ஆரோக்கியப் பெட்டகம்: பாகற்காய்
ஆரோக்கியப் பெட்டகம்: பாகற்காய்
“கசப்பை சகித்துக் கொண்டு அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் சாதாரண புண்கள் முதல் உயிரைக் கொல்லும் புற்றுநோய் வரை நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும்...’’ என்கிறார் சஞ்சீவனம் ஆயுர்வேத தெரபி மைய மருத்துவர் யாழினி. பாகற்காயின் பயன்களைப் பட்டியலிடுவதோடு, வாய்க்கு ருசியான மூன்று பாகற்காய் ரெசிபிகளையும் செய்து காட்டியிருக்கிறார் அவர்.
‘‘ஆயுர்வேதம் உணவை மருந்தாகக் கருதுகிறது. கசப்புத் தன்மை இருந்தாலும், இதில் பல வகையான இந்திய உணவுகளை சமைக்க முடியும். பாகற்காயில் உடலுக்கு நலன் தரும் பல விஷயங்கள் உள்ளன. இதில் பல்வேறு நலன் தரும் காரணிகள் உள்ளன. உடலுக்கு மட்டுமல்ல, பாகற்காய் சாறு மது அருந்தியவர்கள் விரைவில் போதை தெளிவதற்கும் உதவுகிறது.
பாகற்காய் மிகக் குறைந்த கலோரி கொண்ட காயாகும். இதில் 80% முதல் 90% வரை ஈரப்பதம் இருக்கும். இதில் பல்வேறு வைட்டமின்கள் உள்ளன. அதாவது, பி1, பி2, பி3, பி5, பி 6, சி, கனிமங்களான பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், ஃபோலேட், துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட தாது சத்துகளும் அடங்கியுள்ளன. இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. பிராக்கோலியில் உள்ள பீட்டா கரோட்டின் அளவைக் காட்டிலும் இதில் இரு மடங்கு உள்ளது. கீரையில் உள்ளதைக் காட்டிலும் இரு மடங்கு கால்சியம் இதில் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் அளவைப் போல இரு மடங்கு இதில் உள்ளது.
ஆயுர்வேதத்தின் தந்தை என்றழைக்கப்படும் சரக்கா, சமஸ்கிருதத்தில் காரவெள்ளா எனப்படும் பாகற்காயை, அதிக அளவு கசப்பு உள்ள பொருட்கள் உள்ளடக்கிய திக்தஸ்கந்தா எனப்படும் பகுதியில் வகைப்படுத்தி உள்ளார். பாகற்காயில் உள்ள பிரதான பொருட்களை ஆயுர்வேதம் பின்வரும் வகையில் வகைப்படுத்துகிறது.
• ரசா (சுவை): திக்தா (கசப்பு) மற்றும் கடு (பூஞ்சை).
• குணம் (தரம்): லகு (லேசான) மற்றும் ருக்ஷா (காய்ந்த).
• விபகம் (ஜீரணத்தின் போது அறியப்படும் சுவை) கடு (பூஞ்சை).
என்ன இருக்கிறது? (100 கிராமில்)
ஆற்றல் - 17 கிலோ கலோரிகள், கார்போஹைட்ரேட் - 3.70 கிராம், புரதம் - 1.00 கிராம், மொத்த கொழுப்பு - 0.17 கிராம், கொலஸ்ட்ரால் - 0, நார்ச்சத்து - 2.80 கிராம், ஃபோலேட் - 72 மியூஜி, நியாசின் - 0.400 மி.கி., ரிபோஃப்ளேவின் - 0.040 மி.கி., தையமின் - 0.040 மி.கி., வைட்டமின் ஏ - 471 மிஹி, வைட்டமின் சி - 84 மி.கி., சோடியம் - 5 மி.கி., பொட்டாசியம் - 296 மி.கி., கால்சியம் - 19 மி.கி., தாமிரம் - 0.034 மி.கி., இரும்பு - 0.43 மி.கி., மக்னீசியம் - 17 மி.கி., மாங்கனீசு - 0.089 மி.கி., துத்தநாகம் - 0.80 மி.கி.
பாகற்காய் இயற்கையான மருந்துப் பொருளாகும். இது கபம் மற்றும் பித்தத்தை கட்டுப்படுத்தக் கூடியது. பாகற்காய் குடல் புழுக்களை நீக்கிவிடும் என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு. இது மலச்சிக்கலைப் போக்கக் கூடியது. பாரம்பரிய மருத்துவத்தில் இது காய்ச்சல், தீப்புண், தீரா இருமல், வலியுடன் கூடிய மாதவிடாய் ஆகியவற்றை குணப்படுத்த அளிக்கப்பட்டது.
இதில் உள்ள கசப்புப் பகுதி தலையில் பொடுகு வருவதைத் தடுப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இது கண் கோளாறுகளைக் குணப்படுத்தவும் உதவுகிறது. அதற்கு இதில் உள்ள பீட்டா கரோட்டின் உதவி புரிகிறது. வாய்ப்புண்ணுக்கு இது மிகச் சிறந்த மருந்தாகும். ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சரும நோய்களுக்கு மிகச் சிறந்த நிவாரணி. தோல் வியாதிகளையும் குணப்படுத்தக் கூடியது.
எக்ஸிமா மற்றும் சோரியாஸிஸ் எனப்படும் நாள்பட்ட தோல் வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. சருமம் சுருங்குவதைத் தடுக்கும் திறன் இதற்கு உண்டு. அத்துடன் சருமத்துக்கு பளபளப்பையும் அளிக்கக்கூடியது. பாகற்காய் பசியைத் தூண்டக் கூடியது. மூல நோயால் அவதிப்படுபவர்கள் பாகற்காய் சாறு குடித்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும். மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் சக்தி பாகற்காய்க்கு உண்டு. மேலும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும் சக்தியும் இதற்கு உண்டு.எடை குறைக்க விரும்புவோர் இதைச் சாப்பிடலாம். உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும்.
இது மார்பு புற்றுநோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாகும். பாகற்காய் சாறு புற்றுநோய் செல்கள் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும். இதில் உள்ள சத்து புற்றுநோய் செல்களை அழித்துவிடும். பாகற்காய் மட்டுமல்ல, அதன் இலையும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த பலனளிக்கக் கூடிய பொருட்களை உள்ளடக்கியது. முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த பலன் அளிக்கக் கூடியது. பாகற்காய் சாறை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைக்கும்.
பொதுவாக நாம் சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச் சத்துகள் உள்ளன. இந்த கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச் சத்தானது சிறு சிறு பகுதிகளாகப் பிரிந்து குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலக்கிறது. பாகற்காய் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைப்பதால் அதன் தொடர்ச்சியாக பிற என்ஸைம்களின் தன்மை மாறுகிறது. பாகற் பழத்தில் உள்ள விதையில் பாலிபெப்டைட்பி உள்ளது. இது பொவைன் இன்சுலினுக்கு இணையானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த பாலிபெப்டைட்பி ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் தன்மை கொண்டது.
எச்சரிக்கை
உடலில் எந்த ஒரு பொருளும் அளவுக்கு அதிகமாக சேர்வது நல்லதல்ல. உரிய மருத்துவர் ஆலோசனை பெறாமல் எதையும் பரிசோதித்து பார்க்கக் கூடாது. குறிப்பாக சுயமாக மருத்துவம் செய்து கொள்வதாகக் கருதி அளவுக்கு அதிகமாக பாகற்காய் மற்றும் பாகற்காய் சாறு அல்லது பாகற்காய் சார்ந்த பொருட்களை சாப்பிடுவது ஹைபோகிளைசீமியாவை ஏற்படுத்தும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் மருந்து சாப்பிடும்போது இதை அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. அதேபோல கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பால் புகட்டும் தாய்மார்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பாகற்காயை சாப்பிட வேண்டும். அதுவும் அளவுக்கு அதிகமாக சாப்பிடவே கூடாது. ஒட்டுமொத்தமாக பாகற்காய் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் சக்தி கொண்டது.
மருந்தாகவும் பயன்படுத்தலாம்...
ஒரு அவுன்ஸ் பாகற்காய் சாறில் இரண்டு சிட்டிகை வறுத்த சீரகம் சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டால் நாள்பட்ட காய்ச்சல் தீரும்.பாகற்காய் இலையிலிருந்து சாறு எடுத்து வேனல் கொப்புளத்தின் மீது போட்டால், சருமம் மிருதுவாகி 3 நாளில் குணமேற்படும். ஒரு அவுன்ஸ் பாகற்காய் சாறு, அரை தேக்கரண்டி வெந்தயப் பொடி, இரண்டு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து சாப்பிட்டால் அது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும்.
இதை காலையில் வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட வேண்டும். பி.கு: நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் இதைச் சாப்பிடும் முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். ஒரு டேபிள்ஸ்பூன் பாகற்காய் சாறு இரண்டு வேளை சாப்பிட்டால் மூலத்திலிருந்து ரத்தம் வெளியேறுவது கட்டுப்படும். பாகற்காய் இலைச் சாற்றை வாய்ப் புண் மற்றும் கொப்புளத்தின் மீது தடவினால் உடனடியாக குணம் கிடைக்கும்.
நல்ல பாகற்காயை தேர்வு செய்வது எப்படி?
பாகற்காய் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நீளமானதாகவும் மற்றும் கரும் பச்சை நிறத்தில் சிறிய அளவிலும் கிடைக்கிறது. பாகற்காயை வாங்கும் முன்பு அது பசுமையானதாக, இளசாக, கரும் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். அதில் வெடிப்புகள் இருக்கக் கூடாது...
பாகற்காய் பச்சடி
என்னென்ன தேவை?
பாகற்காய் - 1 கிலோ, பச்சை மிளகாய் - 5 கிராம், இஞ்சி - 5 கிராம், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப, தண்ணீர் - 125 மி.லி., தயிர் - 750 மி.லி., தேங்காய் விழுது - 100 கிராம், தேங்காய் எண்ணெய் - 5 மி.லி., சிவப்பரிசி - 5 கிராம்.
எப்படிச் செய்வது?
பாகற்காயை சின்னத் துண்டுகளாக நறுக்கவும். தண்ணீரில் நறுக்கிய பாகற்காய், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வேக விடவும். தண்ணீர் வற்றும் வரை வைத்திருக்கவும். தயிர் மற்றும் தேங்காய் விழுது சேர்க்கவும். கடைசி யில் தேங்காய் எண்ணெயில் சிவப்பரிசியையும் கறிவேப்பிலையையும் தாளித்துக் கொட்டிப் பரிமாறவும்.
பாகற்காய் தீயல்
என்னென்ன தேவை?
பாகற்காய் - அரை கிலோ, பச்சை மிளகாய் - 5 கிராம், இஞ்சி - 5 கிராம், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப, தண்ணீர் - 100 மி.லி., வெல்லம் - 100 கிராம், தேங்காய்த் துருவல் - 2 கப், தேங்காய் எண்ணெய் - 25 மி.லி., சிவப்பரிசி - இரண்டரை கிராம், எலுமிச்சைச்சாறு - ஒன்றரை டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
தேங்காய்த் துருவலை தேங்காய் எண்ணெயில் பொன்னிறத்துக்கு வதக்கவும். பாகற்காயை நீளமான, மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். வதக்கிய தேங்காயை விழுதாக அரைக்கவும். தண்ணீரில் பாகற்காய் துண்டுகள், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் சேர்த்து வேகவிடவும். தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லத்தைப் பொடித்துச் சேர்க்கவும். தேங்காய் விழுது சேர்க்கவும். கடைசியாக எலுமிச்சைச்சாறு சேர்த்து எல்லாம் கெட்டியாக வரும் வரை வைத்திருக்கவும். சிவப்பரிசி மற்றும் கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.
பாகற்காய் ஜூஸ்
என்னென்ன தேவை?
பாகற்காய் - 200 கிராம், உப்பு - தேவைக்கேற்ப, தண்ணீர் - 150 மி.லி.
எப்படிச் செய்வது?
பாகற்காயை சுத்தம் செய்து, விதைகளை நீக்கவும். சின்னத் துண்டுகளாக நறுக்கி, உப்பும் தேவையான தண்ணீரும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்ததை வடிகட்டி, குளிர வைத்துப் பரிமாறவும்.
கருத்துகள்