இஸ்லாம் பற்றிய எனது புரிதல்.

இஸ்லாம் பற்றிய எனது புரிதல்.
இஸ்லாமை மதம் என்று சொல்வதை விட மார்க்கம் (வழி) என்று சொல்வதே பொருத்தமானதாகும். அப்படியே இஸ்லாமியர்களும் சொல்லிக் கொள்கிறார்கள். இஸ்லாம் மதத்தில் அதிகமாக அவர்களுடைய வாழ்க்கை முறை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிப் போதிக்கப்படுகின்றது. அவர்களுடைய கலாச்சாரமானது முழுக்க முழுக்க வேதத்தை (திருக் குர்-ஆன்) அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒருவனுடைய சமூக வாழ்க்கை முதல் குடும்ப வாழ்க்கை வரை எப்படி வாழ வேண்டும் என்று இஸ்லாமியம் சொல்லிக் கொடுக்கிறது. 
இவர்களது வேதம் அல்லாவிடம் இருந்து நேரடியாக அருளப்பட்டதாக ஒவ்வொரு இஸ்லாமியர்களும் மறு கேள்விக்கு இடமின்றி நம்புகிறார்கள். இது ஏனைய மதத்தவர்களுக்கு கேள்விக்குறியாக இருக்கலாம். ஆனால் இது தான் இஸ்லாமியர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. அதனால் தான் இவர்கள் வேதத்தை முழுமையாகக் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள். 
இஸ்லாமியத்தில் ஒரே கடவுட்கொள்கை தான் அடிப்படை. அல்லாவைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்பதும் நபிகள் நாயகம்  மட்டுமே கடைசி இறை தூதர் என்பதும் இவர்களது மாற்ற முடியாத கருத்து. 
இஸ்லாமியத்தின்படி திருமணம் செய்யும் போது ஆண் தான் பெண்ணுக்கு சீர் வழங்க வேண்டும். அதை மஹர் என்று சொல்கிறார்கள். இலங்கையில் புத்தளத்தில் நண்பர் ஒருவரின் திருமணத்துக்குப் போயிருந்தேன். திருமணத்துக்கு மறுநாள் மாப்பிள்ளை வீட்டில் விருந்து (வலிமா). அது எப்படியென்றால், மாப்பிள்ளை தான் சொந்தமாக சம்பாதித்து சேமித்து வைத்திருந்த பணத்தில் விருந்து கொடுக்க வேண்டுமாம்... அட.. இது நல்லாருக்கே என மனதுக்குள் தோன்றியது. பெண்ணிடம் இருந்து வாங்கித் தான் கல்யாணச் செலவு செய்யவும், குடும்பம் நடத்தவும், தன் தங்கைகளுக்கு திருமணத்துக்கு சேமிக்கவும் எண்ணும் சில ஆண்களுக்கும் மாமியார்களுக்கும் இது எதிர்மறையாக இருக்கிறதே என ஆச்சரியமாக இருந்தது.
எமது வைபவங்களும் விருந்துபசாரங்களும் உறவை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டவை. இஸ்லாமியர்களது விருந்து வைபவங்களின் போது மிகப்பெரிய தட்டுக்களில் நான்கு அல்லது ஐந்து பேர்கள் உட்கார்ந்து உண்ணும் வழக்கத்தைப் பார்க்கும் போது (சஹன்), இன்னும் ஒருபடி கூடுதலாக உறவுபலப்படுவதற்கான ஒரு செயல்முறையாகவே எண்ணத் தோன்றுகிறது. 
திருமணம் என்ற விடயத்தில் இஸ்லாமியர்கள் எத்தனை திருமணமும் செய்யலாம் என்று ஏனைய சமூகத்தார் மூக்கில் விரல் வைத்துக் கொண்டிருக்க, அதற்குள் எத்தனை சூட்சுமம் இருக்கிறது என்று இஸ்லாமியர்கள் மட்டுமே அறிவார்கள். அதாவது, மனைவியர்களிடம் பக்கச்சார்பில்லாமல் நடந்து கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி மனைவியின்/ மனைவியர்களின் சம்மதமின்றி இன்னொரு திருமணம் செய்து விட முடியாது. 
 
திருமணம் செய்யாமல் ஒரு பெண்ணுடன் உறவுகொண்டால் அது விபச்சாரம் என்ற மிகப்பெரும் பாவமாகக் கொள்ளப்படுகிறது. அதற்குக் கடுமையான தண்டனை மற்றவர்கள் முன்னிலையில் வழங்க குர்-ஆன் அனுமதிக்கிறது.
“விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.” 24:2 குர்-ஆன்
எனவே அப்படியான துன்பத்தில் எல்லாம் மாட்டிக் கொள்ளாமல் கல்யாணம் பண்ணிக் கொள் என்கிறது இஸ்லாம். ஆனால் சும்மா அல்ல, அந்தப் பெண்ணையும் வைத்துக் குடும்பம் நடத்தும் அளவுக்கு போதிய வருமானம் இருக்க வேண்டும். எல்லா மனைவியரிடமும் சரி சமமாக நடந்து கொள்ள வேண்டும். (அது கொஞ்சம் கஸ்டமான விடயம் தான் ஆனால் முடிந்த வரைக்கும் அப்படி இருக்க வேண்டும் என்றும் அல்லாவுக்கு பயந்து நடவுங்கள் என்றும் கு-ஆனே சொல்கிறது)
முக்கியமாக அநாதை பெண்களுக்கு அநீதம் இழைக்காமல் இருக்கவும், அது உன்னால் முடியாதென்றால், மற்றப் பெண்களில் இரண்டோ, மூன்றோ நான்கோ… கல்யாணம் பண்ணிக்கொள், ஆனால் அவர்களுக்கிடையே சமமாக (நீதியாக) நடந்து கொள்ள முடியாவிட்டால் ஒரு பெண்ணையே கல்யாணம் செய்து கொள், அல்லது உனக்கு சொந்தமாக்கிக் கொண்ட அடிமைப் பெண்ணோடு நிறுத்திக் கொள் என்று (அந்தக் காலத்தில் தமது வீட்டில் வேலைக்காரியை எஜமானன் சொந்தமாக்கிக் கொள்ளும் வழக்கம் இருந்தது) ஆண்களுக்கு நன்றாகவே குர்-ஆன் கற்பிக்கிறது.
நம் நாட்டு பொருளாதார நிலையில் ஒரு பெண்ணை வைத்து குடும்பம் நடத்துவதற்கே வருமானம் போதவில்லை, அதைவிட மாமியார், நாத்தனார் பிரச்சனைகளுக்கே ஈடுகட்ட முடியவில்லை, இந்த லட்சணத்தில் சக்காளத்திகள் சண்டையில் நீதமாக நடந்து கொள்வதா… போதுமடா சாமி என்று தலையைப் பிச்சுக் கொள்ளும் நிலைமை வந்து விடாதா? அது மட்டுமன்றி இவை எல்லாவற்றையும் தாண்டி பல திருமணங்களச் செய்பவன் இந்த சமூகத்துக்குத் தன்னை அதிக பாலியல் நாட்டமுள்ளவனாக, ஒரு பலவீனனாக, அல்லது தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவனாக வெளிப்படுத்துகிறான் என்பதை எந்த ஒரு ஆணும் புரிந்து கொண்டே இதை செய்ய முடியும். அதனால் தான் இஸ்லாம் இவ்வளவு இலகுவாக பலதார முறையை அனுமதிக்கிறது. இப்போ சொல்லுங்க, இஸ்லாமில் எத்தனை கல்யாணமும் பண்ணிக் கொள்ளலாம் என்பது அத்தனை சுலபமான விடயமா? 
 இஸ்லாம் மார்க்கம் தன் துணையை தேடிக் கொள்வதில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு என்று சுதந்திரத்தை வழங்குகிறது. ஆனால் அதே சமயம்; திருமணம் செய்வதாக இருந்தால் சாட்சியை வைத்து திருமணம் செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. அத்துடன் விவாகரத்து செய்த பெண்/ஆண் எப்படித் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய முழுமையான விளக்கம் கொடுக்கப்படுகிறது. இது மட்டுமன்றி இன்னும் பல விடயங்களும் மருத்துவரீதியாகவும் விஞ்ஞானரீதியாகவும் பொருந்தி வருகின்றமை வெளிப்படை. 
இஸ்லாமிய முறைப்படி ஆண் பெண் இருவருக்கும் ஒரே மாதிரியான சட்டமாக இருந்தாலும் பெண்ணை விட ஆண் ஒருபடி உயர்ந்தவன் என்று பெண்ணியவாதிகளுக்கு கடுப்பேத்தும்படியான ஒரு கருத்து இருக்கத்தான் செய்கிறது... 
 
தீவிரவாதம் இஸ்லாமில் போதிக்கப்படுகிறதா?
குர்-ஆன் மற்றும் கிறீஸ்தவர்களின் பழைய ஏற்பாட்டிலும் அதிகமாக போர் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. அடிப்படையில் போர்க்குணம் கொண்டவர்களாகவே இந்த வேதங்கள் காட்டுகின்றது. இதனால் இதைக் கடுமையாகக் கடைப்பிடிப்பவர்களும் போர்க்குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றோ இருக்க வேண்டுமென்றோ அவசியம் இல்லை. ஆனால் இதை சரியாக அறிந்து கொள்ளாமை தான் ஒரு சில முஸ்லீம் இயக்கங்களின் தீவிரவாத செயற்பாட்டுக்கு காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதாவது, எகிப்தில் பாரவோன் (ஃப்ரௌன்) மன்னனுடைய ஆட்சியில் எகிப்தியரிடத்தில் அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ராயேல் மக்கள் அங்கிருந்து மோசேஸின் (மூஸா நபியின்) வழிகாட்டலில் தப்புவிக்கப் படுகிறார்கள். அவர்கள் 40 வருடங்களாக பாலைவனத்தில் பொடிநடையாகப் பயணித்து தமக்கென்றொரு இடத்துக்கு வந்து சேர்கிறார்கள். 40 வருடங்கள் என்றால் கற்பனை செய்து பாருங்கள்…. எத்தனை சிறு சிறு நாடுகளைக் கடந்து சென்றிருப்பார்கள்? அங்கெல்லாம் ஒரு பெரிய சனத்தொகை தமது நாட்டை நோக்கி வருவதைக் கண்டதும் அந்தப் நாட்டு மன்னர்கள் சும்மாவா இருந்திருப்பார்கள்? அவர்களைக் கண்ட இடங்களில் எல்லாம் வழிமறித்து தாக்கப்பட்டார்கள். இதனால் இவர்கள் எப்பொழுதும் யுத்தத்துக்குத் தயாரானவர்களாக இருக்க வேண்டியவர்களாக இருந்தார்கள். பயணத்தின் போது தங்கள் பெண்கள் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டியவர்களாக இருந்தார்கள். எனவே இவர்கள் தற்காப்பாளார்களாக எந்த நேரத்திலும் விழிப்பு நிலையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுமட்டுமன்றி இவர்களுக்காக யாருமில்லாத ஒரு வெற்றுப் பிரதேசம் காத்திருக்கவில்லை. இவர்கள் தாம் பாதுகாப்பாக வாழுவதற்காக தமக்கென்றொரு தேசத்தைக் கைப்பற்றவேண்டியிருந்தது. விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இறைவன் பாலும் தேனும் ஓடும் ஒரு தேசத்தை வாக்களித்திருந்தார் என்றும் அதைத் தேடியே அவர்கள் பயணித்தார்கள் என்றும் சொல்கிறது. பாலும் தேனும் அந்த நாட்டில் ஓடியதோ இல்லையோ, அதற்கு முன்னராக நிறைய இரத்த ஆறுகள் ஓடியது என்பது தான் உண்மை. அந்தளவுக்கு அவர்கள் போர்களைச் சந்தித்தார்கள். எகிப்திலிருந்து புறப்பட்டவர்களின் அடுத்த தலை முறையே அந்த தேசத்துக்கு சென்று சேர்ந்ததாக சொல்லப் படுகிறது. அந்தக் காலத்தில் இருந்து அவர்கள் போர் புரிகிறவர்களாக போர்களை எதிர்நோக்கியவர்களாக வாழ்ந்தார்கள். எனவே போர் தவிர்க்க முடியாத ஒன்றாக அவர்களது வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருந்தது என்பது தான் உண்மை. ஆனால் தற்கால சூழ்நிலையிலும் இவர்கள் போர்க்குணம் கொண்டவர்களாக வாழ்வதென்பது அவர்களே பரிசீலிக்க வேண்டிய ஒன்று. 
 
நபிகள் பிற உயிர்களிடத்தில் கருணையும் அன்பும் காட்டச் சொல்வதில் எந்த இடத்திலும் குறை வைக்கவில்லை. இஸ்லாமும் ஏனைய மதங்களைப் போலவே அன்பை போதிக்கிறது. ஆனால் ஏதோ ஒரு நாட்டு அரசில் கொண்ட பகையைத் தீர்க்க பொது மக்களையும் குழந்தைகளையும் கொல்லத் துணிவது மார்க்கத்தின் பெயரால் செய்யப்படுவதாகக் கூறப்பட்டாலும் உண்மையில் அது குறிப்பிட்ட சில குழுக்களின் குரூர குணமாகவே நான் பார்க்கிறேன். ஏனென்றால் இத்தகையை இஸ்லாமியர்கள் எல்லோருமே ஏற்றுக் கொள்ளவில்லை என்பது வெளிப்படை. 
இஸ்லாமியர்கள் வேதத்தைக் கொண்டு ஒழுகுகிறவர்களே. ஆனால் அவர்களில் குழப்பவாதிகளும் நம்பிக்கையற்றவர்களும் இருக்கிறார்கள் என்பதைக் திரு குர்- ஆனே வெளிப்படுத்துகிறது . (அல்பகறா 2  வசனம் 6-14)
சிலபல சந்தர்பங்களில் பேஸ்புக் போன்ற சமூகத் தளங்களில் இஸ்லாமிய சகோதரர்களும் கிறீஸ்தவ சகோதரர்களும் மதம் தொடர்பான வாக்குவாதங்களில் ஈடுபடுவதைக் கண்டிருக்கிறேன். வாக்குவாதம் முற்றும் போது இவர்கள் கொள்கைகளை/ நம்பிக்கைகளை விமர்சித்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென யேசுவைப் பற்றிக் கீழ்த்தரமான வார்த்தைகளில் பேச ஆரம்பித்தனர். அப்பொழுது அந்த குறிப்பிட்ட சகோதரர்கள் பற்றி, தமது குர்-ஆனையே முழுதாகப் படிக்காதவர்களா இவர்கள் என்ற பரிதாபம் தான் ஏற்பட்டது. ஏனென்றால் எத்தனை கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் யேசுவைத் தமது நபிகளில் ஒருவராக (ஈஸா நபி) இஸ்லாம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க, தமது நபியைப் பற்றிக் கீழ்த்தரமான வார்த்தைகளில் விமர்சிக்க இவர்களால் முடிகிறது என்றால் எத்தனை அறியாமை…
மொத்தத்தில் குர்-ஆன் என்ற வேதத்தின் பெறுமதியை ஏனைய மதத்தவர்களுக்கு உணர்த்த வேண்டியது இஸ்லாமியர்களின் நடத்தையும் அவர்களது வாழ்க்கை முறையுமே என்பதை இஸ்லாமியர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். எனவே, ஒரு உண்மையான இஸ்லாமியனின் வாழ்க்கையைக் கொண்டே அந்த வேதத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் அந்த வேதத்தின் மதிப்பை உயர்த்தும்படி உண்மையான இஸ்லாமியர்களாக எத்தனை பேர் வாழ்கிறார்கள் என்பது தான் கேள்விக் குறி!!!.
இங்கு கடவுளை எதிர்த்துக் கேள்வி கேட்க, அல்லது ஆராய மனிதனுக்கு தடை உள்ளது. ''அவன் செய்பவை பற்றி அவனை எவரும் கேட்க முடியாது'' (அல்குர்ஆன், 21:23)
 
இறைவனுடனான உறவு
இறைவனுக்கும் மனித குலத்துக்கும் உள்ள தொடர்பு: இறைவன், அடியார்கள் என்பதே இஸ்லாத்தின் ஏகத்துக் கொள்கையின் அடிப்படையாகும். மனித சக்தியால் எதுவும் முடியாது என்ற நிலை வரும்போது இறைவன் அதை செய்யக் கூடியவராக இருக்கிறார் என்பதை இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள்.
இன்னும் இஸ்லாம் பற்றி விரிவாக பார்க்க எத்தனையோ விடயங்கள் இருந்தாலும் கட்டுரையை சுருக்கும் படிக்கு சில விடயங்களை மட்டுமே குறிப்பிடக் கூடியதாக உள்ளது. 
எனினும் , ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல இந்தக் கட்டுரை மதங்கள் பற்றிய ஒரு புரிதலையும் நல்லிணக்கத்தையும் மற்றவர்கள் மத்தியில் ஏற்படுத்தும், நோக்கத்திலேயே எழுதப்படுகிறது. எனவே எந்த மதத்துக்கும் எதிரான விமர்சனங்களையோ, ஏனைய மதங்களோடு ஒப்பிட்டு உயர்த்தியோ தாழ்த்தியோ கருத்திடாமல், கட்டுரையின் நோக்கத்தோடு பயணிக்கும்படி அனைத்து மத சகோதரர்களையும் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் இன்னொரு மதம் பற்றிய புரிதல்களோடு அடுத்த தொடரில் சந்திப்போம்.

சிறப்பு எழுத்தாளர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!