சீரான உடல் நலத்துக்கு தூதுவளை
சீரான உடல் நலத்துக்கு தூதுவளை
சிறிய, உடைந்த முள் போன்ற இலைகளையும், மித ஊதா நிற பூக்களையும், உருண்டையான பச்சைநிறக் காய்களையும், சிவப்பு நிறப் பழங்களையும், வளைந்த முட்களைப் போன்ற தண்டையும் உடைய தூதுவளை, கொடி இனமாகும். இதை நம் வீட்டு தோட்டத்தில் பந்தல் போட்டு வளர்ப்பது சிறந்த முறையாகும். ஐந்து ஆண்டுகள் வரை வளரும் இக்கொடியின் தண்டுகளில் முட்கள் இடைவிடாமல் நிறைந்திருக்கும். சரியான முறையில் தூதுவளை கொடியை வளர்த்தால், அவை அதிக நாட்கள் வரை வளர வாய்ப்பு உள்ளது.
தூதுவளையின் வேர் முதல் பழம் வரை எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. இதன் இலையும் பூவும் கோழை சளியை அகற்றவும், நம் உடலைப் பலப்படுத்தவும், வீரிய சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. இதன் காய் மற்றும் பழங்கள்நமக்கு பசியைத் தூண்டுவதுடன், மலச்சிக்கலைப் போக்கவும் உதவுகிறது. தமிழகம் முழுவதும் பரவியுள்ள இந்த தூதுவளை கொடி சிங்கவல்லி, ரத்து நயத்தான், தூதுவேளை, தூதுளம், தூதுளை என்று அழைக்கப்படுகிறது.
மருத்துவ குணங்கள்- தூதுவளை இலைகளை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி, ஒரு தேக்கரண்டி பொடியை காலை வேளையில் மட்டும் ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து குடித்தால் நாக்கு வறட்சி, கபநீர், மூட்டுவலி மற்றும் காசநோய் குணமாகும். தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, குழம்பாக கடைந்தோ சாப்பிட்டு வந்தால், நெஞ்சில் சேரக்கூடிய கபக்கட்டு நீங்குவதுடன், நம் உடல் பலம் பெறும்.
தூதுவளை இலையை சாறு பிழிந்து, அதே அளவு நெய்யில் காய்ச்சி, ஒரு தேக்கரண்டி அளவு 2 வேளை தொடர்ந்து குடித்து வந்தால் எலும்புருக்கி காசம், மார்சளி உடனடியாக நீங்கும். தூதுவளை காயை நிழலில் உலர்த்தி காயவைத்து தயிர், உப்பு சேர்த்து பதப்படுத்தி, எண்ணெயில் வறுத்து உணவுடன் உண்டுவர மனநல பாதிப்பு, இதய பலவீனம், மலச்சிக்கல் போன்றவை குணமாகும். தூதுவளை சமூலத்தை 50 கிராம் அளவு எடுத்து, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, 150 மி.லி. அளவுக்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி, தொடர்ந்து 2 வேளை குடித்து வந்தால் இரைப்பு, சுவாச சளி, இருமல் குணமாகும்.
தூதுவளை பழத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்து பொடியாக்கி புகைமூட்டம் போட்டு நுகர்ந்து வந்தால் மூச்சிரைப்பு இருமல், மூச்சு திணறல் விலகுவதுடன், மார்பில் சேர்ந்த சளி இளகி வெளியேறும். தூதுவளை பூக்களை 10 எண்ணிக்கை எடுத்துக் கொண்டு, ஒரு டம்ளர் பாலில் காய்ச்சி வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர்த்து, 48 நாட்கள் தொடர்ந்து 2 வேளையும் பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படுவதுடன் உடல் பலம் பெறுவதுடன், நமது முகமும் வசீகரமாகும்.
கருத்துகள்