ஆரோக்கியப் பெட்டகம்: தக்காளி
‘‘சுவையை மட்டுமின்றி, ஆரோக்கியத்துக்கான நிறைய நல்ல விஷயங்களையும் உள்ளடக்கியது தக்காளி’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி. இதோ அவர் தருகிற தக்காளித் தகவல்கள்...
‘‘மிகக் குறைந்த கலோரி கொண்ட காய்களில் ஒன்று தக்காளி. அதே நேரம் அதை ஊட்டச் சத்துகளின் பவர் ஹவுஸ் என்றே சொல்லலாம். ஆரோக்கியத்துக்கு அவசியமான அத்தனை வைட்டமின்களையும் தாதுச்சத்துகளையும் தன்னகத்தே கொண்ட அருமையான காய் இது. லிஹ்நீஷீஜீமீஸீமீ என்கிற மிகவும் சக்தி வாய்ந்த இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடன்ட் தக்காளியில் அபரிமிதமாக இருக்கிறது. சமைத்த பிறகும் பதப்படுத்தப்பட்ட பிறகும் கூட தன் இயல்புகளை இழக்காத குணம் இதற்கு உண்டு. லிஹ்நீஷீஜீமீஸீமீ என்பது புற்றுநோயைத் தடுக்கவும், முதுமையைத் தள்ளிப் போடவும், டீஜெனரேட்டிவ் நோய்களுக்கு எதிராகச் செயல்படவும் கூடியது.
• ஆன்ட்டி ஆக்சிடன்ட் தன்மைக்கு அடிப்படையான வைட்டமின் சி சத்து தக்காளியில் மிக அதிகமாக உள்ளது. தக்காளியில் மற்ற கேரட்டினாயிட்ஸ் சத்துகளும் அதிகம். உதாரணத்துக்கு வைட்டமின் ஏக்கு காரணமான பீட்டா கரோட்டினை ஏராளமாகக் கொண்டது. அதிக அளவில் நார்ச்சத்தும் கொண்ட தக்காளியானது, அதிலுள்ள வைட்டமின் ஏ மற்றும் சி சத்துகளுடன் சேரும் போது, Atherosclerosis, நீரிழிவு, பெருங்குடல் கேன்சர் மற்றும் ஆஸ்துமாவுக்கு எதிராகப் போராடும்.
• தக்காளியில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் பி6, ஃபோலேட் மற்றும் நியாசின் சத்துகள் Atherosclerosis என்ற தமனித் தடிப்பு நோயை விரட்ட உதவுகின்றன. தக்காளியில் உள்ள வைட்டமின் கே ஆனது எலும்புகளின் உறுதிக்கும், குரோமியமும் பயோட்டினும் சர்க்கரை மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்தி, நரம்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தி, நீரிழிவைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றன. தக்காளியில் உள்ள மற்றுமொரு மிக முக்கிய சத்து ரிபோஃப்ளேவின். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, ஆற்றலைப் பெருக்குவதுடன், மைக்ரேன் எனப்படுகிற ஒற்றைத் தலைவலியை விரட்டுகிறது. தக்காளியில் Phenylpropanoids, Phytosterols and Flavonoids ஆகிய ஃபைட்டோ கெமிக்கல்களும் நமக்கு நிறைய நன்மைகளை செய்பவை.
• தொடர்ந்து தக்காளியை சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு Colorectal, கேஸ்ட்ரிக், நுரையீரல், பிராஸ்டேட் மற்றும் கணையப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் குறைவதாக சொல்லப்படுகிறது. புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் தக்காளியின் குணத்துக்கு அதிலுள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட் அளவு, குறிப்பாக Lycopene, பீட்டாகரோட்டின், வைட்டமின் சி மற்றும் ஃபெனால் ஆகியவையே காரணம். தினமும் தக்காளி சாப்பிடுகிறவர்களுக்கு மரபணுக் கோளாறு தடுக்கப்பட்டு, அதன் காரணமாக உண்டாகிற புராஸ்டேட் புற்றுநோய் அபாயமும் குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
• இதயத்துக்கும் இதமானது தக்காளி. ஃப்ரெஷ்ஷான தக்காளி மற்றும் தக்காளி உணவுகள் எல்.டி.எல். எனப்படுகிற கெட்ட கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைட் உள்பட உடலின் மொத்த கொழுப்பையுமே குறைக்கக் கூடியது. தக்காளிச் சாறுக்கு ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகள் அனாவசியமாக ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கொள்வதைத் தடுக்கும் சக்தி உண்டாம். அதன் மூலம் Atherosclerosis போன்ற இதய நோய்களில் இருந்து தப்பிக்கலாம். தக்காளியில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் இரண்டும் உடலில் உள்ள Homocysteineä ஆபத்தில்லாத மூலக்கூறுகளாக மாற்றும் ஆற்றல் கொண்டவை. Homocysteine அளவு அதிகரிக்கிற போது மாரடைப்பு மற்றும் பக்க வாதம் பாதிப்பதற்கான அபாய வாய்ப்புகள் அதிகம். தக்காளிக்கும் எலும்புகளின் உறுதிக்குமான தொடர்பு வியப்புக்குரிய ஒரு தகவல். அதற்குக் காரணம் தக்காளியில் உள்ள அதீத ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ்!
• இன்னும் வீக்கம், பருமன், மெட்டபாலிக் சின்ட்ரோம், டைப் 2 வகை நீரிழிவு, ஆஸ்டியோபொரோசிஸ், பல் நோய்கள், ருமட்டாயிட் ஆர்த்ரைட்டிஸ், நியூரலாஜிக்கல் டீஜெனரேட்டிவ் டிஸ்ஆர்டர், இன்ஃபளமேட்டரி பவல் டிஸ்ஆர்டர் போன்றவற்றுக்கும் தக்காளியின் நற்குணங்கள் மருந்தாகின்றன. தக்காளி சேர்த்த உணவை அடிக்கடி உண்பதன் மூலம் அல்சீமர் டிசீஸ் எனப்படுகிற நரம்பு தொடர்பான மறதி நோய் கூட தவிர்க்கப்படுகிறதாம். பருமனில் இருந்து விடுபட நினைப்பவர்களும் தக்காளியை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
• இத்தனை நல்ல குணங்கள் இருக்கும் போதும் சில பாதகங் களையும் தன்னகத்தே கொண்டி ருக்கிறது தக்காளி. ஆக்சலேட்டை கொண்ட மிகச் சில உணவுகளில் தக்காளியும் ஒன்று. உணவிலுள்ள ஆக்சலேட்டானது மிகச் சிறியதும், கரையாததுமான, கூரிய நுனி களைக் கொண்ட படிகங்களை உருவாக்கும். அவை திசுக்களைத் தொந்தரவு செய்யும். சிறுநீரகக் கல் பிரச்னை உள்ளவர்கள் ஆக்சலேட் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மேலும் ஆக்சலேட்டா னது உடலின் கால்சியம் கிரகிப்புத் தன்மையையும் பாதிக்கும். கால்சியம் தேவை உள்ளவர்கள், ஆக்சலேட் உள்ள உணவுகளை உட்கொள்கிற விஷயத்தில் எச்சரிக் கையாக இருக்க வேண்டியது அவசியம்.
• அதிகளவு Lycopene அல்லது தக்காளி சேர்த்துக் கொள்கிறவர் களுக்கு Lycopenaemia பாதிப்பு ஏற்படலாம். மற்ற கரோட்டினாயிடு களை போலவே Lycopene-ம் அளவுக்கு மிஞ்சி எடுத்துக் கொள்ளப்படுகிற பட்சத்தில் சருமத்தில் மஞ்சள் நிறத் திட்டுகளை உருவாக்கும். இது வெறும் புற அழகு சம்பந்தப்பட்ட விஷயம்தான். வேறு பெரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்து வதாக நிரூபிக்கப்படவில்லை. அதே நேரத்தில் அதிக லிஹ்நீஷீஜீமீஸீமீ, சருமத்துக்கான இயற்கையான சன் ஸ்கிரீனாக செயல்பட்டு, சூரியனின் புற ஊதாக் கதிர்களின் பாதிப்பிலி ருந்து சருமத்தைக் காப்பாற்றக் கூடியது. லைகோபீன் சகிப்புத் தன்மை இல்லாதவர்களுக்கு வயிறு உப்புசம், வலி மற்றும் வயிற்றுப்போக்கு இருக்கலாம்.
• ஒரு சிலர், தக்காளியை பச்சையாக சாப்பிட்டால் அலர்ஜி வருவதாகவும் அதுவே சமைத்து சாப்பிடுகிற போது அப்படியில்லாத தாகவும் சொல்வதுண்டு. பச்சை தக்காளியை சாப்பிடுவதால் ஏற்படுகிற அலர்ஜியானது மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை மற்றும் முகத்தில் வீக்கம், மூக்கில் இருந்து நீர்க்கசிவு, படை நோய் மற்றும் சரும அரிப்பு எனப் பலதையும் கொடுக்கலாம்...”
தால் டமாட்டர்
என்னென்ன தேவை?
மைசூர் பருப்பு - 100 கிராம், வெங்காயம் - 50 கிராம், தக்காளி - 100 கிராம், பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவைக்கேற்ப, இஞ்சி, பூண்டு விழுது - 2 கிராம், சீரகம் - 10 கிராம், மிளகாய் தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், தனியா தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி - கால் கட்டு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
பருப்பைக் கழுவி, சிறிது நேரம் ஊற வைக்கவும். மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து, மசித்து வைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறி வைக்கவும். எண்ணெயை சூடாக்கி சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளி சேர்க்கவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, குறைந்த தணலில் வைத்து வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். மசித்த பருப்பைச் சேர்க்கவும். கடைசியாக பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி சொன்ன ஆரோக்கிய தக்காளி ரெசிபிகளை செய்து காட்டுகிறார் சமையல் கலைஞர் ஹேமலதா
சப்ஜி ஜால்ஃபிராஸி
என்னென்ன தேவை?
பீன்ஸ், முட்டைகோஸ், குடைமிளகாய், கேரட் / தலா - 120 கிராம், எண்ணெய் - 20 மி.லி., கொத்தமல்லித் தழை - 15 கிராம், சீரகம் - 5 கிராம், பொடியாக நறுக்கிய இஞ்சி - 10 கிராம், வெங்காயம் - 120 கிராம், மிளகுத் தூள் - 2.5 கிராம், காய்ந்த மிளகாய் - 2, உப்பு - தேவைக்கேற்ப, தக்காளி விழுது - 120 மி.லி.
எப்படிச் செய்வது?
காய்கறிகளைக் கழுவி ஒரே அளவில் வெட்டவும். கடாயில் எண்ணெய் சூடாக்கி, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து வதங்கியதும், நறுக்கிய காய்கறிகள், உப்பு, மிளகுத்தூள், இஞ்சி சேர்த்து வதக்கவும். எல்லாம் சேர்ந்து நன்கு வேகும் வரை குறைந்த தணலில் மூடி வைத்து சமைக்கவும். தக்காளி விழுது சேர்த்து மீண்டும் எல்லாம் ஒன்று சேர்ந்து வேகும் வரை வைத்திருந்து இறக்கி, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.
‘மெனுராணி’ செல்லம் செய்து காட்டிய பாரம்பரிய ரெசிபி
தக்காளிக்காய் கூட்டு
என்னென்ன தேவை?
தக்காளிக்காய் - 1/4 கிலோ, உப்பு - தேவைக்கு, மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்.
வறுத்து அரைக்க:
துருவிய தேங்காய் - 1/2 கப், மிளகு - 1 டீஸ்பூன், தனியா - 1 டேபிள்ஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 1/4 கப். மேற்கண்டவற்றை ஒவ்வொன்றாக எண்ணெயில் வறுத்தப்பின், விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெந்த பருப்பு - 1 கப்(து.பருப்பு அல்லது பாசிப் பருப்பு).
தாளிக்க: கடுகு - 1/2 டீஸ்பூன், கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
தக்காளியைத் துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். பின் உப்பு, மஞ்சள் தூள் போட்டு கொதிக்க விடவும். துவரம் பருப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து கொதிக்க விடவும். கடைசியில் கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் போட்டு நெய்யில் தாளிக்கவும்.
கருத்துகள்