பிரக்கோலி
ஆரோக்கியப் பெட்டகம்: பிரக்கோலி
பிரக்கோலி என்கிற காயைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வெளிநாட்டு வரவான இந்தக் காய் நம்மூருக்கு அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆனாலும், அதன் பயன்பாடு இன்னும் பரவலாகவில்லை. நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே சமைத்துப் பரிமாறப்படுகிற காஸ்ட்லியான காயாக இருப்பதே காரணம்.
சமீப காலங்களில் பிரக்கோலியின் பயன்பாடு சாமானிய மக்களுக்கும் ஓரளவுக்குத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. பிரக்கோலி என்பது ஒரு வகை காய் என்ற அளவில் மட்டுமே நிற்கிறதே தவிர, அதை எப்படி சமைப்பது என்கிற தகவல்கள் பலருக்கும் புரியாத புதிர்தான்!
‘‘பிரக்கோலி இத்தாலி நாட்டை சேர்ந்த காய். இது முதலில் அந்த நாட்டில்தான் பயன்படுத்தப்பட்டது. இந்தக் காயைப் பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரியாது. அறிமுகம் இல்லாத இந்தக் காயில் நிறைய ஆரோக்கியங்கள் உள்ளன. இது ஊட்டச்சத்துகள் நிறைந்த காய். வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், கரோடின் மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்தது. இது நீரிழிவு, புற்றுநோய், இதயநோய், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றை வர விடாமல் தடுப்பதில் முக்கிய பங்களிக்கிறது.
பிரக்கோலியை வேகவைத்தோ அல்லது பச்சையாகவோ உண்ணலாம். இதனை நீங்கள் குழம்பாகவோ, பொரியலாகவோ செய்து உண்ணலாம். சூப், சாலட் ஆகியவற்றில் சேர்த்து உண்ணலாம். பிரக்கோலி, ருசியான சுவையும் மொறுமொறுப்புத் தன்மையும் கொண்டது. பிரக்கோலியின் ஆரோக்கிய நலன்கள் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்க பிரக்கோலியில் Sulfophane என்ற ஒரு கலவை உள்ளது. இது, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும். கால்சியம் மற்றும் வைட்டமின் கே அளவு பிரக்கோலியில் அதிகம் உள்ளது.
இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இது ஆஸ்டியோபொரோசிஸ் (Osteoporosis) என்னும் நோய் வராமல் தடுக்க உதவும். பிரக்கோலி வைட்டமின் டி குறைப்பாட்டை தீர்க்க உதவும். இதில் அதிக அளவில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே, வைட்டமின் டியின் வளர்சிதையை சமநிலையில் வைக்க உதவுகிறது. வைட்டமின் டி மாத்திரை எடுத்துக்கொள்பவர்களுக்கு பிரக்கோலி சரியான மாற்று.
புற்று நோயை தடுக்க
பிரக்கோலி புற்று நோயைத் தடுக்கும் பண்பு நிறைந்தது. இதற்குக் காரணம் இதில் உள்ள Glucoraphanin என்னும் பொருள். இந்தக் கூறு H.pylori என்னும் கிருமியை உடலில் இருந்து வெளியேற்றும் திறன் கொண்டது. இந்தக் கிருமி வயிற்றில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது. பிரக்கோலியில் Indole 3 carbinol) என்னும் என்சைம் உள்ளது. அது ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் Anti inflammatory திறன் கொண்டது. இது புற்றுநோய்க்கு மட்டும் உதவாமல், கல்லீரல் செயல் திறனை அதிகரிக்கிறது. இது போன்ற பண்புகள் உள்ளதால் இது ஒரு தனித்தன்மை வாய்ந்த காயாகும்.
கொழுப்பை (Cholesterol) குறைக்க
பிரக்கோலி நார்ச்சத்து நிறைந்தது. எனவே அது ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் திறன் கொண்டது. பிரக்கோலியை வேக வைத்து உண்டால் அது உடலுக்கு மிகவும் நல்லது. பிரக்கோலியை ஆவியில் சமைத்தால் அதில் உள்ள நார்ச்சத்து செரிமான பித்த அமிலங்கள் இணைகின்றன. இந்த இணைப்பினால் பித்த அமிலங்கள் வெளியேற்றப்பட்டு, கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
ஆன்ட்டிஆக்ஸிடன்ட் திறன்
பிரக்கோலியில் மற்ற காய்களைக் (Cabbage, Cauliflower) காட்டிலும் வைட்டமின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் (Flavonoids) நிறைந்து உள்ளன. இதில் Carotene, Lutein, Zeaxanthin ஆகிய சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இதில் உள்ள தாவர ஊட்டச்சத்துகள் (Phytonutrients) நோய் எதிர்ப்பு அமைப்புக்கு நல்லது.
இதய ஆரோக்கியத்துக்கு
Sulforaphane என்னும் பொருள் பிரக்கோலி யில் உள்ளது. இது உடலில் எந்த சேதமும் ஏற்படாமல் பாதுகாக்கும். இது ரத்த நாளங்களை பாதுகாத்து இதய நோய் வராமல் தடுக்கிறது. பிரக்கொலி ஒரு Goitrogenic உணவு.
தைராய்டுக்கு மிக மோசமான எதிரி.
தைராய்டு உருவாக வழிவகுக்கும் எந்த உணவும் goitrogenic உணவு என்று அழைக்கப்படுகிறது. Goitrogenic உணவுகள் தைராய்டு வீக்க நோய்க்கு காரணியாக இருக்கும் Goitrogen என்னும் கலவையைக் கொண்டிருக்கும். Goitrogens சில உணவுகளில் இயற்கையாக இருக்கும் அல்லது மருந்துகள் உட்செலுத்தப்பட்டிருக்கும். இது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் தலையிடும். அது தைராய்டு சுரப்பி அல்லது தைராய்டு ஹார்மோன் உற்பத்தியின் போது அயோடின் சேர்க்கும். அது செயல்பட இது ஆன்டிபாடிகளை தூண்டுகிறது. இந்த நிலையில் தைராய்டு சுரப்பி தைராய்டு ஹார்மோனை, போதுமான அளவு உற்பத்தி செய்ய முடியாது. தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தைராய்டு ஹார்மோனை போதுமான அளவுக்கு உற்பத்தி செய்ய முடியாது. இந்த நிலையில் தைராய்டு சுரப்பி அதில் உள்ள அணுக்களை பெருக்கச் செய்யும். இதனால் வீக்கம் ஏற்படும். இதுவே தைராய்டு உருவாக்கத்துக்கு வழி வகுக்கும்.
பிரக்கோலியின் மகத்துவங்கள், மருத்துவக் குணங்கள் பற்றித் தெளிவாக விளக்குகிறார் டயட்டீஷியன் ஷைனி எஸ்தர். கூடவே பிரக்கோலியை வைத்து சுவையான 3 ரெசிபிகளையும் செய்து காட்டுகிறார்.
எப்படித் தேர்வு செய்வது?
இதழ்கள் நன்றாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். பிரக்கோலியின் நிறம் முழுவதும் ஒரே மாதிரி சமமாக இருக்க வேண்டும். அது பழுப்படைந்து இருக்கக் கூடாது. பிரக்கோலி இதழின் நடுவில் எந்த ஒரு மஞ்சள் அல்லது பழுத்த பூ போன்ற தோற்றம் இருக்கக்கூடாது. அதன் தண்டு எந்தப் புள்ளிகளும் இல்லாமல் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு வேளை அதில் இலைகள் இருந்தால் அவை பளிச் என இருக்க வேண்டும்.
எப்படிப் பாதுகாப்பது?
ஒரு பிளாஸ்டிக் கவரில் நன்றாக சுற்றி வைக்க வேண்டும். அதன் உள்ளே காற்று செல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இதை குளிர்சாதனப் பெட்டியில் 5 - 6 நாட்கள் வைக்கலாம். இதனை உபயோகப்படுத்து வதற்கு முன்புதான் கழுவ வேண்டும். அதற்கு முன்பு கழுவி குளிர் சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது.
பிரக்கோலி பரோட்டா
என்னென்ன தேவை?
கோதுமை மாவு - 1 கப், பிரக்கோலி - 1 கொத்து, வெங்காயம் - 1/2 (துண்டு துண்டாக வெட்டப்பட்டது), பூண்டு - 1 (துண்டு துண்டாக வெட்டப்பட்டது), பச்சை மிளகாய் - 2, கரம் மசாலா - ஒரு சிட்டிகை, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, ஓமம் - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
1. பிரக்கோலியின் பூக்களை நன்றாக கழுவி வெட்டிக்கொள்ள வேண்டும்.
2. தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 10 பிரக்கோலி பூக்களை சேர்க்கவும். இத்துடன் உப்பும் சேர்க்க வேண்டும். .
3. இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, பிரக்கோலி பூக்களை அதில் இருந்து எடுத்து விட்டு அதில் கரம் மசாலா, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
4. இந்த விழுதை கோதுமை மாவு, வெங்காயம், பூண்டு, ஓமம் ஆகியவற்றுடன் சேர்த்துக்கொள்ளவும்.
5. தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போன்று பிசைந்து கொள்ளவும். .
6. பிசைந்து வைத்த மாவை சிறிது நேரம் எதுவும் செய்யாமல் விடவும்.
7. பின்னர் இதை சப்பாத்தி போல உருட்டிக் கொள்ளவும்.
8. ஒரு தவாவில் சப்பாத்தி போல சுட்டு எடுக்கவும்.
9. ஊறுகாய், தயிர் அல்லது எதாவது குருமாவுடன் பரிமாறலாம்.
பிரக்கோலி பனீர் சப்ஜி
என்னென்ன தேவை?
பிரக்கோலி - 500 கிராம், பனீர் (பாலாடைக்கட்டி) - 150 கிராம், வெங்காயம் - 1, சீரகம்- 1 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன், கரம் மசாலா -1 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு மற்றும் கருப்பு மிளகு - தேவைக்கேற்ப, எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
1. பிரக்கோலியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு ஆழமான பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் பிரக்கோலி சேர்க்க வேண்டும். அதில் சிறிது உப்பு சேர்த்து அதன் நிறம் சிறிது மாறும் வரை அதில் வைக்கவும்.
2. வெங்காயம் மற்றும் பனீரை சிறிதாக நறுக்கி வைத்துக்
கொள்ளவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் சீரகம் தாளிக்கவும்.
சீரகம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். அதில்
வெங்காயம் சேர்த்து அதன் நிறம் மாறும் வரை வதக்கவும்.
4. வேகவைத்த பிரக்கோலி துண்டுகள், கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
5. இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து சமைக்கவும்.
6. பின்னர் அதில் பனீர் துண்டுகள் சேர்த்து 57 நிமிடங்கள் சமைக்க வேண்டும்.
7. எலுமிச்சைச்சாறு சேர்த்து கொஞ்சம்
தண்ணீர் தெளிக்க வேண்டும்.
8. 2 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர் மிளகு தூவி அடுப்பை அணைக்கவும்.
9. சூடாகப் பரிமாறவும்.
பிரக்கோலி கோஃப்தா
என்னென்ன தேவை?
கோஃப்தாவுக்கு
பிரக்கோலி -1/2 கப், வேகவைத்த உருளைக்கிழங்கு -2, இஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன், நறுக்கப்பட்ட பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
மசாலா செய்வதற்கு
வெங்காயம் -1, தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, முழு உலர்ந்த காஷ்மீர் சிவப்பு மிளகாய் - 2, கொத்தமல்லி (தனியா ) விதைகள் - 2 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், கசகசா - 2 டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிது.
குழம்பு செய்வதற்கு
மசித்த தக்காளி - 5, க்ரீம் -100 கிராம், நெய் - 1 டீஸ்பூன், மிளகாய் தூள் - தேவைக்கேற்ப, உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
பிரக்கோலியை ஆவியில் வேகவைத்து நன்றாக மசித்துக்கொள்ளவும். அதில் உருளைக்கிழங்கு, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது , பச்சை மிளகாய் சேர்க்கவும். உருளைக்கிழங்கை மசிக்கும் போது இவை எல்லாவற்றையும் நன்கு கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கலவையை சிறு பகுதிகளாக பிரித்து உருண்டை போன்ற வடிவில் செய்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த உருண்டை களை சிவக்கும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அவை மொறு மொறுப்பாக இருக்க வேண்டும். சூடாகப் பரிமாறவும்.
குழம்பு செய்முறை
ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கிக் கொள்ளவும். அரைத்து வைத்திருக்கும் மசாலாக்களை 5 நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். தக்காளியை மசித்து இத்துடன் சேர்த்து நெய், மிளகாய் தூள், உப்பு சேர்த்துக் கொள்ளவும். நெய் தனியாக பிரியும் வரை வதக்கவும். நன்கு கலந்து கொதிக்கும் வரை விடவும். பரிமாறுவதற்கு முன்பு செய்து வைத்துள்ள பிரக்கோலி உருண்டைகளை குழம்பில் சேர்த்து க்ரீமை மேலே விட்டுப் பரிமாறவும்.
கருத்துகள்