இயலும். இது முழு சோளமாகவும், உடைத்த ரவை போலவும், மாவாகவும் கிடைக்கிறது. இதில் இட்லி, தோசை, பணியாரம், சத்து மாவு, ரொட்டி, பானம் போன்றவற்றை தயாரிக்கலாம். பிரியாணி, புலவு போன்றவை நன்றாக வராது. இனிப்பு வகைகளும் செய்ய இயலும். பாலெடுத்து காய்ச்சி பாதாம் சேர்த்தும் குழந்தைகளுக்குத் தரலாம். முளை கட்டியும் பயன்படுத்தலாம். பஞ்சாபிகள் அரைத்து வைக்கும் தானிய மாவின் அளவைத் தருகிறேன். இதை அரைத்து வைத்துக்கொண்டால் தினமும் ‘ரொட்டி’ செய்ய இயலும். இப்போதும் பஞ்சாப் கிராமங்களில் உள்ளவர்கள் இதை உபயோகித்து மூன்று வேளையும் ரொட்டி செய்து சாப்பிடும் பழக்கம் உள்ளது.
வெள்ளை சோளத்தில் இருக்கும் சத்துகள்
(100 கிராம் அளவில்)
புரதம் - 10.04 கிராம், கொழுப்பு - 1.9 கிராம், தாதுக்கள் - 1.6 கிராம், நார்ச்சத்து - 1.6 கிராம், மாவுச்சத்து - 72.6 கிராம், சக்தி - 349 கிலோ கலோரி, கால்சியம் - 25 மி.கிராம், பாஸ்பரஸ் - 22 மி.கிராம், இரும்புச்சத்து - 4.1 மி.கிராம், வைட்ட மின் - ‘ஏ‘ கரோட்டின் - 47 மைக்ரோ கிராம், தயாமின் - 0.37 மி.கிராம், ரிபோஃப்ளோவின் - 0.13 மி.கிராம், நயாசின் - 3.3 மி.கிராம், ஃபோலிக் அமிலம் - 20.0 மி.கிராம். இதில் இருக்கும் புரதம் முழுமையானது. 12 முக்கிய அமினோ அமிலங்களும் வெள்ளை சோளத்தில் உள்ளன. இதை தினமும் உண்ணும்போது நல்ல செல்கள் உற்பத்தியாகும். மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும். உடலில் உள்ள எலும்புகள் நல்ல பலத்துடன் இருக்கும். எடை போடாது. ரத்த அணுக்கள் உற்பத்தி சரிவர இருக்கும். சீக்கிரம் சோர்வடையாமல் இருக்கும் அளவுக்கு நல்ல மாவுச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. கர்ப்பிணிகளுக்கு மிக முக்கியத் தேவையான ஃபோலிக் அமிலம், புரதம், இரும்புச்சத்து எல்லாமும் ஒன்றிலேயே உள்ளது.
வெள்ளை சோள இட்லி
என்னென்ன தேவை?
வெள்ளை சோளம் - 1 ஆழாக்கு, இட்லி அரிசி - 1 ஆழாக்கு, வெள்ளை உளுந்து - ஆழாக்கு, உப்பு - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மூன்றையும் தனித்தனியாக ஊற வைக்கவும். ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நுரைக்க அரைக்கவும். ஊறிய சோளத்தை முதலில் கிரைண்டரில் போட்டு லேசாக அரை பட்டதும் அரிசி சேர்த்து பதமாக எடுக்கவும். இரண்டு மாவையும் ஒன்றாக உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். மறுநாள் காலை இட்லி வார்க்கலாம். மிக ருசியாக இருக்கும். மெத்தென்றும் வரும்.
பஞ்சாபி தானிய ரொட்டி
மாவு திரிக்க... என்னென்ன தேவை?
வெள்ளை சோளம் - 2 கிலோ, கோதுமை - 1 கிலோ, கடலைப்பருப்பு - கிலோ, கம்பு - கிலோ, சோயாபீன்ஸ் - கிலோ. எல்லாவற்றையும் ஒன்றாக மிஷினில் கொடுத்து மாவாகத் திரிக்கவும். சலிக்க வேண்டாம்.
ரொட்டி செய்ய...
தேவையான அளவு மாவை ஒரு அகலக் கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிதே உப்பு சேர்த்து இளம் சூடான தண்ணீர் ஊற்றிப் பிசையவும். சிறிது தளரப் பிசையவும். கைகளால் பெரியதாக உருட்டி நேரடியாக சூடான தோசைக்கல்லில் கனமான ரொட்டியாகத் தட்டவும். மத்தியில் மூன்று இடத்தில் துளையிட்டு சிறிது நெய் விட்டு சுடவும். மூடியால் மூடி வைத்து ஒரே புறம் சுடவும். திருப்பிப் போட வேண்டாம். மிதமான தணலில் நன்கு வேகும் வரை வைத்து சுட்டுப் பரிமாறவும்.
வெள்ளை சோள அடை
என்னென்ன தேவை?
வெள்ளை சோளம் - 2 ஆழாக்கு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுந்து மூன்றும் சம அளவில் கலந்து - ஆழாக்கு, இஞ்சி - அங்குலத் துண்டு, பச்சை மிளகாய் - 3, உப்பு -தேவைக்கு, துருவிய தேங்காய் - கப்.
எப்படிச் செய்வது?
பருப்போடு சோளத்தையும் சேர்த்து ஒன்றாகவே 2 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை முழுவதும் வடித்து விடவும். மிக்ஸியில் முதலில் இஞ்சி, மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து ஊறியதைப் போட்டு கரகரப்பாக அரைக்கவும். கடைசி யில் தேங்காய் சேர்த்து லேசாக ஒரு தடவை திருப்பிக் கலந்தெடுக்கவும். இதை கனமான அடையாக சிறிதே எண்ணெயை விட்டு சுட்டு எடுக்கவும். சில மணி நேரம் முன் அரைத்தால் போதும். புளிக்க வைக்க வேண்டியதில்லை. இதிலேயே மற்ற சத்துகளைப் பெற பொடியாக நறுக்கிய கீரை, துருவிய கேரட், தேங்காய், சீஸ், பனீர் என குழந்தைகள் விரும்பும்படி கலந்தும் அடை செய்யலாம்.
(சத்துகள் பெறுவோம்!)
கருத்துகள்