உடல் பருமனா!!!! புஸ்ஸென்று ஊதித் தள்ளி விடலாம்।!!

இந்தியத் துணைக் கண்டத்தில் ‘வாளொடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி’ என்று அடிக்கடி இலக்கிய வாதிகள் கூறக்கேட்டிருப்போம். வாளோடு பிறக்க முடியுமா? ஏனிந்த பில்டப் கொடுத்தார்கள் என்று சிந்திப்பது இருக்கட்டும். மாற்றாரின் தலைகளை அறுப்பதுடன், நம் மண்ணில் விளைந்த தழைகளை அறுத்து உண்டு நோயின்றி வாழவும் வாளொடு பிறந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் வீரம் மட்டுமின்றி உடலோம்பும் விவேகமும் நிறைந்தவர்கள் என்பதை தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. இலக்கியத்தில் இருக்கின்ற நல்ல விஷயங்களை, எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை எல்லாம் எடுத்துக் கூற அவ்வப்போது ஆசைப்படுவார்கள் நம் தமிழ் எழுத்தாளர்கள். ஆனால் ஏன் என்றே தெரியவில்லை தமிழ் ஏடுகளில் இருக்கின்ற, தமிழர்கள் பயன்படுத்திய எளிமையான மருத்துவ முறைகளை எடுத்துக் கூற அவர்கள் முயற்சிப்பதில்லை. அவர்கள் கூறினாலும் நம் மக்கள் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று நினைப்பார்களோ என்னவோ, அவற்றைப் படிப்பதும் இல்லை. பயன் படுத்துவதும் இல்லை.





“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள்
வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே”

என்று பாடிப் பரவசப் படுவான் பாரதி. நம் முன்னோர்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தனர் என்று பாரதி கூறுவது சற்று மிகையாகத் தெரிந்தாலும், வாழ்ந்த காலத்தில் நோய் நொடியின்றி வாழ்ந்து முடிந்தனர் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை. நோய் என்பது உடல்நோய், மன நோய் இரண்டையும் குறிக்கும்; நொடிதல் என்பது நோயினால் நிலை குலைந்து போதல். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். செல்வம் குறைந்து இருந்தாலும், வறுமை நிறைந்து இருந்தாலும் நாம் நிலை குலைந்து போக மாட்டோம். ஏனென்றால் செல்வம் என்பது சிந்தையின் நிறைவுதான். ஆனால் நோய்தான் நம்மை நொய்ந்து போக வைக்கும்.
நம் முன்னோர்கள் உணவுக்குள் பொதிந்திருந்த நலவாழ்வின் சூட்சுமத்தை அறிந்து வைத்திருந்தார்கள். வருமுன் காக்கும் நோய் தடுப்பு மருந்துகளும், நோய்க்கான மருந்துகளும் அவர்கள் உண்ட உணவிலேயே இருந்தது. அவர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு அவர்கள் உணவை மருந்தாக உண்டது முக்கிய காரணம்.
இன்று?!!!... உணவுக்குப் போகும் முன்பு மெக்கானிக் டூல் கிட்டை திறப்பதைப் போல ஒரு பெரிய பையைக் கையில் எடுப்பார்கள். அந்தப் பையில் இருந்து பல கலர்களில் மாத்திரைகளை உள்ளே தள்ளிய பின்தான் உணவை உள்ளே தள்ளுவார்கள். எத்தனை மாத்திரைகளை சாப்பிட்டாலும் உணவு விஷயத்தில் மட்டும் எந்தக் கட்டுப்பாடுகளையும் இவர்களால் கடைபிடிக்க முடியாது. கேட்டால் சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் நான் கொஞ்சம் வீக் என்பார்கள் இந்த போஜனப் பிரியர்கள். ஞானிகள் என்று கூறிக்கொள்கிற ஆன்மீக வாதிகளும் இதற்கு விதி விலக்கல்ல. இவர்கள் ஞானக்கிடங்கு என்று தாங்கள் வளர்க்கின்ற தொப்பைக்கு ஒரு சப்பைக்கட்டும் சொல்லிக் கொள்வார்கள்.
நகைச்சுவை நடிகர் என். எஸ் கிருஷ்ணன் கனவு கண்டது போல, வீட்டில் இருந்து (டெலி·போன்) பட்டனைத் தட்டினால் பிட்ஸாவும் சிக்கன் சிக்சிடி·பைவும் வீடு தேடி வரும் வேக உலகமாக மாறிவிட்டது இன்று. இதுதான் சரியான சமயம் என்று காத்திருக்கும் நோய்களும் தன் வேகத்தைக் கூட்டிக்கொண்டு கதவைத் தட்டாமலேயே உடல் ஆகிய வீட்டின் உள்ளே நுழைத்து விடுகிறது. உணவே மருந்து என்ற நிலை மாறி உணவாலேயே மருந்து தேடும் நிலை அதிகரித்து விட்டது.
ஒரு காலத்தில் மக்கள் ஊருக்குள் உலவி வந்த நிலை மாறி இன்று உலகம் முழுவதிலும் சர்வசாதாரணமாக உலவத் தொடங்கி விட்டனர். தொலைத்தொடர்பு புரட்சியும் அயல் நாட்டுக் கலாச்சாரத்தை நம் நாட்டில் குடி புகுத்திவிட்டது. அதில் முதலிடம் பிடிப்பது உணவுக்கலாச்சாரம். அண்டை மாநில உணவுகள் மட்டுமன்றி அயல் நாட்டு உணவுப் பழக்கமும் நம்மைத் தொற்றிக்கொண்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஹோட்டலுக்குச் சென்றால் பூரி கிழங்கு சாப்பிட்டால் பெரிய விஷயமாக இருந்தது. இப்போது அமெரிகன் மக்ரொணி, இத்தாலியன் பாஸ்தா, சைனிஸ் ஸ்க்விட், மெக்சிகன் நாச்சோஸ், ஆஸ்திரேலியன் காங்க்ரு மீட் என்று அகில உலக உணவையும் உண்பது சின்ன விஷயமாகி விட்டது. ஹோட்டலுக்குப் போய் இட்லி, தோசை என்று கேட்டால் வந்துட்டான்யா நாட்டுப்புறத்தான் என்பது போல ஏற இறங்க பார்ப்பதில் நாம் கூனி குறுகி போக வேண்டியுள்ளது. இந்த உணவு வகைகளை அறியாதவன் இந்த உலகில் வாழவே தகுதி இல்லாதவன் என்ற எண்ணமும் இன்றைய இளைய தலைமுறைகளிடம் நிலவி வருகிறது.
இதனால் வந்ததுதான் ஒபிசிடி(Obesity) என்ற உடல் பருமன் நோய். நான்கு அடி எடுத்து வைக்கும் போதே வாயாலும் மூக்காலும் விடுகின்ற பெருமூச்சால் ஒரு காற்றாலையையே உருவாக்கி விடுவார்கள். தொப்பையைக் குறைக்க பெல்ட் போடுவார்கள். ஜிம்முக்குப் போவார்கள். அங்கு மெஷின்கள் இவர்களின் உடலைக் கடைசல் பிடிக்கும். அந்த மெஷின் பெல்ட்டுக்குள் இவர்கள் சிக்கித் தவிப்பத்தைப் பார்க்கும் போது பாற்கடலை கடைந்த மந்திர மலை இப்படித்தான் இருந்திருக்குமோ என்று தான் எண்ணத்தோன்றும். உடல் பருமன் கரைகிறதோ இல்லையோ பர்ஸின் பருமன் கரைந்து விடும். இந்த பருத்த உடல் காரர்களுக்கு தமிழ் ஏட்டில் கூறப்பட்டுள்ள எளிய மருத்துவம் இதோ.
“வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏர கத்துச் செட்டியா ரே”
ஒன்றும் புரியவில்லையா? ஒரு சில சொற்களுக்கு மட்டும் பொருள் கூறிவிட்டால் நோய் எது, மருந்து எது என்று உங்களுக்கு எளிதாகப் புரிந்து விடும். இப்பாடலில் உள்ள எல்லாச் சொற்களும் இரு பொருள் தருவன.
v காயம் என்றால் உடல் என்பது எல்லார்க்கும் தெரிந்ததே. வெங்காயம் என்பது நீர் நிறைந்த (குண்டான) உடலையும், மருத்துவ குணம் நிறைந்த அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயத்தையும் குறிக்கும்.
v பெருங்காயம் என்பது பெரிய (பருத்த) உடல், சமையலுக்கு மணம் சேர்க்கப் பயன் படும் கூட்டுப்பெருங்காயம் என்ற இரு பொருளைக் குறிக்கும்.
v இச்சரக்கு என்பது நோய் சுமந்த உடலையும், (அந்தச் சரக்கு இல்லங்க) இப்பாடலில் கூறப்பட்டுள்ள சுக்கு, வெந்தயம், சீரகம் என்ற பல சரக்குப் பொருளையும் குறிக்கும்.
v சீரகம் என்பது நோயற்ற சீரான உடலையும், அஜீரணம் இன்றி உணவைச் செரிக்க வைக்கும் பலசரக்குப் பொருளையும் குறிக்கும்.
v வெங்காயம், பெருங்காயம், இச்சரக்கு என்ற சொற்கள் எல்லாமே உடல் பருமனைக் குறித்த சொற்கள்.
v ஏரகத்துச் செட்டியார் என்பது திருவேரகம் என்ற தலத்தில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானைக் குறிக்கும். முருகனைச் செட்டியார் என்று கூறியது ஏன்? செட்டியார் என்பது சாதிப் பெயரா? முருகன் எண்ணெய் செக்கு வைத்திருந்தாரா? ஒரு செட் (இரண்டு) மனைவிகள் உடையதால் செட்டியாரா? என்று பல கேள்விகள் எழுவது தெரிகிறது. அக்காலத்தில் வணிகத்தில் பெயர் போனவர்கள் செட்டியார்கள். முருகன் யார்? சிவன் மகன். சிவன் யார்? வளையல், விறகு இவற்றையெல்லாம் விற்ற வியாபாரி. சிவன் வியாபாரி என்றால் அவன் மகன்? அப்போது முருகன் செட்டியார் தானே.
இப்போது மருந்துக்கு வருவோம். வெங்காயம் பார்க்கப் பளபளப்பாக இருக்கும் வெங்காயத்தின் உள்ளிருப்பது வெறும் நீர்தான். வெற்றுத் தோல் தான். உரிக்க உரிக்க உள்ளீடு ஒன்றும் இருக்காது. மண்டைச் சுரப்பு மாமனிதர் பெரியார் வெங்காயம் என்று அடிக்கடி கூறியது ஏன் என்று புரிந்து இருக்கும். அது போலத்தான் வெற்று நீர் நிறைந்த குண்டு உடல்.
வெங்காயமும் மருத்துவ குணம் நிறைந்தது தான். இப்பாடல் சுட்டுவது உருவத்தைதான். வெங்காயத்தில் இன்சுலின் ஊள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருந்து வெங்காயம். உடலில் மூன்றில் இரண்டு பங்கு நீர் இருக்க வேண்டும். ஆனால் மூன்று பங்கும் நீர் என்றால் அது ஊளைச்சதை.
சுக்கு இளைத்துச் சுருங்கி காணப்பட்டாலும் மருத்துவ குணம் நிறைந்தது. சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை என்பர். உடலைச் சுக்கு போல ஒல்லியாக வைத்துக் கொண்டால் எந்த மருந்தும் தேவையில்லையாம். சுக்கை உணவில் பயன் படுத்தி வந்தால் நோய்ப்பையாய் உடலைச் சுமக்கத் தேவை இருக்காது. “காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு" என்ற பழம்பாடல் சுக்கு அன்றாடம் பயன்படுத்த வேண்டிய மருந்து என்பதைச் சுட்டும்.
வெந்தயம் தமிழ் மருந்துகளில் தனிச்சிறப்பு வாய்ந்தது. உடலை ஒல்லியாகவும், குளிர்ச்சியாகவும் வைக்கும் அருமையான, அன்றாட உணவில் பயன்படுத்தும் மருந்து மற்றும் உணவுப்பொருள். வயிற்றுக்குள் குளு குளு ஏசியை பொருத்தும் தன்மை இதற்கு உண்டு.
சீரகம் உண்ட உணவைச் செரிக்க வைக்கும் மருந்துப் பொருள்களில் முதலிடம் பிடிப்பது. ஹோட்டல்களில் பில்லுடன் பெருஞ்சீரகத்தை வைப்பார்கள். சிம்பாலிக்காக உண்ட உணவுடன் பில்லைப் பார்த்த அதிர்ச்சியும் ஜீரணம் ஆவதற்காக. அகம் என்றால் உள்ளுறுப்பு. குடல், போன்ற அக உறுப்புகளைச் சீராக வைப்பதால் இதற்கு சீரகம் என்று பெயர்.
பெருங்காயம் உணவுக்கு நல்ல மணத்தைத் தருவதுடன் சீரகத்தைப் போன்றே செரிமானத்துக்குப் பயன்படும் முக்கிய உணவுப் பொருள்। வாயுத்தொல்லைக்கு மிகச்சிறந்த நிவாரணி। சீரகம் இருந்தால் பெருங்காயம் தேவையில்லை। சீரான உடல் இருந்தால் போதும் பெருங்காயம் தேவையில்லை। (பெருங்காயம் - பருத்த உடல்)। ஒரு மருந்தால் நல்ல உடல் நிலையைப் பெற்றுவிட்டால் ஏன் அடுத்த மருந்தை நாடப்போகிறோம்? அதனால் தான் சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம் என்கிறார்।
இவர் மட்டுமல்ல இன்னொரு சித்தர் கூறுவதைப் பாருங்கள்.
” வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி”
இங்கு, குதம்பைச் சித்தர் எதனையோ வேண்டாம் என்று கூற வந்தாலும், அதற்கு அவர் கூறும் காரணம், சுக்கும், மிளகும் இருக்க வேற எதுவும் தேவையில்லையாம் நன்காயத்திற்கு (நல்ல உடம்புக்கு).

இந்த நான்கு பலசரக்குப் பொருள்களுக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி பின்னர் வர இருக்கும் வாரங்களில் பார்க்கலாம்.
‘மீதூண் விரும்பேல்’ என்பார் ஒளவையார். எதிலும் அதிகம் என்பது ஆபத்திற்கு அருகில் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் வேதத்தின் தலைவனான ஐயன் திருவள்ளுவரும்,
“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு”
என்பார். .
மாரல்: உடல் வெங்காயம் போன்று குண்டாக இல்லாமல் சுக்கு போல ஒல்லியாக, ஒடிசலாக, சிக்கென இருந்தால் ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்। அழகுக்கு அழகு. இந்த தந்திரம் அடங்கிய சுக்கு, மிளகு,வெந்தயம், சீரகம், பெருங்காயம் ஆகியவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமனைப் புஸ்ஸென்று ஊதித் தள்ளி விடலாம் .
பானுமதி
அதிரா.
நன்றி குமுதம் ஹெல்த்।

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!