டெங்கு, ஜலதோஷம், மூக்கடைப்புக்கு தீர்வு!
வெயில்ல அலைஞ்சு திரிஞ்சுட்டு வீட்டுக்கு நுழைஞ்சவுடனே ஐஸ்வாட்டரை ‘மடக் மடக்’குனு குடிக்கிறவங்க நிறையபேர் இருக்கிறாங்க. இப்பிடி குடிக்கிறதால சிலருக்கு ஒண்ணும் செய்யாது. ஒருசிலருக்கு கிண்ணுனு தலையில பிடிக்கும், கொஞ்சநேரத்துல தலைவலி, தொண்டை கரகரப்பு, தும்மல் வந்து ஜலதோஷம் ஆரம்பிக்கும். ஜலதோஷம் இப்பிடி ஐஸ்வாட்டரை குடிக்கிறதுனாலதான் வரும்னு சொல்ல முடியாது. எந்த வழியிலயும் வரலாம். தயிர், மோர் சாப்பிடுறதுனாலயும், ஜூஸ் குடிக்கிறதுனாலயும், மழையில நனையிறதுனாலயும், பூசணிக்காய் சாப்பிடுறதுனாலயும்கூட சிலபேருக்கு ஜலதோஷம் வரலாம்.
எது எப்படியோ? ஜலதோஷம் வர்றதுக்கான அறிகுறி தெரிஞ்சவுடனே பொறுக்குற சூட்டுல உள்ள வெந்நீரை (சுடுதண்ணி) குடிச்சாலே போதும். ஜலதோஷம் பிடிக்காது. அதையும்மீறி வந்துட்டா மணத்தக்காளி கீரை சூப் குடிங்க. லேசா தொண்டை கரகரப்பு இருந்தா வெதுவெதுப்பான தண்ணியில கல் உப்பை போட்டு கலந்து தொண்டை கொப்புளிங்க. காலையில கண்முழிச்சதும் செய்யுங்க, ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடியும் செய்யுங்க போதும். மத்தபடி மழைக்காலங்கள்ல மூக்கடைப்பு, ஜலதோஷம்னு வந்து பாடாய்ப்படுத்தும். மூக்கடைப்பு விலகணுன்னா மஞ்சளை (குச்சி மஞ்சள்/குழம்பு மஞ்சள்) நல்லெண்ணையில நனைச்சி தீயில சுடுங்க. அப்போ வரக்கூடிய புகையை சுவாசிச்சா போதும். இதேமாதிரி மிளகை தீயில சுட்டு அதோட புகையை சுவாசிக்கலாம்.
நொச்சி இலையை தண்ணியில போட்டு கொதிக்க வச்சு அதோட ஆவியை சுவாசிக்கலாம். வேப்பிலையும், மஞ்சள்தூளும் போட்டு கொதிக்க வச்சு அதோட ஆவியை மூக்கால சுவாசியுங்க. நிச்சயம் மூக்கடைப்பு விலகும். நச்சு...நச்சுனு சிலபேர் தும்மல் போடுவாங்க. தினமும் காலையில கண் விழிச்சி தண்ணியில முகத்தை கழுவினா போதும். விடாம தும்மல் போடுவாங்க. இந்தமாதிரி தும்மல் வந்தா தேங்காய் நாரை (தேங்காய் ஓட்டின்மீதுள்ள சவுரி) தீயில் எரித்து அதன் புகையை உள்ளிழுத்தால் தும்மல் அடங்கிவிடும். இதை எப்போதாவது செய்யலாம். அடிக்கடி செய்யக்கூடாது.
பூண்டுப்பால் ராத்திரி சாப்பிடலாம், அதேபோல பூண்டுக்குழம்பும் சளி பிரச்சனைகளுக்கு ரொம்ப நல்லது. சின்ன வெங்காயத்தை மதிய சாப்பாட்டோட சேர்த்துக்கிட்டா சளி பிரச்சினைக்கு கைகொடுக்கும். மிளகுத்தூளை சுடுசோத்துல நெய் சேர்த்து சாப்பிடலாம். காலை நேரத்துல இஞ்சிச்சாறு, இஞ்சி ஜூஸ் குடிக்கலாம். இஞ்சிச்சாறு எடுத்ததும் அதை வடிகட்டி வச்சிரணும். அஞ்சு நிமிஷம் கழிச்சி பார்த்தா அடியில வெள்ளையா ஒண்ணு படியும். நச்சுப்பொருள். அது இல்லாம மேல தெளிஞ்ச நீரை மட்டும் குடிக்கணும். இஞ்சி ஜூஸ் எப்பிடி எடுக்கணுன்னா இதே இஞ்சி சாறோட எலுமிச்சை சாறு, சீனி (சர்க்கரை), தேன் சேர்த்து குடிக்கணும்.
கருத்துகள்